**அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றனவா? -2**
*(அரசுப் பள்ளிகள் குறித்துப் பொதுவாக எதிர்மறை எண்ணங்களே நிலவி வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகள் உண்மையிலேயே தரமில்லாதவையா, கட்டமைப்பு இல்லாதவையா, பாதுகாப்புக் குறைபாடு உள்ளவையா, தரமான கல்வி இங்கே கிடைக்காதா என்பன போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து ‘சம கல்வி இயக்கம்’ என்னும் அமைப்பு தமிழ்நாடு அளவில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டது. தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களைத் தெரிவு செய்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கிடைத்த இந்தத் தரவுகளையும் அவற்றின் அடிப்படையிலான பரிந்துரைகளையும் ஓர் அறிக்கையாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ளது. பல்வேறு உண்மைகளை உணர்த்தும் அந்த அறிக்கையைத் தொடராக வெளியிடுகிறோம். இத்தொடரின் 2ஆம் பகுதி இது – ஆசிரியர்)*
**பாடவாரியாக ஆசிரியர் எண்ணிக்கை:**
**மொழிப்பாடம்:**
தமிழ் மொழிப் பாடத்துக்கு 100% பள்ளிகளில் 5-10 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆங்கில பாடத்துக்கும் 96% பள்ளிகளில் 5-10 ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்கள் உள்ளனர். 6% பள்ளியில் ஆங்கிலப் பாடத்துக்கான மொழி ஆசிரியர் பணியில் இல்லை. இதர பாட ஆசிரியர்கள் அந்த பணியைக் கூடுதலாகச் செய்கின்றனர்.
**அறிவியல் மற்றும் கணிதப் பாடத் திட்டம்:**
28% பள்ளிகளில் 6-15 ஆசிரியர்கள் அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். 50% பள்ளிகளில் அறிவியல் பாடத்துக்கு 5 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றுகின்றனர். 22% பள்ளிகளில் அறிவியலுக்கென்று ஆசிரியர்கள் பணியில் இல்லை. கணிதப் பாட ஆசிரியர்களே அப்பணியைச் செய்கின்றனர். அறிவியலுக்கென்று சிறப்பு ஆசிரியர்கள் பணியிலில்லாதது மாணவர்களுக்கு இழப்பே. அறிவியல் பாடம் பயின்று மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த இதர மேற்படிப்புகளைத் தொடர்வதற்கு இந்த இடைவெளி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பள்ளிகளிலும் கணித ஆசிரியர்கள் பணியிலுள்ளனர். 72% பள்ளிகளில் 5 கணித ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுமானால், இன்னும் அதிக மாணவர்கள் கணிதப் பாடப் பிரிவில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறுவர்.
**கணினி, வணிகவியல், வரலாறு மற்றும் பொருளாதாரம்:**
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி, வரலாறு, வணிகவியல், பொருளாதாரப் பிரிவு ஆசிரியர்கள் பணியிலுள்ளனர். இந்தப் பாடப் பிரிவு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிய அளவு உள்ளதால், மாணவர்கள் இப்பாடப் பிரிவுகளில் சிறந்து விளங்க ஏதுவாக உள்ளது. இந்த பாடப் பிரிவுகளில் மேற்படிப்பு பயில அது ஏதுவாக அமைகிறது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பணியில் இல்லை. 28% அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. கணிதப் பாடத்திட்டமும் தொழிற்கல்வியுடன் இணைந்த பாடத்திட்டம் என்பதால் மாணவர்கள் இப்பாடத்திட்டத்தினைப் பயில முனைப்பு காட்டுவதில்லை.
**கலை:**
61% பள்ளிகளில் கலை மற்றும் கைவினைப் பாடத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாடம் சாரா கலைச் செயல்பாடுகள் மாணவர்களுக்கு மிகுந்த ஈடுபாட்டைத் தூண்டக்கூடியது. எனினும், 39% பள்ளிகளில் கலைப் பாடத்திட்டத்துக்கென்று ஆசிரியர்கள் இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
**கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள்:**
அனைத்துப் பாடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் கல்வியியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களே பணியில் உள்ளனர். மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளைத் தமிழக அரசு கல்வியியலில் பட்டயப் படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களை மட்டுமே பணிக்கமர்த்திச் சிறந்த முறையில் பாடம் கற்பிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. கணினி, தொழிற்கல்வி மற்றும் கலைப் பாடத்திட்டங்களுக்கு கல்வியியல் புலத்தில் பட்டம் பெறாதவர்கள். ஆனால், இவர்கள் அரசு தேர்வாணைய விதிமுறைகளுக்குட்பட்டுத் தெரிவு செய்யப்பட்டவர்களே. ஒரு சில சொற்ப நபர்களே, தற்காலிகப் பணி நிரவல் மூலமாகப் பணிசெய்கின்றனர்.
