‘தமிழகத்தில் பருவகால மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்களை நோய்களில் இருந்து காப்பாற்ற சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜூலை 10ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பருவகால மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ஆங்காங்கே வைரஸ், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நோயினால் பாதிக்கப்படும்போது அவர்கள் அரசு மருத்துவமனையை நாடுவது இயல்பான ஒன்று. அவர்களுக்கு நோய் தடுப்பு முறையை முறையாகக் கையாண்டு காப்பாற்ற வேண்டியது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணியாகும். இதைத் தொடர்ந்து கண்காணித்து நோயாளிகளைப் பாதுகாக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால்தான் அரசு மருத்துவமனையை நம்பி வரும் சாதாரண மக்கள் பயன்பெறுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
ஏற்கெனவே நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரம், சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டம் போன்ற பகுதிகளில் டெங்கு, வைரஸ், மர்மக் காய்ச்சல் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிகிச்சை பலனின்றி சிறுமி, பெண் உட்பட சிலர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இதுபோன்ற வேதனைக்குரிய உயிரிழப்பைத் தவிர்க்க சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை 24 மணி நேர மருத்துவச் சேவையை உரிய முறையில் அளித்து நோய் தாக்கியவர்களைக் காப்பாற்ற வேண்டும். அனைத்துச் சுகாதார மையங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நகரம் முதல் கிராமம் வரை ஆங்காங்கே நடமாடும் சுகாதார மையங்களைப் பயன்படுத்தி நோய் தாக்குவதிலிருந்து பொது மக்களைக் காப்பாற்ற சுகாதாரச் சேவையை தொடர்ந்து அளித்திட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக அரசு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்கும், நோய் தாக்கப்பட்டவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவதற்கும், நோய் பரவாமல் இருப்பதற்கும் தொடர் கண்காணிப்பு, சிறப்பு சிகிச்சை முறை, விழிப்பு உணர்வு பிரசாரம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,