�
விசைப் படகுகளில் சீன என்ஜின்களைப் பயன்படுத்தும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று முதல் மீனவர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதில், 24 மீட்டர் நீளத்துடன் 240 குதிரைத் திறன் கொண்ட சீன என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்தப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அது ரத்து செய்யப்பட்டது.
ஆனால், சீன என்ஜின்களைப் பயன்படுத்த அனுமதியளித்து மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து விசைப் படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், “சீன என்ஜின்கள் பயன்படுத்துவதால் மீன் குஞ்சுகள், பவள பாறைகள் ஆகியன அழியும். தமிழகக் கடல் வளம் பாதிக்கப்படும். இதனால், கட்டுமரம் சிறு விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். முன்னர், இதற்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டதை எதிர்த்துப் போராடினோம். அதனால், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத் துறை இயக்குனரைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையை திரும்பப் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளனர்.�,