மதரா
பழைய சென்னைக்குள் ஒரு பயணம் – 11
சென்னை என்ற பெரு நிலத்தில் வந்து குடியேறியவர்களை சென்னை கைப்பிடித்து தூக்கிவிட்டது போல வந்தவர்களும் மாநகரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளனர். ஊர் கூடி இழுத்த தேர்தான் சென்னையின் இன்றைய வளர்ச்சி. பார்சிகள் சென்னையில் குடியேறிய பின்னணியை சனிக்கிழமைப் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலத்துக்குத் தொடர்பில்லாத மதம், மொழியைக் கொண்டிருந்தாலும் பார்சிகளைச் சென்னை அரவணைத்துக்கொண்டது. வணிகத்தில் முன்னேற்றத்தைக் கொடுத்த சென்னையை அவர்களும் இறுகப் பற்றிக்கொண்டனர். வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ், பார்சிகளின் வரலாற்றில் மிக முக்கியமானவர் மேரி கிளப்வாலா ஜாதவ் எனக்கூறி அவரது வரலாற்றைப் பகிர்ந்துகொண்டார். பார்சிகளுக்கான நெருப்பு கோவிலைக் கட்டிக்கொடுத்த பெரோஸ் கிளப்வாலா குறித்து பார்த்தோம். அவரது மகன் நோகி கிளப்வாலா ஜாதவ்வை திருமணம் செய்தவர் மேரி கிளப்வாலா ஜாதவ். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய மூன்று விருதுகளையும் பெற்ற ஒரே பெண்மணி இவர் தான்.
1909ஆம் ஆண்டு பிறந்த மேரி கிளப்வாலா சமூக சேவையில் சிறுவயதுமுதலே ஆர்வம் கொண்டு செயல்பட்டார். கில்டு ஆஃப் சர்வீஸ் என்ற இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். தனது மகனுக்கு நான்கு வயதான போது தனது கணவரை இழந்தார். அந்த துக்கத்தில் சோர்ந்து அடங்கிவிடாமல் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுடத்தொடங்கினார். அடையாறு சேவா சமாஜம், கீழ்ப்பாக்கம் பால விஹார், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் ஆகியவற்றைத் தொடங்கி மக்கள் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவ வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தார். உணவளிப்பது, அவர்களது குடும்பங்களுக்கு கடிதம் எழுதி எடுத்துச்செல்வது, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான மத போதகர்களை அழைத்துவந்து இறை வேண்டலில் ஈடுபடுத்துவது, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது என பல பணிகளை மேற்கொண்டார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஆர்வம் கொண்ட பல பெண்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு குழுவாகச் செயல்பட்டுள்ளார். இதனாலே ஜெனரல் கரியப்பா இவரை ‘டார்லிங் ஆஃப் இந்தியன் ஆர்மி’ என அழைத்துள்ளார்.
1974ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக இவரது மகனும் மரணமடைந்தார். தனக்கு ஏற்பட்ட எந்த வலிகளையும் வேதனைகளையும் தனது பணிகளைத் தடுக்க அவர் விட்டதே இல்லை. அவரது மகனின் மரணம் ஏற்பட்ட போதும் அதுதான் நிகழ்ந்தது. தொடர்ந்து தம் மக்களுக்காக ராயபுரம் நெருப்புக் கோவிலுக்கு அருகில் உள்ள அஞ்சுமன் பாக் என்ற சத்திரத்தில் 1975ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தை கட்டும் பணிகளை மேற்கொண்டார். கட்டிடப் பணி முடிவடைவதற்குள் மேரி ஜாதவ் கிளப்வாலா தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.
மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்ட மேரி கிளப்வாலாவின் வேகத்தை மரணத்தைத் தவிர வேறு யாராலும் நிறுத்த முடியவில்லை. ஒரு பெண்ணாக பல போராட்டங்களைக் கடந்து அவர் ஆற்றியுள்ள பணி உண்மையில் அதிசய வரலாறு தான்.
*(மேரி கிளப்வாலா ஜாதவ் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய காணொளியைக் காண கிழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்)*
[சென்னையில் மக்கள் பணியாற்றிய பார்சி இனப் பெண்!](https://www.youtube.com/watch?v=23cjU8cTk1I&feature=youtu.be)
[பழைய சென்னைக்குள் ஒரு பயணம்- முன்னோட்டம்](https://minnambalam.com/k/2018/08/22/110)
[முன்னோட்டம்- காணொளி](https://www.youtube.com/watch?v=i6SEarF-x2s)
[ராயபுரம் ரயில் நிலையம்](https://minnambalam.com/k/2018/08/23/86)
[ராயபுரம்: இந்த பெயர் வந்தது எப்படி?](https://minnambalam.com/k/2018/08/24/87)
[மனிதம் போற்றும் ரெய்னி மருத்துவமனை!](https://minnambalam.com/k/2018/08/25/74)
[ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட்!](https://minnambalam.com/k/2018/08/26/87)
[திமுக: அடிக்கல் நாட்டப்பட்ட இடம்!](https://www.youtube.com/watch?v=FHdd6JJFdDo&feature=youtu.be)
[மாநகரின் முதல் கருணை இல்லம்!](https://www.youtube.com/watch?v=FtEkr0YjBf8)
[முடிவை எதிர்நோக்கும் ரயில்வே பிரஸ்!](https://www.youtube.com/watch?v=ETWxxINLa78&feature=youtu.be)
[கணித மேதையை கௌரவப்படுத்தும் ராயபுரம்!](https://www.youtube.com/watch?v=wWNRy10u94A&feature=youtu.be)
[ராயபுரத்தில் விரியும் பார்சிகளின் வரலாறு!](https://www.youtube.com/watch?v=30wTNBdQtkI&feature=youtu.be)�,