�
தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இரண்டு வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாமல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் மீண்டும் சென்னை அணி ஐ.பி.எல் போட்டியில் தொடரும் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் நேற்று (ஜூலை 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.ஏன்.பி.எல் இரண்டாவது சீசன் தொடக்க விழாவில் விக்கெட் கீப்பர் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.
பவுலிங் எந்திரம் மூலம், தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டது. இதில் தோனி தொடர்ச்சியாக 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஹைடன், பத்ரிநாத், அனிருதா தலா 2 சிக்ஸர் அடித்தனர். எல்.பாலாஜி ஒரு சிக்ஸர் அடித்தார். மோகித் சர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்ஸர் அடிக்கவில்லை.
இந்த போட்டி முடிவடைந்த பின்னர் தோனி அளித்த பேட்டியில்
**சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரு ஆண்டுக்கு முன்பு சேப்பாக்கத்தில் விளையாடினேன். மீண்டும் இங்கு பேட்டிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை அணி 2 ஆண்டாக விளையாடவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவும், எண்ணிக்கையும் குறையவில்லை. இந்திய அணிக்காக ஆடும்போதும், சென்னை அணிக்காக விளையாடும் போதும் சென்னை ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து இருக்கிறார்கள்** எனத் தெரிவித்தார்.�,