மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவர் மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றி வைத்துள்ளார்.
முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். சுஷ்மா ஸ்வராஜ் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அப்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடியதற்காகத் தனக்கு ஒரு ரூபாய் ஊதியம் வழங்கினால் மட்டும் போதும் என்று ஹரிஸ் சால்வே , சுஷ்மா ஸ்வராஜிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினமே சுஷ்மா உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். இதனால் மூத்த வழக்கறிஞரால் அந்த ஒரு ரூபாய் கட்டணத்தைப் பெற முடியாமல் போனது.
இதுகுறித்து ஹரிஸ் சால்வே, குல்புஷன் ஜாதவ் வழக்கில் வாதாடியதற்காகத் தனக்கு வர வேண்டிய ஒரு ரூபாயை ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 6 மணிக்கு என்னிடம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சுஷ்மா தெரிவித்தார். ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதியே அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சித் தகவல்தான் கிடைத்தது என்று ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுஷ்மாவின் கடைசி விருப்பமான, மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற சுஷ்மாவின் கனவை அவரது மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார். நேற்று முன்தினம் ஹரிஸ் சால்வேவை அழைத்து அந்த ஒரு ரூபாய் தொகையை அவர் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கவுசல் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஷ்மாவின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றினார். பன்சூரி, ஹரிஸ் சால்வேவை அழைத்து அவருக்கு சுஷ்மா கொடுக்கக் வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் ஒரு ரூபாயை வழங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்குக்கு லட்சம் அல்லது கோடிகளில் கட்டணம் பெறும் ஹரிஸ் சால்வே, சுஷ்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வழக்கில் ரூபாய் ஒன்றுக்கு வாதாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,