சென்னை திரைப்பட விழா: கேட்டீயும் தமிழ்ச் சமூகமும்!

Published On:

| By Balaji

15ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் உலக நாடுகளிலிருந்து சுமார் 2௦௦ திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன. அதில் தேவி பாலா திரையரங்கில் கடந்த 18ஆம் தேதி திரையிடப்பட்ட அமெரிக்கத் திரைப்படம் ‘கேட்டீ சேஸ் குட்பை’ (Katie Says Goodbye).

*(படம் : Katie Says Goodbye)*

மெக்சிகோவில் வாழ்பவள் கேட்டீ என்ற ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப பெண். மேபெல்லஸ் சாலையில் இரவு உணவுக் கடையில் வேலை செய்யும் அவள் ரொம்ப அன்பானவள். அனைவரிடலும் பண்பாக நடந்துகொள்பவள். அவளுடைய அம்மா மிரெய்ல்லே எநோஸ் பொறுப்பில்லாமல் இருப்பதால் கேட்டீ தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாள்.

சில நாட்களுக்குப் பிறகு கேட்டீ மெக்சிகோ நகரை விட்டு சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்கு அழகுக் கலை கற்றுக்கொள்ள செல்கிறாள். ஒரு கட்டத்தில் அவளது படிப்புச் செலவுக்குப் பணம் இல்லாததால் பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள். அதிலும் நாகரீகமான நபர்களுடன் மட்டுமே அவள் பாலியல் தொழிலாளியாகச் செயல்படுகிறாள். அப்போதுதான் தன் காதலன் ப்ருனோவைச் சந்திக்கிறாள். அதன் பிறகு அவள் தன் தொழிலை விட்டுவிட்டுக் காதலனைக் கரம் பிடிப்பதே மீதிக்கதை.

**சோதனைகளின் நடுவே மகிழ்ச்சி**

*(படம் : Katie Says Goodbye)*

கேட்டீக்கு அவள் வாழ்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவளை இந்த உலகத்திலேயே சந்தோஷமான பெண்ணாக, உண்மையானவளாக, அதே சமயத்தில் தைரியமானவளாகவும் காட்டியிருக்கிறது திரைக்கதை. பாலியல் தொழில் புரிவதால் அவளைத் தவறானவளாகச் சித்தரிக்காத திரைக்கதையில், அவளுடைய நேர்மையும் அன்பும் மட்டுமே பிரதிபலிக்கின்றன.

இது போன்ற திரைக்கதையைத் தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் கையாண்டிருக்கிறனர். ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அவள் பாலியல் தொழிலாளி என்று தெரிந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதே பெரும்பாலும் தீர்வாக இருக்கும். உதாரணமாக பாலச்சந்தரின் அரங்கேற்றம் [1973] அவரின் புதுமையான படங்களுக்கு அச்சாரமாக விளங்கிற்று. ஒரு சிறு கிராமத்தின் ஆச்சாரமான வைதீக பிராமணக் குடும்பத்தின் மூத்த மகள் லலிதாவாக பிரமிளா நடித்திருந்தார். அவள் மீது வீட்டுச் சுமை அதிகமாக ஏற்றப்பட, அதைச் சமாளிக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். தம்பி கமல்ஹாசனை டாக்டர் ஆக்குகிறாள். எல்லாத் தங்கைகளுக்கும் நல்ல மணவாழ்வை அமைத்துத் தருகிறாள். ஆனால் அவள் முடிவு என்ன ஆகிறது?

*(படம் : அரங்கேற்றம்)*

அவள் பாலியல் தொழிலாளி எனத் தெரிய வருகையில் அந்தக் காசிலா உடல் வளர்த்தோம் என்று யாருமே உயிரை மாய்த்துக்கொள்வதில்லை, மாறாக அம்பாள் எனப் போற்றிய அவளைத்தான் ஒதுக்கிவைக்கின்றனர்.

அதே ஊரின் வசித்த செந்தாமரையும், அவரின் ராணுவ வீரனான மகன் சிவகுமாரும் மிகுந்த புரட்சி எண்ணம் கொண்டு அவளை ஆதரிக்கிறார்கள். செந்தாமரை லலிதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள முன்வருவார். கே.பாலச்சந்தர் அதன் பின் எடுத்த பெண்ணியம் பேசும் சோதனை முயற்சிகளுக்குத் தொடக்கமாகவும் அமைந்தது இந்தப் படம். பாலியல் தொழிலாளியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாலே ஒருவர் சமூகப் போராளியாகவும், புரட்சிக்காரனாகவுமே இருக்க வேண்டும் என்பதுதான் தமிழ்ப் படத்தின் நிலை.

**தமிழ்ச் சமூகத்தின் யதார்த்தம்**

பாலியல் தொழிலாளி ஒதுக்கப்படுவதும், சமூகப் போராளிகள் மட்டுமே அவளுக்கு ஆதரவளிப்பதும் தமிழ்ப் படங்களின் யதார்த்தம் என்பதைவிடவும் தமிழ்ச் சமூகத்தின் யதார்த்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பாலசந்தர் தமிழ்ச் சமூகத்தைத்தான் பிரதிபலித்திருக்கிறார். இன்றுவரை இந்த யதார்த்தத்தைத் தமிழ்ச் சமூகமோ தமிழ் சினிமாவோ மாற்றியதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் கேட்டீ சேஸ் குட்பை முக்கியத்துவம் பெறுகிறது.

*(படம் : Katie Says Goodbye)*

வங்காளத்தில் சத்யஜித் ரே வின் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜன ஆரண்யா. இப்படத்தில் பாலியல் தொழிலாளியின் இன்னொரு பக்கத்தினை அழகாகக் காட்டியிருப்பார் இயக்குநர்.

கேட்டீ சேஸ் குட்பை படத்தின் காட்சிகளை மிக நேர்த்தியாக அமைத்திருக்கிறார் இயக்குநர் வேய்னே ராபர்ட். படம் முழுவதுமே அழகான சாலைகள், ரம்மியமான மேகமூட்டமுள்ள வானம் எனக் காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால் படத்தின் திரைக்கதையை இன்னும்கூட சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கலாம்.

**- மணிக்கொடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share