ஜிப்சன் ஜான், ஜிதீஷ் பி.எம்.
பொருளாதார வல்லுநர் ஜான் திரேஸுடன் நேர்காணல்! (பாகம் – 1)
*பணமதிப்பழிப்பு நடவடிக்கை (demonetization) எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நடவடிக்கை, பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்தியப் பொருளாதாரத்தின்மீது இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றிய உங்களது பார்வை என்ன?*
அதிகார வர்க்கத்தினரிடையே பிற்போக்குத்தனம் பரவலாக இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்கு எந்தவொரு பொருளியல் அடிப்படையும் இல்லை என்பது பிரதமரின் உரையிலிருந்தே அப்பட்டமாகத் தெரிந்தது. பணப்புழக்கத்துக்கும், நாட்டில் நிலவும் ஊழலுக்கும் தொடர்பு உண்டு போன்ற அர்த்தமற்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டில் உள்ள கள்ளப் பணம் / கறுப்புப் பணத்தின் மொத்த மதிப்பில் மிகச்சிறிய விழுக்காடுதான் ரொக்கமாக (cash) இருக்கிறது. கறுப்புப் பணத்தின் பெரும் பகுதி உடனடியாகச் சொத்துக்களாக மாற்றப்பட்டுவிடுகின்றன என்னும் உண்மையைப் பல பொருளாதார ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.
கறுப்புப் பணம் என்பது தொடர்ந்து உருவாக்கப்படும் ஒன்று. அது ஓரிடத்திலேயே தங்கிவிடுவதில்லை. அரசியல் கட்சிகள் வேண்டுமானால் தேர்தல் செலவுகளைச் சந்திக்க வேண்டி கறுப்புப் பணத்தை அங்குமிங்கும் ரொக்கமாக வைத்திருக்கலாம். உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்த நடவடிக்கை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்திருந்தவர்கள்கூட அதை வங்கிகளிடம் செலுத்தி, அப்பணத்தை வெள்ளையாக்கிக்கொண்டார்கள். சாதாரண மக்களின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் கலந்தாலோசித்து எடுக்காமல், யதேச்சதிகார பாணியில் முடிவுசெய்வது இந்த அரசின்கீழ் தொடர்ந்து நடந்துவருகிறது.
*சில பொருளாதார நிபுணர்கள், அனைவருக்குமான இலவசக் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு என மக்கள் நலனை உறுதிசெய்யும் திட்டங்களைப் பரிந்துரைக்கிறார்கள். இவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principles of State Policy) இருந்துதான் ஊற்றெடுக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் செயல்படுத்த அரசிடம் போதிய நிதி ஆதாரங்களோ, செயல் திறனோ இல்லை என்பது அரசு தரப்பு வாதமாக இருக்கிறதே?*
இந்த வாதத்தில் துளிக்கூட உண்மையில்லை. பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால்கூட, அரசின் வருவாய் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் வரி வருவாயின் பங்கு உயர உயர, அரசின் நிதி ஆதாரங்களும் செயல் திறனும் கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இன்று பொதுச் சுகாதாரச் சேவைகளுக்கு மத்திய அரசு, மொத்த தேசிய உற்பத்தியில் 1 விழுக்காட்டை மட்டுமே செலவு செய்கிறது. திரட்டப்படும் வளங்களைக் கொண்டு இதை 3 விழுக்காடு என்று உயர்த்தினால்கூட, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள் அளிக்கும் தரமான சேவைகளை மற்ற மாநிலங்களும் தர முடியும்.
