செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப் பிரிவு டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று (பிப்ரவரி 4) விசாரணை நடைபெற்றது.
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.நடராஜன், முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். “நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட்டத்தைக் கூட்டி, காவல் துறை சோதனை செய்வதைத் தடுத்தனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தலைமறைவாக இருக்கிறார்கள்” என்று அவர் வாதிட்டார்.
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், “செந்தில் பாலாஜி எங்கேயும் தலைமறைவாக இல்லை. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 41-ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்ப, அதற்கு “இல்லை” என்று பதிலளித்தார் காவல் துறை தரப்பு வழக்கறிஞர் நடராஜன்.
இதையடுத்து வரும் 7ஆம் தேதி அந்த நோட்டீஸைக் கொண்டுவருமாறு தெரிவித்த நீதிபதி, எந்த இடத்தில் நோட்டீஸை வழங்க வேண்டும் என்பது குறித்து செந்தில் பாலாஜி தரப்பு தகவல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் அதுவரை மனுதாரர்களை காவல் துறை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அன்றைய தினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,