பா.சிவராமன்
சென்னை ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் நடக்கும் வேலைநிறுத்தங்களின் பின்னணி என்ன? – விரிவான அலசல்
அக்டோபர் 2 அன்று தங்கள் தொழில் தகராறு பிரச்சினைகள் சம்பந்தமாக உண்ணாவிரதம் இருக்க விரும்பினர் யமஹா, என்ஃபீல்டு, மையோங் ஷின் இண்டஸ்ட்ரீஸ் (MSI) என்ற தென்கொரிய கம்பெனி மற்றும் சென்னை ஒரகடம் பகுதியைச் சேர்ந்த போராடிக் கொண்டிருக்கும் இதர தொழிற்சாலை தொழிலாளர்கள். தொழிற்சாலையிலிருந்து 200 மீட்டர் தள்ளிப் போராடுங்கள் என சென்னை உயர் நீதிமன்றமே அனுமதியளித்த பிறகும்கூட காந்தி பிறந்த தினத்தன்றுகூட அமைதி வழி உண்ணாவிரதத்துக்குத் தமிழக காவல் துறை அனுமதி மறுத்ததால் கோபம்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த 900 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலை வரை காவலில் வைக்கப்பட்டனர்.
ஒரகடம் – திருப்பெரும்புதூர் பகுதியில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் சமீப நாட்களில் ஒரு மினி வேலைநிறுத்த அலையே வீசி வருகிறது. இது மாமூலான கூலிப் போராட்டம் அல்ல. தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணம்தான் என்ன?
நிர்ணயிக்கப்பட்ட கால நிர்ணயத்துக்குபட்ட தற்காலிகத் தொழிலாளர்களை (fixed-term temps/FTTs) அனைத்துத் துறைகளிலும் அனுமதிப்பது என்ற புதிய கொள்கையை இந்த ஆண்டு மார்ச் 20 அன்று மோடி அரசாங்கம் அறிவித்தது. முன்பு இருந்த சட்டரீதியான எந்த வசதியும் இல்லாமல் பணி நிரந்தர உத்தரவாதமும் இல்லாமல் இடைத்தரகர் நிறுவனங்கள் மூலம் அப்ரெண்டிஸ்கள் எனும் பயிற்சியாளர்களை நியமிப்பது என்ற புதிய அப்ரெண்டிஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய வேலைவாய்ப்பு வளர்ச்சித் திட்டம் (National Employment Enhancement Scheme/NEEM) என்ற பெயரில் அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் (AICTE) மூலம் ஏப்ரல் 15 முதல் அனைத்துத் தொழில்களிலும் இது அனுமதிக்கப்பட்டுள்ளது..
**தலைகீழ் மாற்றங்கள்**
இந்தப் புது கொள்கைகள் இந்தியாவில் 70 ஆண்டுகளாக நிலவிவந்த தொழிலுறவு பாணியையே தலைகீழாக மாற்றுகின்றன. தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 ஆகிய சட்டங்கள் அளித்த குறைந்தபட்சப் பணி நிரந்தர உத்தரவாதங்களைக்கூட செல்லாக் காசாக்கின. அமைப்பாக்கப்பட்ட துறையில்கூட எந்தவித பணிப் பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்களை அன்றாடக் கூலிகள் நிலைமைக்கு தரந்தாழ்த்தின.
நாடாளுமன்றத்தை அணுகாமல் எந்தப் பொது விவாதமும் இல்லாமல் சட்டம் எதையும் இயற்றாமல் வெறும் நிர்வாகத் துறை உத்தரவுகள் மூலம் இவற்றைச் செய்தது மோடி அரசு. இதை ஜனநாயக மோசடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தகைய தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக இந்தியாவில் முதல் சவால் சென்னை ஒரகடத்தில்தான் எரிமலையாக வெடித்துள்ளது. இப்புதிய கொள்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இப்போராட்டங்கள் உலக அளவிலும் கவனத்தை ஈர்க்கின்றன. விவரங்களைச் சற்று விலாவரியாகப் பார்ப்போம்.
**போராட்டங்களுக்கான அடிப்படைக் காரணம்**
சட்டரீதியாகத் தொழிற்சங்கம் அமைத்ததாக இரு தொழிலாளர்களைச் சட்டத்துக்குப் புறம்பாக வேலையை விட்டு நீக்கியது, தொழிற்சங்க நிர்வாகிகளாக உள்ள எட்டுத் தொழிலாளர்கள் வீடுகளுக்குக் குண்டர்களை அனுப்பி, சங்கம் அமைக்கும் பணியைக் கைவிடுமாறு மிரட்டியதையடுத்து கோபம்கொண்ட யமஹா தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்கூடக் கொடுக்காமல் உடனடி வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஆனால், தொழிற்சங்கம் அமைத்துப் போராட ஆயத்தமானதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இதைத் தெரிந்துகொள்ள மின்னம்பலம் சார்பில் யமாஹா தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான முத்துக்குமார் அவர்களோடு உரையாடினோம். அவர் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு:
யமஹா தொழிற்சாலையில் 814 நிரந்தரத் தொழிலாளர்களும் 2,000 நிரந்தரம் செய்யப்படாத தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். தாற்காலிகத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் (contract workers) பயிற்சியாளர்களாகவும் (apprentices) வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.17,000இல் இருந்து ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கோ ரூ.9,000 வரை தான் வழங்கப்படுகிறது. ஆனால், இருவர் செய்வதும் ஒரே வேலை. வேலையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்தப் பாகுபாட்டை எதிர்த்து நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகராக ஊதிய உயர்வைப்பெற போராட வேண்டுமானால் முதலில் சங்கம் அமைக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தை அமைத்தனர்.
