தமிழக வனத் துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை கருஞ்சிறுத்தையும் சிறுத்தையும் ஒன்றாகப் பார்ப்பது மிக அரிதான ஒன்று. அப்படியொரு காட்சியைத் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார் கானுயிர் புகைப்படக் கலைஞர் தாஸ் சந்திரசேகர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட தேயிலைத் தோட்டமொன்றில், அவர் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தகிரியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான தாஸ் சந்திரசேகருக்கு, கருஞ்சிறுத்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்பது மிகப்பெரும் கனவு. தன்னார்வ நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர் இதுவரை புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உட்படப் பல காட்டு விலங்குகளைப் படமெடுத்துள்ளார். பிறக்கும்போது ஏற்படும் மரபணுக் கோளாற்றினால் இந்தச் சிறுத்தைகளின் நிறம் கருமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நிறமிகளின் குறைபாடு என்றும், அவற்றின் உடலை உற்றுக் கவனித்தால் சிறு புள்ளிகள் இருப்பது தெரியவருமெனவும் கூறுகின்றனர் வனத் துறையினர்.
கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த வட்டாரத்தில் கருஞ்சிறுத்தை இருப்பதாக தாஸ் சந்திரசேகரிடம் கூறியிருக்கிறார். “சிறுத்தையொன்றும் ஒரு கருஞ்சிறுத்தையும் சேர்ந்து சுற்றுவதாகச் சொன்னார். அதன்பின்னர் என் மனதில் வேறு எண்ணமே மனதில் எழவில்லை. உடனடியாக அந்த இடத்துக்குச் சென்றுவிட்டேன். மாலை 4 மணியளவில் இரண்டும் ஒரு தேயிலைத் தோட்டத்தின் நடுவே இருந்த பாறைகளுக்கு வந்தன. என் கண்களாலேயே நம்ப முடியவில்லை. உடனடியாக அந்தக் காட்சியைப் படமெடுத்துவிட்டு, அங்கிருந்து அகன்றுவிட்டேன்” என்கிறார் தாஸ் சந்திரசேகர்.�,