பேராசிரியர் ஜனகராஜன் நேர்காணல்: நரேஷ்
சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் என்றால் அனைத்து ஊடகங்களும் சென்று சேரும் இடம் பேராசிரியர் ஜனகராஜனின் இல்லம். நீரியல் நிபுணரான அவரும் ஒவ்வொரு வருடமும் எல்லா ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார். கடந்த ஒன்பது வருடங்களில் அவரது பேட்டி இல்லாத தண்ணீர்ப் பஞ்சப் பிரச்சினைக் காணொலிகள் மிகவும் குறைவு. இந்த வருடமும் விதிவிலக்கல்ல. அவரும் சலிக்காமல் பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இருந்தும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.
அடுத்த வருடம் உங்களை யாரும் பேட்டி எடுக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன்.
“ஒவ்வொரு வருஷமும் இதே பிரச்சினையைப் பேசிப் பேசி எனக்கே சலிப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்சு சென்னைக்குத் தண்ணீர் பிரச்சினைனு 20 வருஷமா பேசிக்கிட்டு இருக்கோம். இத்தனை வருஷத்துல அதுக்கு ஒரு நீடித்த, நிலைத்த Sustainable solution கண்டுபிடிச்சிருக்கோமானா இல்லைனுதான் சொல்லணும். நாம பேசிட்டேதான் இருக்கோம். தண்ணீர் பிரச்சினை வரும்போதெல்லாம் எல்லா மீடியாக்களும் பத்திரிகைகளும் டிவி சேனல்களும் சரி பேட்டி எடுக்க வந்திடுவாங்க. நானும் ஒவ்வொரு வருஷமும் சொன்னதையேதான் சொல்லிட்டிருக்கேன். மாத்தி வேற ஒண்ணு சொல்லலாம்னு பாத்தா, அப்படி சொல்லவும் முடியல. ஏன்னா பிரச்சினை ஒண்ணுதானே? புதுசா என்ன சொல்ல முடியும்? தீர்வுகளை மட்டும் புதுசு புதுசா சொல்லிக்கிட்டிருக்கேன். ஆனா, பிரயோஜனம் இருக்கிற மாதிரி தெரியல.”
**இந்தப் பேட்டியில் இதைப் பேசி முடித்துவிடுங்கள். அடுத்து இதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை என்பதைப் போல பிரச்சினையை விளக்கிவிடுங்கள்…**
1991இல் ஆரம்பிச்சது இந்தப் பிரச்சினை. அப்போ இருந்து சென்னையோட மக்கள்தொகை வரம்பில்லாம பெருக ஆரம்பிச்சது. Demographic growthனு சொல்லுவோம் இல்லையா? அது சரிவிகிதமா இல்ல. சென்னையில வருடா வருடம் புதுக்கூட்டம் வந்துட்டே இருக்கு. சென்னைக்கு உருவாகியிருக்கிறது ‘Population Pressure’. இந்த அழுத்தம் சென்னையில ரொம்ப அதிகம். சென்னை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளோட மக்கள் தொகை என்பது ஒரு கோடியைத் தாண்டிருச்சு. இந்த மக்கள் தொகைக்குத் தகுந்த மாற்றங்களை நாம செய்துட்டு வர்றோமான்னா, இல்லவே இல்ல. அதுதான் பிரச்சினை. இன்னமும் அதே நான்கு நீராதாரங்களை நம்பித்தான் இருக்கோம். ரெட் ஹில்ஸ், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகியவற்றை விடுத்தா நமக்கு வேற ஆதாரமே இல்ல! இதைத் தவிர வேற என்ன செய்யறோம்? நிலத்தடி நீரை உறிஞ்சுறோம். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துறோம். கூட்டுக் குடிநீர் திட்டம்னு மத்த ஊர்களோட தண்ணீரைத் திருடிப் பயன்படுத்துறோம்.
இங்க நாம புரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கு. மேற்குறிப்பிட்ட நீராதாரங்களும் திட்டங்களும் மெட்ரோ வாட்டர் டிபார்ட்மெண்டுக்குச் சொந்தமானது. தனியார்களுக்கு இதுல வேலை கிடையாது. மேற்குறிப்பிட்டவை இல்லாம அரசாங்கம் பயன்படுத்துற இன்னொரு கேவலமான விஷயம், கல் குவாரிகள்ல இருக்க நீரை கொண்டுவர்றது. மழை பேஞ்சு கல்குவாரிகள்ல அவ்ளோ தண்ணி நிக்குது. அதையே ஏன் நகரத்துக்குள்ள இயற்கையா இருக்க நீராதாரங்கள்ல சேமிக்க முடியல? இன்னிக்கு சென்னயோட குடிநீர் தேவைங்கிறது, ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர். நல்ல நீர் வரத்து இருக்குற காலங்கள்லகூட மெட்ரோ டிபார்ட்மெண்ட் நமக்கு கொடுக்குறது 650ல இருந்து 750 மில்லியன் லிட்டர் நீர்தான். மீதம் இருக்கும் தேவைகளுக்கான நீர் நமக்கு வெளியேயிருந்துதான் வருது.
