பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை நீதிமன்ற உத்தரவின்படி, கும்பகோணத்தில் உள்ள சிலைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பழனி கோயிலில் நவபாசாணத்தால் செய்யப்பட்ட உற்சவர் சிலை உள்ளது. இந்தச் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும், ஐம்பொன்னால் மற்றொரு உற்சவர் சிலை 2004ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்தச் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், விசாரணை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் சிலைக்குப் பாதுகாப்பு இல்லை எனக் காவல் துறை தரப்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சிலையைக் கோயிலில் இருந்து எடுத்துவந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதற்காக, ஐம்பொன் சிலைக்கு நேற்று முன்தினம் (ஜூலை 10) சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
சிலையின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு மரப்பட்டியில் வைத்து 2ஆம் எண் வின்ச் மூலமாக மலை அடிவாரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் டி.எஸ்.பி வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளிடம் நேற்று (ஜூலை 11) சிலை ஒப்படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சிலை நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஐயப்பன் பிள்ளை சிலையை ஆய்வு செய்தார். 221 கிலோ 150 கிராம் எடைகொண்ட முருகன் சிலையின் உயரம் 115 செ.மீ இருப்பது அப்போது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிலையை சிலைப் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.�,