தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதற்கு டிவில்லியர்ஸ் முயற்சித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பைக்கான யுத்தத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் ஜூலை 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. நீண்ட காலமாகவே மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா இதுவரையில் ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை. அபாயகரமான அணியாக இருந்தாலும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது தென்னாப்பிரிக்க அணி.
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அணி வீரர்கள் தேர்விலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அணி நிர்வாகமும் தேர்வுக் குழுவும் அவரை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதேபோல, அணியில் விளையாட வேண்டும் என்று டிவில்லியர்ஸிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு டிவில்லியர்ஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள டிவில்லியர்ஸ் இந்த விவகாரம் குறித்து வாய்திறந்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஜூலை 12) டிவில்லியர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், “இப்போது தென்னாப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை பயணம் முடிந்துவிட்டது. அணிக்குள் எவ்வித சலசலப்பும் ஏற்படாது, என் மீது சுமத்தப்பட்ட நியாயமற்ற விமர்சனத்துக்கு முடிவுகட்ட இப்போது விரும்புகிறேன். இதுகுறித்து விளக்கமளிக்கும்படி தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிறது. எனக்கும் உலகக் கோப்பை அணித் தேர்வுக்கும் இருந்த சர்ச்சைக் கருத்துகளுக்கு விளக்கமளிக்கிறேன்.
நான் 2018ஆம் ஆண்டின் மே மாதமே எனது ஓய்வை அறிவித்துவிட்டேன். எனது பணிச்சுமையைக் குறைத்து மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் எண்ணத்தில்தான் ஓய்வுபெற்றேன். பணத்துக்காகவே இந்த முடிவை நான் மேற்கொண்டேன் என்று பலர் குற்றஞ்சாட்டினர். அது உண்மையல்ல. சொல்லப்போனால் உலகின் பல்வேறு இடங்களில் நான் விளையாடுவதற்கு வாய்ப்புகள் வந்தன. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக அவற்றையெல்லாம் நான் நிராகரித்தேன்.
எனது ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் அணி நிர்வாகத்துடனும் அணி வீரர்களுடனும் தொழில் ரீதியாக எவ்வித தொடர்பும் இல்லாமலேயே இருந்தேன். நான் அவர்களை அழைக்கவில்லை, அவர்களும் என்னை அழைத்துப் பேசவில்லை. நானும் ஃபாஃப் டூபிளசிஸும் பள்ளிக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். உலகக் கோப்பைக்கான உத்தேச அணி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் டூபிளசிஸிடம் நட்பு ரீதியாகப் பேசினேன். உலகக் கோப்பை அணியில் நான் ’தேவைப்பட்டால்’ விளையாடுவேன் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். நான் அணியில் சேருவதற்கு எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. அவர்களை நான் வற்புறுத்தவும் இல்லை. என் பக்கத்தில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால் இதைப் பெரிய பிரச்சினையாகச் சித்தரித்துள்ளனர்.
இதற்கு நானோ அணி நிர்வாகமோ அணித் தலைவரோ காரணமல்ல; விமர்சனத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யாரோ இப்பிரச்சினையைப் பெரிதாக்கியுள்ளனர். அது யார் என்று தெரியவில்லை. இப்போது நான் திமிர்பிடித்தவன், சுயநலவாதி என்று விமர்சிக்கப்படுகிறேன். நான் உண்மையாகத்தான் இருக்கிறேன். நேர்மையான காரணங்களுக்காகவே நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். ஒருவேளை உலகக் கோப்பை அணியில் விளையாட வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தால் நான் சம்மதித்திருப்பேன்.
இப்போது என் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதிலும், உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவதிலும்தான் நான் கவனம் செலுத்தவுள்ளேன். தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியதிலும் அணித் தலைவராகச் செயல்பட்டு அணியை வழிநடத்தியதிலும் நான் பெருமைப்படுகிறேன். அணி வீரர்களுடனான எனது நட்பு என்றும் நிலைத்திருக்கும். இளம் தலைமுறையினருக்கு எனது ஆதரவு என்றும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் பேசிய விஷயத்தைப் பொதுப்படையாக்கி வீணான விமர்சனங்களை தன்மீது சுமத்திவிட்டதாக டிவில்லியர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் மிகப் பெரிய தோல்விகளை அணி சந்தித்திருக்காது. அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். இருப்பினும் ஓய்வை அறிவித்த பிறகு அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதும் விமர்சனங்களை ஏற்படுத்தும்.
கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து பின்னர் மீண்டும் அணியில் விளையாடுவது சாத்தியமா?
ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன், பாகிஸ்தானின் இம்ரான் கான், ஜாவேத் மியான்தாத், ஷாகித் அப்ரிடி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கார்ல் கூப்பர், ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளார், கென்யாவின் ஸ்டீவ் டிக்காலோ, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகிய வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்த பின்னர் அணியில் மீண்டும் இணைந்து விளையாடியுள்ளனர். டிவில்லியர்ஸுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அவர் விளையாடியிருப்பார். உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் செயல்பாடும் வேறுமாதிரி இருந்திருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணியின் தேர்வுக்குழுவின் மக்கள் தொடர்பு ஏற்பாட்டாளரான லிண்டா ஜோண்டி வெளியிட்டிருந்த அறிக்கையில், டிவில்லியர்ஸின் கோரிக்கையை ஏற்பதற்கான எவ்வித வழியும் இல்லை எனவும், உலகக் கோப்பை அணி தேர்வுசெய்யப்பட்டுவிட்டதால் அவரை அணியில் சேர்ப்பது இயலாத காரியம் எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைக்கும் தன் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கும் விளக்கமளிக்கும் விதமாகத் தற்போது டிவில்லியர்ஸ் வாய்திறந்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”