சுயமரியாதையை யாரிடமும் விலைபேச மாட்டேன்: ஜி.கே.வாசன்

Published On:

| By Balaji

காமராஜர் பிறந்தநாளை ஒட்டி திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று (ஜூலை 21) பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் சில பிரமுகர்கள், “வாசன் மத்திய அமைச்சராக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்” என்றனர்.

நிறைவாகப் பேசிய வாசன், “தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதென்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில்தான் இருக்கிறது. காமராஜர் ஆட்சி என்ற கனவை நனவாக்கும் வலிமை நமக்கே இருக்கிறது. வருங்காலத்தில் சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்கவும் அடித்தளமான கூட்டம் இது. அரசியல் களத்திலே இது நமக்கு முக்கியமான காலகட்டம். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். தொடர்ந்து வென்றவரும் கிடையாது, தொடர்ந்து தோற்றவரும் கிடையாது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக – காங்கிரஸ் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், அவர்கள் ஏமாந்து போனார்கள். 134 வருடப் பாரம்பரிய தேசிய கட்சிக்குக் கூட 51 இடங்களைத்தான் இந்திய மக்கள் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் கனவு கண்ட முன்னாள் தலைவரின் வாரிசுகள் எல்லாம் இன்று விலாசம் தெரியாத அளவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கினார்.

தொடர்ந்து பேசிய வாசன், “தமிழகத்திலே நமது கூட்டணியாம் அதிமுக கூட்டணியை மக்கள் ஆட்சியில் தொடர்ந்து அமர வாக்களித்தார்கள். அதில் தமாகாவின் பங்கு பெரும் பங்கு. காமராஜர் காலத்தில் நீராதாரத்தை மேம்படுத்தும் தொலைநோக்குப் பணிகள் நடந்தேறின. அதைப் போன்று இப்போதும் நடக்க வேண்டும். விவசாயிகளின் எண்ணத்தை மத்திய மாநில அரசுகள் பிரதிபலிக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை ஒரு போதும் திணிக்கக் கூடாது. அப்படி ஒரு நிலை இருந்தால் அதை நாங்கள் எதிர்க்கத் தயாராக இருப்போம். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ஒரு காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் முடிக்க வேண்டும். உயர் அழுத்த மின் பாதையை விவசாய நிலங்கள் வழியே செல்வது விவசாயத்தை பாதிக்கிறது. அதை பூமிக்கடியில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வாசன், திருப்பூரின் பிரச்சினைகளையும் தன் பேச்சில் எதிரொலித்தார்.

“திருப்பூர் சாயப் பட்டறைத் தொழிலுக்கு ஜிஎஸ்டி 18% ஆகக் கொண்டுவந்தார்கள். பின் 12% ஆக மாற்றினார்கள். அதை 5% ஆகக் குறைக்க வேண்டுமென்று டையர்ஸ் அசோசியேஷன் சார்பாக தமாகா கேட்கிறது. அந்நியச் செலாவணியை ஈட்டும் நகரின் கட்டமைப்பை மேம்படுத்தத் திருப்பூருக்கு மத்திய அரசுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்” என்றார்.

பேச்சின் நிறைவுப் பகுதியாக, “தமாகா ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டில் நடை போடுகிறோம். தமாகாவினர் நல்லவர்கள், நாணயமானவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறோம். நல்ல பெயர் மட்டும் போதாது. வல்லவர்கள் என்றும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு, கடின உழைப்புக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெயரை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் காமராஜர் வழியிலும் மூப்பனார் வழியிலும் ஊருக்கு உழைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். தமாகாவை ஒரு கூட்டுக் குடும்பம் போல நடத்திவருகிறேன். சுயலாபம் கருதி இதுவரை நான் எந்த முடிவையும் எடுத்தது கிடையாது. சுயமரியாதையை யாரிடத்திலும் விலைபேசியது கிடையாது .உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் தரும் காலம் விரைவில் வரும். அடுத்து மூப்பனார் பிறந்தநாள் தின விழா, அடுத்து அரசியல் மாநாடு என்று நமக்கு நிறைய வேலையிருக்கிறது” என்று முடித்தார் வாசன்.

தமாகாவை பாஜகவில் சேர்க்கப் போவதாகக் கிளம்பிய செய்திகளுக்கு இதன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் வாசன். கூட்ட நிறைவில் பலருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

**

மேலும் படிக்க

**

**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**

**[ அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்](https://minnambalam.com/k/2019/07/21/26)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[என்.ஐ.ஏ.சோதனை: கடற்கரையில் ஆளில்லா பங்களாக்களில் என்ன நடக்கிறது?](https://minnambalam.com/k/2019/07/21/27)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel