சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பான வழக்கில் சசிதரூர் மீது டெல்லி போலீசார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி சசிதரூர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி மேல்முறையீடு செய்தார். அதில் காவல்துறையினர் அரைகுறையாக விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,