�தமிழக அரசு மீது நடிகர் கமலஹாசன் சேற்றை அள்ளி வீசுவது நல்லதல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும் அதனால் அந்நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்றும் அதனைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விளக்கமளிப்பதற்காகச் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன்,” தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுவருவதாகவும் கூறினார். சிஸ்டம் சரியில்லை என்று தான் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவித்ததாகவும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தற்போது வழிமொழிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கமலின் இந்தக் கருத்துக்கு நிதியமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சிஸ்டம் சரியில்லை என்று கூறுவதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பைக் கமல் குறை கூறுகிறாரா? அவருடைய நிகழ்ச்சி போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதற்காக அரசின் மீது சேற்றை அள்ளி வீசக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமி திறமையாக ஆட்சி செய்து வருகிறார். வெளியில் போகிற ஓணானை எடுத்து மேலே போட்டுவிட்டு குடையுதே குடையுதே என்று கூறுவதுபோல் உள்ளது கமலின் கருத்து. அவரது கருத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.�,