’செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்…. உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்’ என்று வைரமுத்து எழுதிய தத்துவப் பாட்டின் முதல் பாதி இப்போது சென்னைக்கு வருத்தமான பொருத்தமாகியிருக்கிறது.
பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சென்னையின் சாலைகளில் திடீர் திடீரென சாலைப் பிளவுண்டு உள்வாங்கி பள்ளம் ஏற்படுவதால், கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது சென்னையின் மிகப்பெரிய பாதுகாப்புப் பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம் என்றும் எச்சரிக்கைக் குரல்கள் கேட்கின்றன.
இன்று (ஜூன் 13) வியாழக் கிழமை அதிகாலை சென்னை அடையாறு- கிண்டி பட்டேல் சாலை- ராஜீவ் காந்தி ஐடி காரிடார் சந்திப்பின் மையமான மத்திய கைலாஷ் சிக்னலில் திடீரென சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் போக்குவரத்துப் போலீசார் அந்தப் பள்ளத்தைச் சுற்றி பேரிகார்டு தடுப்புகள் அமைத்து மத்திய கைலாஷ் சிக்னல் வழியாக கிண்டி செல்லும் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கவில்லை. அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் பேருந்துகள் மத்திய கைலாஷ் சிக்னலில் இருந்து இடதுபுறமாக ராஜீவ் காந்தி ஐடி சாலையில் திருப்பிவிடப்பட்டன.
ஆறு அடி ஆழம் கொண்ட இந்தப் பள்ளம் ஏற்பட்டது ஏன் என்று போக்குவரத்துக் காவலர்கள் தரப்பில் கேட்டபோது,“பாதாள சாக்கடை அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்த பள்ளத்தில் கழிவு நீர் கசிவதும் தெரிகிறது” என்கிறார்கள்.
அதேநேரம் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்தான் இந்த திடீர் சாலைப் பள்ளங்களுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை செய்துவருகிறது. மெட்ரோ அதிகாரிகள் தரப்பில், “இதுபோன்ற பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பள்ளத்துக்கும் மெட்ரோ பணிகள்தான் காரணமா என்பதை நாங்கள் ஆராய்ந்துதான் சொல்ல வேண்டும்” என்கிறார்கள்.
2015 நவம்பர் மாதம் இதேபோல மத்திய கைலாஷ் சிக்னலில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போதைய பெருமழையால் பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். 2017 ல் ஒருமுறை சர்ச் பார்க் பள்ளி அருகே சாலைப் பள்ளம் ஏற்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு 2018 ஜனவரி மாதம் மெட்ரோ ரயில் பணிகளால் சென்னை அண்ணா சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன் இதே மத்திய கைலாஷ் சிக்னலில் அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்துக்கு முன் பக்கம் ஒரு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்போது அந்தப் பள்ளத்துக்கு சற்று தள்ளி மீண்டும் ஒரு சாலைப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடியில் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சாலைப் பள்ளங்கள் அவ்வப்போது ஏற்படுவது சென்னையின் பாதுகாப்புக்கே சவாலாக மாறும் அபாயமும் இருக்கிறது.
சென்னை நிலத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை உரிய நிபுணர்கள் கொண்டு ஆராய்ந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஒரு பள்ளம், சில மணி நேர டிராபிக் என்று இப்பிரச்சினையை அணுகாமல், சென்னையின் பாதுகாப்பு என்ற கோணத்தில் இதை அரசு ஆழமாக அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”