வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
*ஈரோடு திமுக மாநாட்டில் பேசியதன் சுருக்கம்*
தமிழக மக்கள் அறிந்திடாத நதிநீர்ப் பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை அறிவோம். ஆனால், இன்னும் அறியப்படாத பல தமிழக நதிநீர் தாவாக்கள் தமிழக மக்களின் கவனத்துக்கு வராமல் அரசின் கோப்பில் மட்டுமே பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாக உள்ளன. அவற்றில் மாவட்ட வாரியாகச் சில பிரச்சினைகளைக் கூறுகிறேன்.
– கன்னியாகுமரி மாவட்டத்தில் 1963இல் திறக்கப்பட்ட நெய்யாறு அணையை கேரளம் மூடிவிட்டது. இதனால் விளவன்கோடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேரளத்தின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளது.
– நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே 1989இல் கட்டப்பட்ட அடவி நயினார் அணையை இடிக்க கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடப்பாளை, மண்வெட்டியோடு வந்தார். அங்கும் நதிநீர் வரத்து தடுக்கப்பட்டுள்ளது.
– நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி அருகே அமைந்த செண்பகவல்லி அணையைத் தமிழகத்துக்குத் தெரியாமல் கேரள அரசு ஊழியர்கள் நமது எல்லைக்கே வந்து 1994ஆம் ஆண்டு மார்ச் 14இல் இடித்துத் தள்ளினர். இதைப் பற்றி 19 ஆண்டுகள் ஆகியும் தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.
– நெல்லை மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அருகே உள்ளார் திட்டம் நிறைவேற்றுவதில் கேரளம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தவித முயற்சியும் எடுத்துவருவதாகத் தெரியவில்லை.
– விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே ரூ.300 கோடி மதிப்பீட்டில் அழகர் அணைத் திட்டம் 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் போராடியும் கேரளத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 1970இல் இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்தன. இதனால் வானம் பார்த்த வறட்சியான கரிசல் பகுதிகள் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் பாசன வசதி பெறும். சொல்லி என்ன பயன்? திட்டம் நிறைவேறுவதாகத் தெரியவில்லையே!
– தேனி மாவட்டத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் ஆலடி அணை கட்ட 1970இல் திட்டமிடப்பட்டது. இதனால் பெரியகுளம், நிலக்கோட்டை, திண்டுக்கல் வரை பாசன வசதி பெறும். இதற்கும் கேரளம் அனுமதி தராமல் புறக்கணிக்கின்றது.
– கோவை மாவட்டத்தில் தமிழகம் 130 கோடி ரூபாய் செலவில் கட்டிய ஆழியாறு – பரம்பிகுளம் முறையாகச் செயல்பட்டால் 24 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அதே போன்றதுதான் லட்சக்கணக்கான ஏக்கருக்குப் பயன் தரும் பாண்டியாறு – புன்னம்புழா திட்டம். இரண்டு பிரச்சினைகளிலும் கேரளம் தொடர்ந்து பாராமுகம் காட்டிவருகிறது.
இப்படித் தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் அண்டை மாநிலங்களுடன் பிரச்சினை உள்ளது.
இது மட்டுமல்லாமல், மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்களாவன:
1. மேற்கு நோக்கி கேரளத்தில் அரபிக் கடலில் பாயும் நதிகளின் உபரி நீரைத் தமிழகம் திருப்பும் திட்டம் – 1973இலிருந்து விவாதத்தில் உள்ளது.
2. கேரளத்தில் இருக்கும் அச்சன்கோவில் – பம்பை – தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறோடு இணைப்பு
3. பம்பை – கங்கை இணைப்பு ஆகிய திட்டங்களுக்கு கேரளம் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது.
இந்த மூன்று திட்டங்களும் சாத்தியமானது என வல்லுநர் அறிக்கைகள் மத்திய அரசுக்கு வழங்கியும் கேரளத்தின் பிடிவாதத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
நந்தி மலையில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கரில் பாசன வசதி தரும் தென்பெண்ணையில் கர்நாடகமும் ஆந்திரமும் பிரச்சினை செய்கின்றன.
பொன்னியாறு, தெலுங்கு கங்கை, திருவள்ளூர் மாவட்டத்தில் 6,125 ஏக்கர் பாசன வசதி பெறும் கொற்றலை ஆற்றுத் தண்ணீர் வராமல் ஆந்திரம் தடுப்பு அணைகளைக் கட்டுகிறது. பழவேற்காடு ஏரிப் பிரச்சினையில் தொடர்ந்து ஆந்திரம் சிக்கலைத் தருகிறது. தமிழக மீனவர்களும் பழவேற்காடு ஏரிப் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர்.
கேரளத்தில் நீர்வளம், வனவளம் அதிகம். கர்நாடகத்தில் நீர்வளம், தாதுவளம் அதிகம். ஆந்திரத்தில் நீர்வளம், தாதுவளம் அதிகம். தமிழகத்தில் நீர்வளம் குறைவு. ஆனால், தமிழகத்தில் மனித ஆற்றல் அதிகம். நம்மிடம் மின்சாரம், மணல், அரிசி, காய்கறி எனப் பல அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை மறந்து அண்டை மாநிலங்கள் பிடிவாதமாக இருப்பது கவலையைத் தருகிறது.
இவ்வாறு இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளன. ஆனால், பன்னாட்டு அளவில் நாடுகளின் நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் எகிப்து நதி பிரச்சினை குறித்து தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இடையே ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தத்தில் பேசித் தீர்த்தன.
அமெரிக்காவில் டெலவர் நதி, ஆஸ்திரியாவுக்கும் – துருக்கிக்கும் டான் நதி, ஜெர்மனிக்கும் – பிரான்சுக்கும் ரைன் நதி, ஆப்பிரிக்காவில் நைஜர், செனகல், இஸ்ரேல் – பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே ஜோர்டான் நதி, துருக்கி – சிரியா – இராக் வழியாகப் பாயும் யூப்ரடீஸ் போன்ற நதிநீர்ப் பிரச்சினைகளுக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் அஸ்வான் அணைக்கட்டுப் பிரச்சினையில் சூடானுக்குச் சாதகமாகவும் (ஆயக்கட்டுப் பகுதி) கொலம்பியா நதிநீர்ப் பிரச்சினையில் அமெரிக்கா – கனடா ஒப்பந்தம் மூலமும் இவ்வாறே தீர்க்கப்பட்டன.
நேபாளத்திலிருந்து இந்தியா வழியாகச் செல்லும் கங்கை நதியின் பராக்கா தடுப்பு அணை சம்பந்தமாகப் பிரச்சினை ஏற்பட்டபோது வங்கதேசம் மிகவும் பிரச்சினை செய்தது. அந்நாட்டோடு பேசித் தீர்க்கப்பட்டது.
உலக அளவில் பல நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது, இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க தாமதமும், பிடிவாதமும், தேவையற்ற சச்சரவுகளும் ஏன் என்று தெரியவில்லை.
நேரு ஆட்சிக் காலத்தில், ஹிராகுட் அணை, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தில் மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களுக்கிடையே தகராறு எழுந்தது. அப்போது சட்டம் மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர், கண்டிப்போடு அணுகி அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார். அதேபோன்று ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட நதிநீர்ப் பிரச்சினை அம்பேத்கர் நடந்துகொண்ட கண்டிப்பான முறையில் தீர்த்துவைக்கப்பட்டது. அம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறை இப்போது ஏன் இல்லாமல் போய்விட்டது?
*(உரையின் இறுதிப் பகுதி நாளை காலை 7 மணிப் பதிப்பில்)*
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)�,”