மருத்துவ மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சென்டாக் விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தும் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜூன் 29ஆம் தேதி கிரண் பேடி தனது டிவிட்டர் பதிவில்,’ புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதில் நடந்துவரும் முறைகேடு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) விசாரணை நடத்தவுள்ளது. சென்டாக் முறைகேடுகள் அனைத்தும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தொடர்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெறவுள்ள சூழ்நிலையில் கோப்புகளில் என்னுடைய வழிகாட்டுதல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிமட்டத்தில் உள்ள அதிகாரிகள் தங்களை தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள் சுயநல சக்திகளுக்கு துணை போகாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் சமதர்ம சமுதாயத்தின்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும். 2ஜி அலைகற்றை, நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றில் அதிகாரிகள் நேர்மையாக தங்கள் கடமையை செய்திருந்தால் ஊழல்கள் நடந்திருக்காது. நீதிமன்ற தீர்ப்புகளே இவற்றிற்கு சான்றாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்,�,