�
சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சார்ந்த சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா சரிவைச் சந்தித்துள்ளது. முதலீடுகளுக்கு ஏற்ற 91 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
சுரங்க நிறுவனங்களுக்கான வருடாந்திர ஆய்வறிக்கையை ஃபிரேசர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுரங்கத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் அம்சங்கள் கொண்ட 104 நாடுகளின் இப்பட்டியலில் 2016ஆம் ஆண்டில் இந்தியா 97ஆவது இடத்திலும், 2015ஆம் ஆண்டில் 73ஆவது இடத்திலும் இருந்தது. 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தமுள்ள 91 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தியாவின் சுரங்கத் துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தடை மற்றும் கட்டுப்பாடுகளால் இந்தியாவுக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஃபிரேசர் இன்ஸ்டிடியூட் ஆய்வு கூறுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் கோவா மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கப் பணிகளுக்கான சுரங்கக் குத்தகைத் திட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் கோவா மாநிலத்தில் சுரங்கத் துறை வாயிலாக அரசுக்கு ரூ.30,000 கோடி வரையில் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், அம்மாநிலச் சுரங்கத் துறையில் ரூ.7 பில்லியன் டாலர் வரையில் அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாது ஏற்றுமதிக்கான வரி உயர்த்தப்படுவதாலும் சுரங்கத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்துறையைச் சார்ந்த பலரின் வேலைவாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.�,