**வாரத்துக்கான வகுப்புகள்:**
அரசுப் பள்ளியில் பணியாற்றும் 56% ஆசிரியர்கள் 21 முதல் 30 வகுப்புகள் வரை ஒரு வாரத்துக்கு நடத்துகின்றனர். தமிழ்நாடு கல்வி விதிகளின் அடிப்படையில் ஓர் ஆசிரியர் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு ஒரு வாரத்துக்கு 28 வகுப்புகள் எடுக்க வேண்டும். அதனடிப்படையில் 56% ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கின்றனர். ஆனால், 22% ஆசிரியர்கள் 31-40 வகுப்புகள் எடுக்கின்றனர். 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தனி வகுப்புகள் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்பெடுப்பது இதற்கான காரணங்கள்.
**பணி நிரந்தரம் மற்றும் தொகுப்பு ஊதியம்:**
தமிழ், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் ஏறக்குறைய 100% நிரந்தர ஆசிரியர்களும் அரசு ஊதியம் பெறுகின்றனர். ஆங்கிலப் பாடம், கணினி போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், 5% ஆசிரியர்களே தொகுப்பூதியம் பெற்றுக்கொண்டு பணியில் உள்ளனர். ஆசிரியர் பணிகளை உடனடியாக நிரப்புதல் மற்றும் போதிய ஊதியம் அளித்தல் சிறந்த செயல்பாட்டினை அரசுப் பள்ளிகளில் கொண்டுவரும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
**மாணவர் ஆசிரியர் விகிதம்:**
உயர்நிலைப் பள்ளியில் 84% பள்ளிகளில் ஓர் ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதமும் 78% மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு 60-க்கும் குறைவான மாணவர்கள் எனும் விகித்தில் உள்ளனர். தமிழ்நாடு அரசு கல்வி விதிமுறைகளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 1:30 என்பதே பொதுவான மாணவர் ஆசிரியர் விகிதமாகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் விதிமுறைகளின்படி 1:45 என உயர்நிலைப் பள்ளிகளுக்கு விகிதம் உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு பாடப் பிரிவு 1:60 என்பதாகும். இரண்டு பாடப் பிரிவுத் திட்டம் உள்ள பள்ளிகளுக்கு 6 ஆசிரியர்கள் மற்றும் 2 மொழி பாட ஆசிரியர்கள் என்பது அரசின் விகிதமாக உள்ளது (G.O.Ms.No,525/Sch.Edn(D1) department dated 29-12-97).
**ஆசிரியர்களும் பயிற்சியும்:**
96% ஆசிரியர்கள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால் வழங்கப்படும் பயிற்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். மாவட்ட அளவில் உள்ள பயிற்சி மையங்களில் சனிக்கிழமைகளில் வழங்கப்படும் கல்வி, மாணவர்களை கையாளும் திறமை, குழந்தை உரிமைகள் மற்றும் உளவியல் சார்ந்த, தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் யுக்திகள் என ஆசிரியருக்கான பன்முகத் திறமைகளை வளர்க்கும் வண்ணம் இந்த பயிற்சிகள் அமைவதை ஆசிரியர்கள் வரவேற்கின்றனர்.
**ஆசிரியர்களும் மாத ஊதியமும்:**
உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் 44 விழிக்காட்டினருக்கும் மேல் ரூ.35,000/-க்கு மேல் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 61 விழுக்காட்டினர் ரூ.50,000/-க்கு மேலும், 22 விழுக்காட்டினர் ரூ.60,000/-க்கு மேலும் ஊதியம் பெறுகின்றனர். அரசு ஆசிரியர்களுக்குத் தரமான ஊதியம் வழங்குவதால், அவர்களால் வருமானம் குறித்த குறைபாடுகள் இல்லாமல் தொடர்ந்து முழு நேரப் பணி செய்ய இயல்கிறது.
**வகுப்பறை எண்ணிக்கை:**
72% வகுப்பறைகளில் 40-க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்கின்றனர். வகுப்பறைகளில் மாணவர் நெரிசல் இல்லை. எண்ணிக்கை சீராக இருப்பதால் ஆசிரியர்களுக்கும் திறம்படப் பயிற்றுவிக்க வாய்ப்பாக உள்ளது.
**ஆய்வகம் மற்றும் பயன்பாடு:**
94% பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் முறையாக உள்ளன. 95% மாணவர்கள் ஆய்வகத்தை வாரத்துக்கு 5-7 மணிநேரங்களாவது பயன்படுத்துகின்றனர். 5 விழுக்காட்டினர் மட்டுமே ஆய்வகத்தினை முறையாகப் பயன்படுத்துவதில்லை. ஆய்வகப் பயன்பாடு மாணவர்களின் செயல்முறைப் பயிற்சிகளை ஊக்கப்படுத்துகிறது.�,”