^சுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா

Published On:

| By Balaji

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கிடையில் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டது எதிர்பாராமல் நடந்தது, அது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்து குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது, சட்டவிரோதமாகப் பேனர் வைத்த விவகாரத்தில் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியே ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமானவர்கள் மீதும் மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன், ஆனால் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இம்மனு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று (செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஒன்று ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது” என்று வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி”, இந்த வழக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சுபஸ்ரீ மரணம் தொடர்பாகக் குற்றவாளிகள், குற்றத்தைத் தடுக்காத மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இதுகுறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து செப்டம்பர் 25 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்,

இதற்கிடையே இன்று ஆவடியில் நடைபெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, ”எதார்த்தமாக நடந்த விஷயம்தான். பேனர் வைக்காதவர்கள் யாரும் இல்லை. அனைவரும் வைக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அந்த நேரத்தில், அந்தப் பெண் செல்ல, காற்றில் பேனர் அந்தப் பெண் மீது விழ வேண்டும். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏற வேண்டும். அவர் இறக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது. இதை மன வருத்தத்தோடு இங்கு நான் பதிவு செய்கிறேன். இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றனர்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவரது பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share