மதரா
கேரள வெள்ளம் தொடர்பாகக் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் நடனம்” கவிதைக்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மோசமான எதிர்வினை ஆற்றியதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரனுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக மனுஷ்யபுத்திரன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். எழுத்தாளர்கள் பலரும் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதே கருப்பொருளில் கவிதைகளை எழுதி பகிர்ந்துவருகின்றனர்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தயாராக இல்லாத இத்தகைய மிரட்டல்கள் தொடர்பாக எழுத்தாளர் அஜயன் பாலாவிடம் தொடர்புகொண்டு பேசினோம். “எழுத்தாளன் என்பவன் எதிர்காலத்தின் முதுகெலும்பு. கவிஞன் இல்லையென்றால் கடவுளே இங்கு இல்லை. மனிதனையும் கடவுளையும் இணைத்து எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை. கவிஞர்கள் உருவாக்கும் கருத்துகள்தான் உலகையே மாற்றுவதாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பணத்துக்கு அப்பாற்பட்டு இயங்குவது இங்கு கவிதை எழுதுவதாகத்தான் உள்ளது. கவிஞனின் கருத்துகளுக்காக அவனுக்கு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.
மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதை குறித்து தனது விமர்சனத்தை முன்வைக்கும் கவிஞர் போகன் சங்கர் இந்து அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு அவர் ஆளாவதற்கு அவர் பிறந்த மதத்தையே காரணமாக சொல்கிறார். “மனுஷ் எழுதிய கவிதையில் எந்த தெய்வ நிந்தையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அது ரொம்ப சுமாரான கவிதை என்பதைத் தவிர அதில் பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. willful misunderstanding and misinterpretation என்பது சமீப காலங்களில் ஓர் அரசியல் உத்தியாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாத் தரப்புகளுமே அதைச் செய்து வருகின்றன. சமீபத்தில் மார்க்கண்டேய கட்ஜுவை அப்படி ‘புரிந்து’ கொண்டு சிலர் தாக்கியதைப் பார்த்தேன். அவர் ஒரு காஷ்மீரி பிராமணர் என்பதே அவரைத் தவறாக புரிந்துகொள்ள போதுமான காரணமாக இருந்தது. மனுஷ் விஷயத்தில் அவர் பிறப்பால் ஓர் இஸ்லாமியர் என்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கருத்துரிமை இல்லை என்னும் முழக்கம் முன்பைவிட பாஜக அரசு பொறுப்பேற்ற பின் அதிக அளவில் முன்னெடுக்கப்படுகிறது. தனது கருத்துகளைக் கூறியதற்காகவே எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.
**பொருட்படுத்த வேண்டாம்**
கேரள வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என எழுத்தாளர் பிரேமா ரேவதி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். “வெறுப்பை உமிழும் அடிப்படைவாத அற்பர்கள் இக்கணத்தை அவர்களின் கடவுள் பற்றியதாய் மாற்ற முனைகிறார்கள். அதைச் சட்டையில் விழும் பறவைகளின் எச்சத்துக்குத் தரும் அளவு கவனத்தைக்கூட நாம் தரக் கூடாது” எனக் கூறியுள்ளார். ஆனால், அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியாது என்பதையே சமீபகால நிகழ்வுகள் காட்டுகின்றன.
சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதே கேரள வெள்ளத்துக்குக் காரணம் என இந்துத்துவவாதிகள் சமூக வலைதளங்களில் பேசிவருவதற்கும் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பேராசிரியர் சுந்தரவள்ளியும் முகநூலில் தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதற்காக சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் காவல் துறையிடம் புகாரளித்துள்ளனர்.
மனுஷ்யபுத்திரன், சுந்தரவள்ளி ஆகியோரின் கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்படும் செயல்களுக்கு தமுஎகச கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் சர்ச்சையை ஏற்படுத்தியபோது உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. தமுஎகசவின் அறிக்கையில் அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கற்பனையான கதாபாத்திரங்களைக் கொண்ட எந்தவொரு கவிதை, நாடகம் அல்லது நாவல் ஆகியவற்றில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது அவதூறு என்ற அம்சத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் மிகுந்த மதிப்பிற்குரிய ஒன்றாக உள்ளன. மாறுபட்ட கருத்து அல்லது கருத்து மாறுபாடு என்பது மதிக்கப்பட வேண்டும் என்பதோடு ஜீரணிக்கப்பட முடியாத விமர்சனத்தால் அது தடுக்கப்படக் கூடாது. மாறுபட்ட வகையிலான, கடுமையான கருத்து வெளிப்பாடுகளும் வெளிப்படையான கருத்துகள் என்ற வகையிலேயே நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதென்பது ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.”
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளதோடு இந்தத் தருணத்தில் நினைவுகூரத்தக்கவையாகவும் உள்ளது.�,”