நிர்வாகம் சங்க முன்னணிகளை வேட்டையாடத் தொடங்கியதால் செப்டம்பர் 21ஆம் தேதியிலிருந்து போராட்டம் வெடித்தது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்த்து அளித்தல்) சட்டம் 1981 (Tamil Nadu Industrial Establishments (Conferment of Permanent Status to Workmen) Act, 1981) வேறெந்த மாநிலத்திலும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்த சட்டம். இச்சட்டப்படி 480 நாட்கள் வேலை செய்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என இருந்தாலும் ஆறு வருடங்களாகப் பணிபுரிந்தாலும் எங்களை நிரந்தரம் செய்யாதது சட்ட விரோதம் அல்லவா என்கின்றனர் தொழிலாளர்கள். எங்கள் ஊதியத்தை மூன்றிலொரு பங்கிற்கும் குறைவாகக் குறைப்பதற்கான சதியல்லவா இது என்று குமுறுகின்றனர்.
அரசே இப்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிகத் தொழிலாளர்களை (fixed-term temps/FTT) வேலைக்கு அமர்த்துவதை அனுமதித்துவிட்டதே உங்களை நாங்கள் ஏன் நிரந்தரம் செய்ய வேண்டும் என வாதிடுகின்றனர் யமஹா நிர்வாகத்தினர். இதுதான் மோதலின் பின்னணி.
**இறங்கி வராத நிர்வாகம்**
ஸ்வீடனின் வோல்வோ மற்றும் அமெரிக்காவின் போலாரிஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழிற்கூட்டு கொண்ட எய்ச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) இப்போது புல்லட் மோட்டார் சைக்கிள் தயார் செய்யும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளது. இங்கும் நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான தற்காலிக வேலைவாய்ப்பையும் (fixed-term employment/FTE) NEEM என்ற பயிற்சித் தொழிலாளர் சுரண்டல் முறையையும் கடைப்பிடிக்கிறது. 1,000 பேருக்கு மேற்பட்ட தற்காலிகத் தொழிலாளர்களிடமிருந்து இக்கம்பெனியில் குறைந்த ஊதியத்துக்கு வேலைவாங்கப்படுகிறது. 6000 என்ஃபீல்டு தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் (Working People Trade Union Council) தலைமையில் ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் சங்கம் என்ற சங்கத்தை அமைத்து போராடத் தொடங்கினர். நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
தொழிலாளர் ஆணையர் இரு தரப்பினரையும் அழைத்து தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து பேசும்படி நிர்வாகத்துக்கும் வேலைக்குத் திரும்பும்படி தொழிலாளர்களுக்கும் ஆணையிட்டார். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனால் நிர்வாகம் பிரச்சினைகள் குறித்து பேசாமல் செல்போன் பயன்படுத்தக் கூடாது, பயிற்சியாளர் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவோம் என மிரட்டுவது போன்ற புதிய கெடுபிடிகளில் ஈடுபட்டதையடுத்து மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.
“வேண்டுமென்றால் வேலைக்கமர்த்து – வேண்டாவிட்டால் வீட்டுக்கனுப்பு (hire and fire)” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆலை நிர்வாகங்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்கி அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு திட்டமான NEEM திட்டத்தை எங்கள் தொழிற்கலையில் நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார் ராயல் என்ஃபீல்டு தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் ஆர்.சம்பத்.
தென்கொரிய நிறுவனமான மையோங் ஷின் இண்டஸ்ட்ரீஸின் (MSI) ஒரகடம் துணை நிறுவனத்தில் 150 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் செப்டம்பர் 5 முதல் போராடி வருகின்றனர். தென்கொரிய தூதரகத்துக்கு எதிர்ப்புப் பேரணி நடத்தி கைதாயினர். இங்கும் இவர்கள் முக்கியக் கோரிக்கை எங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரி என்பதே. ஊதியம் குறைவாக இருப்பதால் ஊதிய உயர்வுக்காகப் போராட இத்தொழிலாளர்களும் சிஐடியு சங்கத்தை அமைத்தனர். இந்நிறுவனம் திருப்பெரும்புதூரிலுள்ள ஹுயுண்டாய் கார் நிறுவனத்திற்கு சேசி(ஸ்) உற்பத்தி செய்து சப்ளை செய்கிறது.
தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. எங்களுடைய கூட்டு பேர உரிமைப்படி பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டும் என நிர்வாகத்தைத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், நிரந்தரம் செய்ய மாட்டேன்; அனைவரும் NEEM பயிற்சி தொழிலாளர்களாக மாறுங்கள் என்கிறது நிர்வாகம். எனவே போராட்டம் தொடர்கிறது.
ஆக, தொழிற்சங்க உரிமைக்கான போராட்டமாகவும் ஊதிய உயர்வுக்கான போராட்டமாகவும் வெளிப்பட்டாலும் பிரச்சினையின் மையக்கரு நிரந்தரமற்ற தாற்காலிகத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லாமல் நிரந்தர வேலைவாய்ப்பு என்றுமே இல்லாமல் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்குவது என்பதேயாகும்.
(தொழிலாளர்கள் விஷயத்தில் அரசின் புதிய கொள்கை தொடர்பான அலசல் நாளை…)�,”