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியதில் உங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இதன் முக்கியத்துவத்தை அரசிடம் வலியுறுத்தத் தாங்கள் முன்வைத்த வாதங்கள் என்னென்ன? இத்திட்டம் ஊரகப் பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி எங்களுக்கு விளக்குங்கள். இத்திட்டத்தை வீண் செலவு என்று விமர்சிப்பவர்களுக்கு, களப்பணிகள் மூலம் நீங்கள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?*
ஊரக மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஊரக வளர்ச்சிக்கான பொதுப் பணிகளை மக்களே மேற்கொண்டு, உற்பத்தித் திறனைப் பெருக்கும் கட்டமைப்பு வசதிகளை எழுப்புவதற்கும் பயன்படும் வகையில்தான் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. மேலும், உடலுழைப்பைச் செலுத்த வேண்டிய வேலைகளை உருவாக்கும் ஒரு நோக்கமும் இருந்தது. காரணம், கூலி வேலையைத் தேர்ந்தெடுப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களை அடையாளம் காண்பது சுலபம். கிணறு வெட்டுவது, குளம் – குட்டைகளைத் தூர் வாருதல், சாலைகள் போடுவது என இத்திட்டத்தின்கீழ் ஊரக மக்கள் மேற்கொண்டுள்ள பொதுப்பணிகளில் 87 விழுக்காட்டுப் பணிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும், 75 விழுக்காட்டுக் கட்டமைப்பு வசதிகள் ஏதாவது ஒரு வகையில் வேளாண்மைக்கு உதவுவதாகவும் மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிகார், ஜார்கண்ட் போன்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாநிலங்களில் இத்திட்டம் ஊழல் மற்றும் மோசமான திட்டமிடல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பயன்களை அளிக்கவில்லை.
சரியான முறையில் செயல்படுத்தினால் இத்திட்டம் ஊரக மேம்பாட்டுக்கும், வளங்குன்றா வேளாண்மைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும். வேலைக்கான கிராக்கி இருந்தும் வேலையேதும் உருவாக்கப்படாதது, வேலைக்கான கூலியை வங்கிக் கணக்கில் செலுத்துவதில் தாமதம் போன்ற குறைபாடுகள் இன்னும் இருப்பதால், இத்திட்டத்தின் முழுப் பயனை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். ஊரக சுயாட்சி, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இன்னும் பாடுபட வேண்டும். வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் செயல்திட்டங்களின் முக்கியத்துவத்தை அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளும் உணர்ந்துவரும் இவ்வேளையில், நாம் நம் நாட்டில் அதனை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
*ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டைப் பலமுறை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். மக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் போக்கு ஏழைகளை எவ்வாறு பாதிக்கிறது?*
நீண்டகாலப் பார்வையில் பார்த்தால், கடந்த இருபது வருடங்களில் இந்தியாவில் மக்கள்நலத் திட்டங்களும், அவற்றுக்கான ஒதுக்கீடுகளும் தொடர்ந்து விரிவடைந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நலத்திட்டங்களைப் பொறுத்தவரை, தற்போதைய ஆட்சியின் சமூகப் பாதுகாப்புக் கொள்கையின் அடிநாதமாக இருப்பது செலவைக் குறைக்க வேண்டும் என்கிற குறிக்கோளே ஆகும். இந்த ஆண்டு, முதியோர் ஓய்வூதியத்தில் மத்திய அரசின் பங்கை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்துமாறு பொருளாதார வல்லுநர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்தது நிதி அமைச்சகம். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முடக்குவதற்காக ஆயத்தமானது இந்த அரசு. பின்னர், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்த முயற்சியைப் பின்வாங்கியது.
பள்ளிகளில் மதிய உணவு மற்றும் சிறு பிள்ளைகளுக்கான அங்கன்வாடிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 2015-16 நிதிநிலை அறிக்கையில் 50 விழுக்காடு குறைத்தது. தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Abhiyaan) மட்டுமே ஓரளவுக்குப் பயன்கள் அளித்திருந்தாலும், அதுவும் மக்களின் இயக்கமாக இல்லாமல், அரசின் இரும்புக்கரம் கொண்டே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது ‘ஆயுஷ்மான் பாரத்’ என்கிற சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பார்த்தல், சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி தெளிவாகத் தெரியும்.
(தொடரும்…)
**நன்றி: ஃப்ரன்ட்லைன்**
**தமிழில்: நா. ரகுநாத்**
**நேற்றைய கட்டுரை:** [பெண் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் கல்வியும் பொருளாதாரமும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/14/15)�,”