சிவகாசி மற்றும் காரைக்குடியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்தும் வாக்களிக்கும் முறை குறித்தும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில் மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தார்கள் என்பதை அப்போதே அவர்கள் சரிபார்த்துக்கொள்வதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தேர்தலை வாக்காளர்கள் மிகவும் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் அவற்றைச் சரிசெய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று காலை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர் சுந்தர பாரதி, மண்டலத் தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சியளித்தார். இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளுவதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
இதேபோல, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி தலைமை தாங்க, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி முன்னிலை வகித்தார். காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயணிகள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்களிப்பதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
�,