எந்தப் பாதையில் உங்கள் பயணம்? – 31
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி என்னும் கிராமத்திலிருந்து ஒருவர் போன் செய்திருந்தார்.
ஒரு நூலகத்தின் வாயிலில் நின்றுகொண்டு பேசுவதாகவும், நான் எழுதிய ‘படித்த வேலையா, பிடித்த வேலையா?’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு போன் செய்வதாகவும் சொன்னார்.
புத்தகம், நூலகம் என்று சொன்னதும் கூடுதல் உற்சாகமானேன்.
புத்தகம் பயனுள்ளதாக இருந்ததாகச் சொல்லிவிட்டு தனக்குச் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறினார்.
‘தான் சிக்கையா நாயக்கர் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இறுதியாண்டு தமிழ் மீடியத்தில் படிப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு கண் பார்வை சரியாகத் தெரியாது என்பதால் சைக்கிள், பைக் ஓட்டுவதில்லை. அந்த தாழ்வுமனப்பான்மையினாலும், ஆங்கிலத்தில் பேசத் தெரியாது என்பதாலும் தன் சம வயது நண்பர்களுடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை என்றும் சொன்னார்…’
அவர் குடும்பப் பின்னணி குறித்து நான் கேட்டதற்கு, அப்பா பந்தல் போடும் வேலை செய்வதாகவும், அம்மா வீட்டில் தையல் தைத்துக்கொடுப்பதாகவும், ஒரு சகோதரி கல்லூரியில் படிப்பதாகவும் சொன்னார்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா என்ற கேள்விக்கு, ‘அரசாங்கம் கொடுத்த லேப்டாப் வீட்டில் உள்ளது. ஆனால், அதைப் பயன்படுத்தத் தெரியாததால் அப்படியே வீட்டில் மூடி வைத்துள்ளேன்…’ என்றார்.
சரி, இப்போ உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன்.
‘மேடம் நான் படித்து வேலைக்குப் போனால்தான் அப்பா அம்மாவைக் காப்பாற்ற முடியும். தங்கையைக் கல்யாணம் செய்துகொடுக்க முடியும்…’
‘சரி…’
‘நான் இப்போ இறுதியாண்டு படிக்கிறேன். இன்னும் மூன்று மாதங்களில் தேர்வு முடிந்துவிடும். அதன் பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும். நான் இங்கே சில இடங்களில் வேலைக்கு விசாரித்தேன். அவர்கள் 20,000 பணம் கட்டச் சொல்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் கொடுக்கும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமாம். அதே வேலைக்கு ஆட்களைச் சேர்த்துவிட வேண்டுமாம். ஏதோ மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிறார்கள்… பணம் கட்டலாமா மேடம்…’
‘நீங்கள் வேலை செய்வதற்கு நீங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்… எனவே பணம் கட்டாதீர்கள்… படித்து முடித்து உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேடுங்கள்’ என்றேன்.
‘எனக்கு என்ன வேலை கிடைக்கும் மேடம்…’
‘வேலை கிடைக்க நான் சொல்லும் விஷயங்களைச் செய்யுங்கள். ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அது ஒன்றும் அவ்வளவு கம்பச் சூத்திரமான வேலை அல்ல. கம்ப்யூட்டரில் எம்.எஸ்.வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்ற அடிப்படையைக் கற்றுக்கொள்ளுங்கள். இ-மெயில், கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் என இன்டர்நெட்டில் அவசியமானதைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.’
‘இதெல்லாம் செய்தால் வேலை கிடைக்குமா மேடம்…’
‘வேலை கிடைக்கிறதோ, இல்லையோ… எப்படி வேலை தேட வேண்டும், எந்த வேலை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது போன்ற விஷயங்கள் பிடிபடும். பின்னர் தானாகவே உங்கள் பயணத்துக்கான பாதையும் தெளிவாகும். யூடியூபில் ஏராளமான வேலைவாய்ப்பு சம்பந்தமான வீடியோக்களும், இணையத்தில் ஆயிரக்கணக்கில் தன்னம்பிக்கைக் கொடுக்கும் கட்டுரைகளும் குவிந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்த உங்களுக்குத் தேவை தொழில்நுட்ப அறிவு. அதை நீங்கள் வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்…’
இதைக் கேட்டதும் அந்த மாணவர் சந்தோஷத்துடன், ‘தினமும் நூலகத்துக்குச் சென்று செய்தித்தாள்கள் படிப்பதும், புத்தகங்கள் படிப்பதும் என் வழக்கம்’ என்றார்.
‘உங்களிடம் தெரியாததைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வமும், அதை துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. நூலகம் செல்வதும் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் படிப்பது கூடுதல் சிறப்பு. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உங்கள் பொறுப்புணர்ச்சி உங்கள் மிகப்பெரிய பலம்.
ஒரு கண் பார்வை தெரியவில்லை என்பது நீங்களாக ஏற்படுத்திக்கொண்டதல்ல. ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை என்பதும்கூட பெரிய பிரச்சினை இல்லை. இதையெல்லாம் நீங்கள் மனது வைத்தால் ஒரு சில மாதங்களில் கற்றுத் தேர்ச்சி பெறலாம். வாழ்த்துகள்’ என்று சொல்லி அவருடைய பலத்தை அவருக்கு உணர்த்தி போனை வைத்தேன்.
பலருக்கும் இங்கு தேவையாக இருப்பது அவரவர் பலத்தைப் புரியவைப்பது மட்டுமே. அதை உணர்ந்துவிட்டால் அவர்களாகவே முன்னேறிச் சென்றுவிடுவார்கள்.
கற்போம்… கற்பிப்போம்!
[அழகிய கையெழுத்தும் திறமையே!](https://minnambalam.com/k/2019/03/08/15)�,