�
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு என அண்ணாமலை என்பவர் புகார் அளித்தார். சிலையில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியது சென்னை உயர் நீதிமன்றம். அதில், சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை இந்திய தொழில்நுட்பக் கழக வல்லுநர் குழு உறுதி செய்தது. இதுதொடர்பாக முன்னாள் ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, இந்து அறநிலையத்துறையில் திருப்பணிப்பிரிவு கூடுதல் ஆணையர் கவிதாவை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.
இந்நிலையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி இன்று(மார்ச் 15) கைது செய்யப்பட்டுள்ளார்.�,