சுற்றுலாப் பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கிய வனத்துறையினர்!

Published On:

| By admin

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளைப் பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கி வைத்தது. இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சள் பை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக பத்து ரூபாய் நாணயத்தை தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் மஞ்சப்பை வந்து விழும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இயந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில் பொதுமக்கள் மத்தியில் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.
மேலும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share