சிலை கடத்தல் வழக்கில் கைதாகிறார் பிரபல சினிமா நடன நடிகை!

public

சிலை கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆழ்வார்பேட்டை தீனதயாளன் வீட்டில் சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையை மீண்டும் இன்று நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்னொரு திருப்பமாக பிரபல நடிகை ஒருவரின் பெயரும் அடிபடுகிறது.

யார் அந்த நடிகை?

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொத்தம் 200 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளை பெற்றவர். சினிமாவில் நடிப்பதை விட, நாட்டியத்தில் கவனம் செலுத்துவதையே பெரிதும் விரும்புபவர். தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகையின் திரை உலக வாரிசான இவருக்கும் இந்த சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளிநாடு ஒன்றில் ஆர்ட் கேலரி நடத்தி வரும் அந்த நடிகை, தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் சிலைகளை தெரிந்தோ, தெரியாமலோ வாங்கி அதை அதிக விலைக்கு விற்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் தீனதயாளனுக்கும் தொடர்பிருப்பது உறுதியானால் இவரும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியுள்ளது.

யார் இந்த தீனதயாளன்?

சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன், அந்த பங்களாவுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 55 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில், மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளரும் கடத்தல் கும்பலின் தலைவருமான தீனதயாளன் (78) அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆழ்வார்பேட்டை பங்களாவில் இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த அறைகளை போலீஸார் சோதனை செய்யவில்லை. அங்கு சிலைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. தீனதயாளனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீஸார் இன்று காலை மீண்டும் தீனதயாளன் வீட்டில் சோதனை செய்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட சிலைகளை போலீஸார் கைப்பற்றி இருக்கின்றனர்.

உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை வைத்து சிலை கடத்தல் வேலையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2008-ல், இன்டர்போல் போலீஸார் உதவியுடன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் சென்னை புழல் சிறையில் இருக்கிறார். இவரின் வலதுகரம் தான் தீனதயாளன்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இருக்கும் சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பதுதான் இவரின் வேலை. கடந்த 1965-ல் இருந்து, இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டு இதில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டுக்குத் தப்பி செல்லாமல் இருக்க போலீஸார் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளனர்.

தீனதயாளன் மகன் சிக்குகிறார்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீனதயாளனின் மகன் கிருதயாள் தங்கி இருக்கிறார். அவர்தான் தமிழகத்தில் இருந்து தீனதயாளன் கடத்தி தரும் சிலைகளை உலகளவில் விற்பனை செய்யும் ஏஜெண்ட். தற்போது அவரை கைது செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரில் தீனதயாளனின் மகள் இருக்கிறார். தற்போது அவரும் இந்த விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கடந்தாண்டு சிலை கடத்தல் விவகாரத்தில் பிரபல சினிமா இயக்குநர் சேகர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நடன நடிகையின் பெயரும் அடிபடும் நிலையில் அவரும் கைது செய்யப்பட்டால் இந்த சிலை கடத்தல் தொடர்பான முக்கிய விவரங்களும், இதில் தொடர்புடைய சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *