12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், தூக்கு தண்டனை விதிக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று (ஜூலை 23) தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
ஆஃசிபா முதல் சென்னை சிறுமி வரை தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும், காவலர்களுமே இதற்கு உடந்தையாக இருக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
சிறு தூறலாக ஆரம்பித்த இந்த பிரச்சனை தற்பொழுது பெரும் வெள்ளமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வெள்ளத்தை ஏதாவது ஒரு வகையில் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே மத்திய அரசு இன்று (ஜூலை 23) மிக முக்கிய மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, இனி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும்படி சட்ட திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா விவாதத்துக்கு பின்னர் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சிறுவர்களையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கும் கடுந்தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.�,