கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளச் சேதத்தையடுத்து 3 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து அங்குள்ள 3 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. திருச்சூர் மாவட்டம் பாலியக்காரா, பாலக்காடு மாவட்டம் பாம்பம்பள்ளம், கொச்சியில் உள்ள கும்பளம் ஆகிய 3 சுங்கச் சாவடிகளில் கடந்த ஒரு வாரமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இது வரும் 26ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
அதிக அளவில் பெய்த மழையால் கேரளாவின் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால் அணைகளிலிருந்து உபரி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் போல தண்ணீர் தேங்கியுள்ளன. அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலமும், படகுகள் மூலமும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதனிடையே தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளுக்குக் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை, சேலம் மற்றும் ஆந்திராவில் உள்ள தடா ஆகிய பகுதிகளை சென்னையுடன் இணைக்கும் வழிகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு தற்போதைய கட்டணத்திலிருந்து அதிகபட்சமாக 10 விழுக்காடு உயர்த்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, கார்களுக்கு 10 விழுக்காடும், லாரிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 6 விழுக்காடும் கட்டணங்கள் உயர்த்தப்படலாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை அடுத்த சில நாட்களில் வெளியிடும். 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி, 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி இப்போதைய கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது.
�,”