இராமானுஜம்
கடவுளின் தேசம் என அழைக்கப்பட்டு வந்தகேரள மாநிலத்தை இயற்கைச் சீற்றம் சின்னாபின்னமாக்கி சீரழித்துவிட்டுச் சென்றுள்ளது.
மக்கள் மீது அக்கறை கொண்ட உண்மையானஒரு அரசு அதிகாரத்தில் இருந்தால், இத்தகைய பேரிடர் காலங்களில் துயரத்திலிருந்து மக்களைத் தன்னம்பிக்கையுடன் மீண்டு வர என்னென்ன நேர்மையான செயல்பாடுகளை நடைமுறைபடுத்தமுடியும் என்பதை மாநிலத்தை ஆளும் இடது முன்னணி அரசு செயல்வடிவத்தில் அமல்படுத்தி இந்திய தேசத்திற்குக் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிவருகிறது
ஆகஸ்ட் 8 அன்று இரவு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை, மலப்புரம் இடுக்கி போன்ற மலையோர மாவட்டங்களுக்கு விரிவடைந்து , பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களையும் விட்டு விடாமல் அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்த கேரளத்தையும் ஜீவ சமாதியாக்காமல் சின்னாபின்னமாக்கியது.
இறுதி நாட்களில் பத்தனம்திட்டை, ஆலப்புழா மாவட்டங்களில் உக்கிரமாகி ஓய்வு எடுத்தது.
பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மாநகரங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் நிலச்சரிவுகள் மலையோரப் பகுதிகளில் ருத்ர தாண்டவமாடின.
முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் இரண்டாவது வாரத்தில் மகா பெருவெள்ளமாகி மாநிலத்தைச் சின்னாபின்னமாக்கியது…
**செயலில் இறங்கிய இடது முன்னணி**
இத்தகைய சூழ்நிலையில்தான் மாநில அரசு என்ற கதாபாத்திரத்தை வகிக்கும் இடது முன்னணி செயல்பாட்டில் இறங்கியது…
மக்கள் தன்னம்பிக்கை இழந்துவிடாதவண்ணம் ஒவ்வொரு அடியையும் நிதானமாகத் திட்டமிட்டு எடுத்து வைத்தது இடது முன்னணி அரசுக்குத் தலைமை தாங்கும் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை.
பினராயி விஜயன்உதாரணம் கொள்ளத்தகுந்த தலைமைப் பண்புடன் மீட்புப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.
மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தினார்…
சென்னையில் 2015இல் ஏற்பட்ட பெரு வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவையும் அதன் பின்னாட்களில் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எடுத்துக் கொண்ட கால அவகாசத்தைக் காட்டிலும் விரைவாக, வெள்ளம் வடிவதற்குள்ளாகவே கேரளம் மீண்டு வருகிறது என்பது அந்த அரசின் ஆகப் பெரிய செயல்திறனை மற்ற மாநில அரசுகளுக்கு உணர்துகிறது.
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு, சித்தாந்தச் சிக்கல்களைக் கடந்து சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதில் கெளரவம் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துச் சென்றதில் கேரள அரசு காட்டிய நிதானமான செயல்பாடு இந்திய வரலாற்றில் அரிதானது.
**லாவணி பாடும் நேரமல்ல**
பினராயி விஜயன் உள்ளிட்ட இடது முன்னணி தலைவர்கள், மற்ற அரசியல் கட்சியினர் தங்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தபோதும்,
இது விளக்கம் சொல்லக்கூடிய நேரமல்ல. நாங்கள் பதிலளித்து விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. நாங்கள் இப்போது மீட்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறோம் என்று கூறி வீண் விவாதங்களை ஓரம்கட்டிக் கடமையில் கண்ணாக இருந்தனர்.
முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லா மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் ஊழியர்களும் அரசியல் செயல்பாட்டாளர்களும் தன்னார்வக் குழுக்களும் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்றார்கள்…!
மழை துவங்கிய நாள் தொட்டே மத்திய மீட்புக் குழு, ராணுவம் உள்ளிட்ட அனைத்து விதமான சக்திகளையும் பயன்படுத்துவது என்ற நோக்கத்தோடு கேரள அரசின் சார்பாக மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதே நேரம் ராணுவத்தையும், அரசின் மீட்புக் குழுக்களையும் எதிர்பார்த்துக் காத்திராமல் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று மீட்புப் பணிகளை மாநில அரசு செய்துவந்தது.
**மீனவ ராணுவம்**
இதன் ஒரு பகுதியாகத்தான் மீன்பிடித் தொழிலாளர்களை, அவர்களின் படகுகளுடன் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்திய செயல் என்பது நடைமுறைப்படுத்தபட்டது.
கேரள அரசு செய்த அனைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளிலும் தலைசிறந்த ஒன்று என்று இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே இம்முடிவைப் பாராட்டுகிறது.
அந்த மீனவர்களின் சிறு படகுகள் வெள்ளம் பாதித்த பகுதிகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து மனித உயிர்களை அள்ளி அள்ளிச் சேகரித்து பத்திரமாகக் கரை சேர்த்தது.
ராணுவத்தை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் மேற்கொண்ட இந்நடவடிக்கை அளித்த பலன் சாதரணமானதல்ல. விலை மதிப்பில்லாத மனித உயிர்களை அந்த எளிய மனிதர்கள் கரை சேர்த்ததால் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதனால்தான் பினராயி விஜயன் மீனவர்களின் படையே எங்களது ராணுவம் என்று கூறி அவர்களைப் புகழ்ந்து நன்றி தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்ட படகுகள் ஒவ்வொன்றுக்கும் நாள் ஒன்றுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த எல்லாப் படகுகளையும் மறு சீரமைப்பதற்கான உதவியை அரசே செய்யும் என்றும், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
தங்கள் கடமையை நிறைவேற்றி சொந்த ஊருக்கு திரும்பும் அந்த ஏழை மீனவர்களுக்குச் செல்லுமிடமெல்லாம் மக்கள் வரவேற்பளித்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மாநில அரசு மீட்புப் பணிகளில் ராணுவத்தை ஈடுபடுத்தாததுதான் உயிரிழப்புகளுக்கான காரணம் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் கூறின.
மத்திய அரசு, கேரள அரசு கேட்ட நிதி உதவியை அளிக்காதபோதும் கேரள முதல்வர், மத்திய அரசு அளித்த நிதிக்கு நன்றி தெரிவித்ததோடு அதிருப்தியை வெளிக்காட்டாது தங்களுக்குக் கிடைத்த உதவியைச் சரியான முறையில் உபயோகப்படுத்தும் பணியைத் தொடருவதில் கவனம் செலுத்தினார்.
(நிவாரண முகாம்களின் செயல்பாடுகள், போக்குவரத்து வசதிகள் சீரமைப்பு முதலான அம்சங்கள் குறித்த பார்வை மாலை 7 மணிப் பதிப்பில்)
�,”