தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி, கடந்த 3 ஆண்டுகளில் தமிழகச் சுகாதாரத் துறையில் 35 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது அறப்போர் இயக்கம்.
தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் 70 மருத்துவமனைகளில் சுமார் 9,000 தற்காலிகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இப்பணி வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்படாமல் அந்நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளது அறப்போர் இயக்கம். இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், நேற்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பணிக்கு வந்தவர்களைக் காட்டிலும் அதிகமானவர்கள் வேலைக்கு வந்ததாகக் கணக்கு காட்டி சுமார் 35 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்தார்.
“பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தில் இருவிதமான பதிவேடுகளை பயன்படுத்தியுள்ளனர். ஒன்று பணியாளர்கள் பணிக்கு வந்தது, மற்றொன்று அரசிடம் இருந்து பணியாளர்கள் செய்த வேலைக்காகப் பணம் பெறுவதற்கான பதிவேடு.
குறிப்பிட்ட அரசு மருத்துவனையில் 100 பேர் பணிக்கு இருக்க வேண்டும் என்றால், 70 பேர்தான் பணி செய்துள்ளனர். அந்த 100 பேர் பணிக்கு வந்ததாகப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, அவர்களை வேறு இடங்களுக்குப் பணி செய்ய அனுப்பியுள்ளனர். இதை மருத்துவமனை நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளன
இதன்மூலம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் ரூ.3.41 லட்சம் கூடுதலாகக் கணக்கு காட்டி தமிழக அரசிடம் பணம் பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 70 அரசு மருத்துவமனைகளில் இந்த வகையில் அவர்கள் ரூ.35 கோடியை முறைகேடாக பெற்றுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
தற்காலிகப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் மற்றும் அவர்களது பிஎஃப் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறினார். கடந்த 2017ஆம் ஆண்டே இது தொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை போலீசாரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார் ஜெயராமன்.
“தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் தான் இந்த முறைகேடுக்குப் பொறுப்பு. ஆனால் அவர் இந்த புகாருக்குப் பின்னர், பதவி நீக்கம் செய்யப்படவில்லை, வேறு துறைக்கு மாற்றப்படவில்லை. விரைவில் இந்த ஆண்டுக்கான டெண்டர் விடப்பட உள்ளது. அதனால், லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார் ஜெயராமன்.
இது தொடர்பாக, விரைவில் தமிழகச் சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”