சென்னைப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்: டீன் மறுப்பு!

public

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதைப் போல, சென்னையில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கர்ப்பமாக இருந்த காலத்தில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக நேற்று (டிசம்பர் 27) புகாரளித்திருந்தார். ஆனால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் இந்தப் புகாரை மறுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பமாக உள்ள பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகச் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கும், கர்ப்பமாக இருந்த காலத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நியூஸ் 7 ஊடகத்திடம் பேசுகையில், “நான் கர்ப்பமாக இருந்தபோது மாங்காடு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஏப்ரல் மாதத்தில், எனக்கு ரத்தசோகை ஏற்பட்டதால் ரத்தம் ஏற்ற வேண்டுமென மாங்காடு அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏப்ரல் 5ஆம் தேதி எனக்கு 2 பாட்டில்கள் ரத்தம் ஏற்றப்பட்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி எனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அப்போது நான் 8 மாதம் கர்ப்பமாக இருந்தேன். எப்படி எனக்கு எச்.ஐ.வி. நோய்த்தொற்று வந்தது எனக்கேட்டபோது ரத்தம் ஏற்றும்போது வந்திருக்கலாம் என்று அலட்சியமாகப் பதில் கூறினார்கள். இந்த 2 மருத்துவமனைகளைத் தவிர நான் வேறெங்கும் சிகிச்சை எடுக்கவில்லை” என்று அழுதுகொண்டே கூறியிருந்தார்.

செப்டம்பர் 15ஆம் தேதி இவருக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. இதுகுறித்து அவர் ஏற்கெனவே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அப்போதே புகார் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரையில் அந்தக் கடிதங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் அப்பெண்ணுக்குப் பாதிப்பு எதுவுமில்லை என்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (டிசம்பர் 28) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பந்தப்பட்ட அப்பெண்ணுக்குச் சிகிச்சையின்போது இங்கு அளிக்கப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று எதுவுமில்லை. அதேபோல மாங்காடு மருத்துவமனையிலும் அப்பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் புகார் குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அப்பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியதற்கான காரணம் என்ன? ரத்த சோகை இருப்பதைக் கண்டறிய செய்யப்பட்ட ரத்த சோதனையின்போதே அப்பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததா இல்லையா? ஏன் அதை மருத்துவமனை நிர்வாகம் சோதனை செய்யவில்லை எனப் பல்வேறு கேள்விகள் இதில் எழுந்துள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *