சென்னையில் என்கவுன்டர்: பலியான விழுப்புரம் ரவுடி!

Published On:

| By Balaji

சென்னை கொரட்டூரில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், ராஜ்குமார், பூபாலன். இவர்கள் மூவரும் 1996ஆம் ஆண்டிலிருந்து நண்பர்களாகப் பழகிவந்தார்கள்.

ஆரோவில் பகுதி சுற்றுலாத் தலம் என்பதால் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அந்தப்பகுதியில் சில சமூகவிரோதச் செயல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளூரில் அடியாட்கள் தேவைப்பட்டதால் இந்த மூவரையும் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மூவரில் பூபாலன் மட்டும் விலகி நின்றதால், அவரை போலீஸ் இன்ஃபார்மர் என்று கருதி மற்ற இருவரும் ஓரம்கட்டினார்கள்.

அதன் பிறகு ராஜ்குமாரும், மணிகண்டனும் மாமூல் யார் அதிகம் வாங்குவது என்ற தொழில் போட்டியில் பிரிந்து இரு துருவங்களாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

மணிகண்டன், ராஜ்குமார் என இரண்டு குழுக்களுமே கூலிக்காக கொலை செய்துவந்தனர். தொழில் போட்டிகள் அதிகரிக்க இரண்டு குழுவினருக்கும் விரோதமும் வளர்ந்துவந்துள்ளது.

மணிகண்டன் தம்பி ஆறுமுகம், மயிலம் அருகில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியபோது, ராஜ்குமார் தரப்பினர் அவரை கொலை செய்தனர். இதற்குப் பழி தீர்க்க ராஜ்குமார் ஆதரவாளர்களை மூவரைப் போட்டுத்தள்ளினார் மணிகண்டன்.

கடந்த ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் மணிகண்டன் தம்பி ஏழுமலையைக் கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் வைத்திருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால்

மணிகண்டன் தனி மரமாக வாழ்ந்து வந்தார். பின்னர், பிரான்ஸ் குடிமகனான டாக்டர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், மணிகண்டன் திருந்தி வாழப்போகிறேன் என்று விழுப்புரம் எஸ்பி ஆபீஸில் எழுதிக்கொடுத்துவிட்டு வாழ்ந்து வந்தார். இருந்தாலும் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப்போல், அவரது நட்புக் கூட்டத்தினர் விடாமல் பஞ்சாயத்துகளை இழுத்துவந்தனர். இதனால் மணிகண்டனுக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன. நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாகினார் மணிகண்டன்.

இந்த நிலையில்தான் ஒரு முக்கியப் பிரமுகருக்குக் குறிவைத்து மணிகண்டன் சென்னையில் அலைந்துவருகிறார் என்று காவல் துறையில் உள்ள ஒரு முக்கியப் பிரிவு எச்சரிக்கை செய்திருக்கிறது.

விழித்துக்கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல் துறை, அவசரமாக சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பிரபு மற்றும் மூன்று போலீசார் உட்பட ஐந்து பேர் கொண்ட ஒரு தனிப்படையை அமைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தது. இந்த டீம் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தது.

தொழில்நுட்பங்கள் உதவியுடன் விழுப்புரத்திலிருந்து தனிப்படைக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்தன.

அதன்படி கொரட்டூர் பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை நெருங்கிச் சென்றார்கள். நேற்று (செப்டம்பர் 24) மாலை 6.30 அளவில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, மணிகண்டனைப் பிடிக்க முயன்றபோது எதிரிகள்தான் அட்டாக் செய்கிறார்கள் என்று கத்தியால் வெட்டியிருக்கிறார். உடனே அருகிலிருந்த பிரகாஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சில ரவுண்டு சுட்டார். இதனால் குண்டடிபட்டு மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மணிகண்டன் மீது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு வைத்திருந்தது என 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல திருவண்ணாமலை காவல் நிலையம், செஞ்சி, கோட்டக்குப்பம், வானூர், கிளியனூர், திருக்கோவிலூர், மயிலம் காவல் நிலையங்களில் எட்டு வழக்குகளும் உள்ளன.

பொதுவாக முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க சென்றால் இன்ஸ்பெக்டர் தலைமையில்தான் தனிப்படையை அனுப்புவார்கள். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட டிசி அல்லது எஸ்பி உதவியோடு செல்வதுதான் சிறப்பாக இருக்கும். லோக்கல் போலீஸ் மீது நம்பிக்கையில்லாமல் தகவல் சொன்னால் கசிந்துவிடலாம் என்ற சந்தேகத்தில்தான் லோக்கல் போலீஸுக்குச் சொல்லாமல் போவது என்கிறார்கள் அனுபவமிக்க போலீசார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share