நரேஷ்
சென்னைக்குச் செய்ய வேண்டியவை – 18
சிங்கப்பூரைப் பல தளங்களில் எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கொள்ளும் நாம், மழைநீர் சேகரிப்பிலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள எண்ணற்றவை இருக்கின்றன. மனிதர்கள் நடக்க என்று தனிப் பாதை அமைப்பதைப் போல, மழைநீர் நீர்நிலைகளைச் சென்றடைவதற்கென்றே தனியாகப் பாதை அமைத்திருக்கிறார்கள். பெய்யும் மழைநீர் வடிந்து வந்து இக்கால்வாய்கள் வழியாக நீர்நிலைகளைச் சென்றடைகிறது. வீதிகளில் பெய்யும் மழைநீர் மட்டுமல்ல; வீடுகளில் பெய்யும் நீரும் இக்கால்வாய்களில் கலக்க சாக்கடையில்லாத தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிங்காரச் சென்னை மாநகரிலோ குடிநீர் குழாயும் சாக்கடை குழாயுமே ஒன்றை ஒன்று உரசிக்கொண்டேதான் ஊர்ந்து செல்லும். அடிக்கடி குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதெல்லாம் அன்றாட நிகழ்வு. ஆனால், மழை நீருக்காகவே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தனித்தனி இணைப்புகள் அமைத்து மிகச்சிறந்த நகர கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது சிங்கப்பூர். இந்தக் [காணொளி](https://youtu.be/mTrA6ryPBqA)யைப் பாருங்கள். எவ்வளவு சீராகச் சேமிக்கப்படுகிறது சிங்கப்பூரின் உயிர்நீர்!
**சென்னையில் சாத்தியமா?**
சிங்கப்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு கட்டமைப்பை சிங்காரச் சென்னையில் உருவாக்க முடியாமா, மக்களின் மனநிலைதான் என்ன என்பதனை அறிய களத்தில் இறங்கினேன். வழக்கம்போல பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது. மக்களின் அலட்சியம்தான் மிகப்பெரிய எதிரி என்பது மீண்டும் ஒருமுறை உணர்த்தப்பட்டது.
ஆனால், ஒரு சில இடங்கள் நள்ளிருளில் அருளப்படும் மின்னல் போன்ற வெளிச்சத்தை வழங்கின. தி.நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கங்கள் இணைந்து சென்னை மாநகராட்சியில் ஒரு முறையீட்டை முன்வைத்தார்கள். அதன்படி, “சென்னையில் மழைநீர் வடிகால்களைச் சீரமைப்பதைக் கைவிட்டுவிட்டு, மழைநீரைத் தேக்கும் உறை கிணறுகள் அமைத்துக்கொடுங்கள்” என்ற முத்தான கருத்துதான் அம்முறையீடு!
வடிகால்கள் தூர்வாரப்படுவது பயனற்றது என்பதாலும், வடிகால்கள் திறந்தவெளி நீர் தேக்க சாக்கடைகளாக இருப்பதாலும், மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகளை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இத்திட்டத்தினை வடிவமைத்துக் கொடுத்தவர், [சென்ற கட்டுரையில்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/10/13) குறிப்பிட்ட மழை மனிதன் சேகர் ராகவன்தான். மக்களின் கோரிக்கையை ஏற்று, முதல் கட்டமாக தியாகராய நகரில் மழைநீர் சேகரிப்புக்கான உறை கிணறுகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்தது. அது இன்றுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் செலவழித்து வடிகால்களைத் தூர்வாருவதை விடுத்து, இத்திட்டத்தை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியிடம் முறையிட்டபோது, ‘முடியாது’ என்ற பதிலை முறையாகச் சொன்னார் மாநகராட்சி துணை ஆணையர் என்.கோவிந்தராவ். “மழைநீர் வடிகால்களை கைவிட்டுவிட்டு, மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மட்டுமே அமைப்பது சாத்தியமில்லை. சாத்தியப்படும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு உறை கிணறுகள் அமைக்கப்படும்” என்றார். ஆனால், உறை கிணறுகள் அமைக்கும் பணி உறைந்துபோயிருக்கிறது.
பெரிய அளவில் செய்ய வேண்டியிருக்கும் இதுபோன்ற செயல்களுக்கு, மக்களின் ஒன்றிணைந்த குரல் வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தால், நிச்சயமாக நிறைவேறக்கூடியத் திட்டம்தான் இது. நலச் சங்கங்கள் ஒன்றிணையவில்லை என்றால் குடியிருப்பில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து நலச் சங்கங்களில் முறையிடுங்கள். நம் தேவைகள் தீர்க்கப்படும் வரை செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. மக்கள் தனித்தனியாகக் குடியிருப்புகளில் செய்ய வேண்டிய சேவைகளும் அலட்சியமாகத் தட்டிக்கழிக்கப்படுகிறது. இவற்றை நாம்தான் முறைப்படுத்த வேண்டும். சென்னை குடிநீர் வாரியக் கணக்குப்படி, சென்னையில் 8 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு உள்ளது. இவை முறையாகப் பராமரிக்கப்படவேண்டும். நிச்சயமாக இது அரசின் வேலை கிடையாது. மக்கள் ஒவ்வொருவரும் மனமுவந்த செய்ய வேண்டிய சேவை. அரசாங்கம்கூட தனது பங்குக்கு, இல்லங்களில் சேகரிக்கப்படும் மழைநீர் குறித்த விழிப்புணர்வை முடிந்தவரை வழங்கி வருகிறது. “பல்வேறு சேலஞ்சுகளில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றுவது போல உங்கள் இல்லங்களில் சிறந்த மழைநீர் கட்டமைப்பைப் பராமரித்து, அவற்றுடன் ஒரு புகைப்படம் எடுத்துப் பதிவிடுங்கள். அவற்றுக்கு நாங்கள் பரிசளிக்கிறோம்” என்கின்றனர் குடிநீர் வாரிய அதிகாரிகள். இதுதவிர மாநகராட்சி சார்பாக, பொறியாளர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள் ஆகியோர் குடியிருப்புகளுக்குச் சென்று வீடு வீடாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பைப் பார்வையிடுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்களுடன் 2,000 அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைச் சீர்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த JICA (Japan International Co-operative Agency) நிறுவனத்துடன் கைகோத்து மழைநீர் சேகரிப்புப் பணிகளில் ஈடுபடவிருக்கிறது சென்னை மாநகராட்சி.
மழைநீர் குறித்த விளக்கமான பாடங்களும், தொழில்நுட்பங்களும், வழிகாட்டிகளும் இத்தொடரின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இனி, எதிர்காலம் மக்களின் மனங்களில்தான் இருக்கிறது. சென்னைக்காக அல்ல, உங்களுக்காக இதைச் செய்யுங்கள்! மனதைத் தட்டியெழுப்பி இந்தச் சின்ன சின்ன செயல்களைச் செய்து முடியுங்கள். வருங்காலம் உங்களை வாழ்த்தும்!
(தீர்வுக்கான தேடல் தொடரும்..!)
முந்தைய கட்டுரை: [கிணறு இல்லையேல் சென்னையில் வாழ்வு இல்லை!](https://edit.wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/10/13)�,”