**வெளியேயிருந்துன்னா எங்கிருந்து?**
தண்ணீர் டேங்குகள் மூலமாகத்தான். இன்னிக்கு நிலவரப்படி மெட்ரோ டிபார்ட்மெண்ட்கிட்ட மட்டும் 9,000 தண்ணீர் டேங்குகள் இருக்கு. ஒவ்வொரு டேங்கும் சராசரியா 10,000 – 12,000 லிட்டர் நீரை எடுத்துட்டு வருது. மெட்ரோ வாட்டர் கொடுக்கல் வாங்கல் என்பது பொதுமக்களுக்கு மட்டும்தான். இதைத் தவிர கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி பார்க்குகள், விளையாட்டு அரங்கங்கள்னு எக்கச்சக்கமானவர்கள் தனியா ஒரு தண்ணீர் ராஜ்ஜியமே நடத்திட்டு வர்றாங்க. அவங்க சார்பா சென்னையில 8,000இல் இருந்து 10,000 டேங்கர் லாரிகள் செயல்பட்டுவருது. அவங்க எங்கிருந்து தண்ணீர் எடுத்துட்டு வர்றாங்க? மெட்ரோ டிபார்ட்மெண்டுக்குத் தெரியாத பெரிய Reservoir ஏதும் இருக்கா என்ன? அதெல்லாம் இல்ல. அவங்க எடுத்து வருவது நிலத்தடி நீர். சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கிற நிலத்தடி நீரை 24 நேரமும் எந்தத் தடையும் இல்லாம எடுத்துப் பயன்படுத்திட்டு வர்றோம். அதை எடுத்துட்டே இருக்கோமே தவிர, திரும்ப செலுத்துறோமா (Recharge)?
நமக்கு முன்னாடி இருக்கும் மிகப்பெரிய மூன்று கேள்விகள் இவைதான்.
1) வருங்கால நீர் தேவைகளுக்கு நம்மக்கிட்ட என்ன வழி இருக்கு?
2) நிகழ்கால நீர் பிரச்சினைக்மகு என்ன மாதிரியான தீர்வுகள் முன்வைக்கப்படுது?
3) இயற்கை வழங்கிய நீராதாரங்களை நாம ஏன் எப்படி வெச்சிருக்கோம்?
இது எதுக்குமே நம்மக்கிட்ட பதில் இல்ல, தரவுகளும் இல்ல. இவை முறையா இருந்தாலே நமக்கு உண்மை நிலவரம் புரிஞ்சிடும்.”
**அதென்ன உண்மை நிலவரம்?**
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ‘Water deficit region’ ஆக இருக்க முடியாது என்பதுதான் அந்த உண்மை! இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் சீரழிவு. ஏன்னா இங்க அவ்ளோ மழை பெய்யுது. இந்த பகுதில நமக்குச் சராசரியா ஒவ்வொரு வருஷமும் 1350 மிமீ – 1400 மிமீ மழை கிடைக்குது. கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எல்லாம் விட நம்முடைய சராசரி மழை அளவு அதிகம். ஆனா, அந்த மாநிலங்கள்ல இந்த அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் வரலை. இந்தியாவிலேயே தாகம் மிகுந்த மாநகரமா சென்னை மாறுனது இயற்கையான விளைவு இல்லையே. இப்போ நாம அனுபவிச்சிட்டு இருப்பது மனிதப் பிழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சீரழிவு.
சென்னை என்பதே ஒரு டெல்டாதான். ஒரு 350 வருடங்களுக்குள்ளாகத்தான் இது நகரமாகியிருக்கு. வடிஞ்சு வருகிற நீரெல்லாம் அப்படியே இந்த நிலத்துல தங்கி இறங்கிடும். அவ்ளோ வளமான சதுப்பு நிலப்பரப்பைப் பூசி மெழுகிட்டோம். பள்ளிக்கரணை ஒரு Ecological Hotspot. 7,000 ஹெக்டேர்ல இருந்த நிலம், இப்போ 2,000 ஹெக்டேருக்கும் கீழ வந்திருச்சு. சென்னை நகரத்துக்கு உள்ளே இருந்த 350க்கும் மேற்பட்ட ஏரிகளைக் காணோம்.
இதெல்லாம் பத்தாதுன்னு, இப்போ மிகப்பெரிய ஆபத்து ஒண்ணும் சேர்ந்திருக்கு. சென்னை மெட்ரோபாலிட்டன் ஏரியாவை 8,800 சதுர கிலோமீட்டரா விரிவுபடுத்தப்போறாங்க. காஞ்சிபுரம் மாவட்டமும், திருவள்ளூர் மாவட்டமும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்பட இருக்கின்றன. இந்த இடங்களை நகரக் கட்டமைப்புக்குள்ள கொண்டுவரும்போது, அங்கிருக்கும் நீர்நிலைகளுக்கு என்ன ஆகும்னு நம்மால கணிக்கக்கூட முடியாது. விரிவாக்கம் செய்யப்போற இந்தப் பகுதிகள்ல மட்டும் 4,000 ஏரிகள் இருக்கு. இவையெல்லாம் என்ன ஆகப்போகுதுங்கிறதுக்கு நம்மகிட்ட பதில் இருக்கா? இல்ல இவற்றுக்கு ஒண்ணு ஆகாதுன்னு சொல்ல உத்தரவாதம் இருக்கா?
இவைதான் இப்போதிருக்கும் பிரச்சினைகளோட எளிமையான விளக்கம். வரப்போற பிரச்சினைகள் பத்தியும் சொல்லிட்டேன். ஆனா, அந்த பிரச்சினைகளோட விளைவுகள் பத்தி யாராலேயும் சொல்ல முடியாது.
(பேட்டியின் தொடர்ச்சி நாளை…)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”