சிங்கப்பூருக்குக் கப்பல்கள் வாயிலாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டில் எங்களது கப்பல் சுற்றுலா சேவையில் இந்தியாதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1.6 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூருக்குக் கப்பல் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இது 2017ஆம் ஆண்டு எண்ணிக்கை விட 27 சதவிகிதம் கூடுதலாகும். மற்ற நாட்டவர்களைக் காட்டிலும் இந்தியர்கள்தான் சுற்றுலாவுக்காக அதிகமாகச் செலவிடுகின்றனர். அவர்கள் தரம்வாய்ந்த 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களை விரும்புகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூருக்கு வருகைதந்த கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 கோடியாகும். இது 2017ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட 6.2 சதவிகிதம் கூடுதலாகும். ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் உயர்ந்து 14.4 லட்சமாக இருந்துள்ளது. இப்பிரிவில் சீனா, இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.�,