சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது ஏன் என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் சிவகங்கை தவிர்த்து மற்ற எட்டு இடங்களுக்கு மார்ச் 23ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என்று தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் சிவகங்கையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிறது” என்று கூறியிருந்தார்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவகங்கை தொகுதிக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமைக்கு சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே கார்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நியூஸ் 18 ஊடகத்துக்கு நேற்று (ஏப்ரல் 1) பேட்டியளித்த ப.சிதம்பரத்திடம், ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்குத்தான் சீட் என்ற விதி சிதம்பரத்திற்காகத் தளர்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ப.சிதம்பரம், “விதியும் கிடையாது, விலக்கும் கிடையாது. சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு வேறு காரணங்கள் இருந்தன. ராகுல் காந்தி தென்மாநிலங்களில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற யோசனை இருந்தது. அதற்காகத் தமிழகத்தில் சிவகங்கை, கேரளாவில் வயநாடு, கர்நாடகத்தில் ஒரு தொகுதி என மூன்று தொகுதி தேர்வு செய்துவைத்திருந்தனர். அதனால்தான் இந்த தாமதம்” என்று தெரிவித்தார்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் போட்டியிடுகிறார்கள். மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் சிந்துவாரா தொகுதியில் போட்டியிடுகிறார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி நீண்ட நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர். அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதில் விதியும் கிடையாது, விதிவிலக்கும் கிடையாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.�,