சென்னையிலுள்ள ஹோட்டல்களிலும் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Published On:

| By admin

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக கடைகளில் டீ – காபி விலை உயர்ந்தது. டீ விலை 2 ரூபாயும், காபி விலை 3 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இதையடுத்து ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளிலும் இந்த விலையேற்றம் அமல்படுத்தப்படும் சூழ்நிலை சென்னையில் உருவாகியுள்ளது.

சென்னையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 2, 253 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்த கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஹோட்டல் உரிமையாளர்கள் ஏராளமான செலவைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் சொத்துவரியை வெகுவாக உயர்த்தி இருக்கிறார்கள். எனவே இந்தச் சூழலில் ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், அதேவேளை தொழிலும் பாதிக்காதவாறு எந்தெந்த உணவு வகைகளில் எவ்வளவு விலையேற்றம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.

சிறிய ஹோட்டல்களில் உணவுகளின் விலையை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பெரிய ஹோட்டல்களில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாலையோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்களிலும் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விலை உயர்வு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காய்கறி – பழ வகைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலையும் அதிகரிக்க இருப்பது பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் விலை உயர்வு என்னும் அவலநிலைக்கு தமிழக அரசு தீர்வு கட்டினால் மட்டுமே, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share