சீட் தராத மா.செக்களைப் பார்த்துக்கொள்கிறேன்: உதயநிதி

Published On:

| By Balaji

திமுக இளைஞரணிக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பற்றி பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஜனவரி 31ஆம் தேதி திருச்சி கேர் கல்லூரியில் நடந்த திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தலைவருக்கும் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒரு கோரிக்கை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எங்களது இளைஞரணிக்குக் கொஞ்சம்தான் வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் நாங்கள் நிறைய பேர் ஜெயித்து காட்டிவிட்டோம். பரவாயில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கொடுத்தால், தம்பிகள் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம்” என்று பட்டும்படாமல் பேசிவிட்டுக் கிளம்பினார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) மாலை திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 750 இளைஞரணி நிர்வாகிகள் அரங்கில் நிறைந்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் 5 மணிக்கு உள்ளே வந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த ஆலோசனையில், திருச்சியில் பேசியதை விட வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் உதயநிதி.

முதலில் இளைஞரணி துணைச் செயலாளரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டவருமான அன்பில் மகேஷ் பேசுகையில், “இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறார்கள். நமது நிர்வாகிகளை மதிக்கவில்லை என்ற புகார்களும் வருகிறது. நான் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் என்னுடைய மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் செயல்பட எந்தவித இடைஞ்சலும் இருக்காது. இளைஞரணியின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பேன்” என்று கூறி அமர்ந்தார்.

இறுதியாக மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்த உதயநிதி, “இந்தியாவிலேயே அதிகமான இளைஞர்கள் உள்ள கட்சி எதுவென்றால் அது திமுகவாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே, நாம் அனைவரும் திமுகவில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்” என்றவர், மாவட்டச் செயலாளர்கள் விவகாரத்திற்கு தனது பேச்சை திருப்பினார்.

“இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள்தான் தடையாக இருந்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கட்சிப் பணிகளைக் கவனியுங்கள். நல்லதே நடக்கும். உங்களுடைய உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கொஞ்சம்தான் கிடைத்தது. சில மாவட்டச் செயலாளர்களிடம் சொன்னேன். சில மாவட்டச் செயலாளர்கள் மதித்து சீட் கொடுத்தார்கள். சில மாவட்டச் செயலாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் யார் யார் என்று எனது மனத்தில் இருக்கிறது. அவர்களைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன்” என்று சூடாகப் பேசிய உதயநிதி,

“அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தருகிறேன். நீங்கள் அனைத்து விதத்திலும் தேர்தலுக்குத் தயாராகுங்கள். நிர்வாகிகள் பற்றி நாங்கள் தனியாக ஒரு சர்வே எடுப்போம். அதில், யாருக்கு நல்ல பெயர் உள்ளதோ அவர்களுக்கு சீட் கண்டிப்பாக கிடைக்கும்” என்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

கூட்டம் முடிந்ததும் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு, நிர்வாகிகளையும் அழைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சொன்னதோடு மட்டும் இல்லாமல் பல நிர்வாகிகளுக்கு போன் போட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டீர்களா, எப்போது சென்றீர்கள் என்று அக்கறையுடன் விசாரித்திருக்கிறார். உதயநிதியின் இதுபோன்ற வார்த்தைகள் தங்களை உற்சாகப்படுத்துவதாகக் கூறுகிறார்கள் இளைஞரணியினர்.

மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் நடைபெற்றுள்ளன. ஏற்கனவே, தளபதி கிரிக்கெட் லீக் (tcl) என்ற பெயரில் மண்டலம் வாரியாக போட்டிகளை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு 5 லட்சம் வரையில் ஸ்டாலின் பிறந்தநாளன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதுபோலவே இளைஞரணியினருக்குப் புத்துணர்வு ஊட்டும் விதமாக தருமபுரியில் இளைஞர் அணி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பயிற்சி பாசறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share