சுரங்க நிறுவனங்களுக்கான சீர்திருத்தங்களால் காடுகள் அழிவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலகம் முழுவதிலும், முக்கியமாக இந்தியாவில் சுரங்கத் தொழில்துறை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. சுரங்கங்கள் சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களையும் வெளியேற்றுகின்றன. இதைக் குறைக்கும் நோக்கில், சுரங்கத் திட்டங்கள் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வகுத்தது. விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்காக 2006ஆம் ஆண்டில் அரசு சில சீர்திருத்தங்களை அறிவித்தது. எனினும், 5 ஹெக்டேர் வரை பரப்பளவு கொண்ட சுரங்கங்களுக்கு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கின் விளைவாக எதிர்பாராத கேடுகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
2000ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் சுரங்கத் தொழில் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் என்கா பலியெட்டி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் விவரங்கள், செயற்கைக்கோளின் தகவல்கள் போன்றவை உட்படுத்தப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் சுரங்கங்களின் சராசரி பரப்பளவு சரிந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஒழுங்குமுறைகளின் கீழ் வராமல் இருப்பதற்காக பெரிய சுரங்கங்கள் தங்களது குத்தகை பரப்பளவை 5 ஹெக்டேருக்கும் குறைவான சிறு சிறு சுரங்கங்களாக பிரித்துள்ளன. இதனால் 5 ஹெக்டேருக்கும் குறைவான சுரங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சிறு சுரங்கங்களால் காடுகள் அழிக்கப்படுவதாக இந்த ஆய்வின் ஆசிரியர்கள் செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். மரங்களை அழிப்பதற்கு இழப்பீடாக சிறு சுரங்கங்கள் கட்டாயமாக மரங்களை நட வேண்டும் என்பது அரசின் ஒழுங்குமுறை. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தித் தொழில்நுட்பத்தையும் சுரங்க நிறுவனங்களால் வாங்க முடிவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் மேலும் களங்கமுறுகிறது. எனினும், 2006ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு சுற்றுச்சூழல் ஒப்புதலை விரைவில் பெற முடிவதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.�,