‘அறம்’ கோபி – பகுதி 2
சந்திப்பு: தமயந்தி
(கோபி… அறம் படத்தின் இயக்குநராக இன்று சமூகம் கொண்டாடும் கோபி தெளிந்த அரசியல் பார்வையும் நீடித்த உழைப்பும் பரந்த வாசிப்பனுபவமும் சமரசமற்ற மனிதமும் நிறைந்தவர். ‘நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்’ என்னும் இவரது நாவல் இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டிய முக்கியமான நாவல். இயக்குநராக இவரது பெரும் வெற்றிக்குப் பின்னால் நெடிய போராட்டங்கள் உள்ளன. தனது பயணங்கள், பார்வைகள், சமூக மாற்றத்துக்கான சிந்தனைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். கூர்மையான சமூக விமர்சனப் பார்வையும் மேலான மனிதநேயச் சிந்தனையும் ஒருசேரப் பிரதிபலிக்கும் இவரது வார்த்தைகள் ஆழமான சலனங்களை ஏற்படுத்த வல்லவை. அவருடனான உரையாடலின் தொகுப்பை இங்கே தருகிறோம் – ஆசிரியர்)
**பாரம்பரியத்திலிருந்து வேரறுத்த ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்?**
இதைச் செய்யாதே என்று அம்மாவும், அங்கே போகாதே என்று அப்பாவும் ஒரு சின்ன வட்டம் போட்டு கட்டுப்பாட்டிற்குள் இருக்கச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணமே ஒரு சுயசார்புதான். ஒருவேளை பெற்றோரிடம் அதைச் சொல்ல முடியவில்லை என்றாலும், அந்த எண்ணம் ஒரு விடுதலை எண்ணம்தான். இந்தத் தலைமுறையினர் அவர்கள் விரும்பியவற்றைச் செய்கிறார்கள், விரும்பியவற்றைப் படிக்கிறார்கள். ஆனால், அவை வேறொருவரால் கொடுக்கப்பட்டவை என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இதற்குப் பெயர் விடுதலை இல்லை. நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருந்தபோது ஒரு பாதுகாப்போடு இருந்தீர்கள். அது உங்கள் பெற்றோர் கொடுத்த பாதுகாப்புணர்வு இல்லை. உங்கள் விடுதலை எண்ணம் கொடுத்த உணர்வு அது.
உங்களுக்கான அனைத்தையும் நீங்களே தேர்ந்தெடுத்திருப்பீர்கள். பிடிக்கவில்லையெனில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பீர்கள். ஆனால், இந்தத் தலைமுறையினர் அப்படியில்லை. எல்லாமே அவர்களுக்கு தரப்பட்டது. ஏனென்றால் இது ஒரு சந்தை. அரசு என்பதுதான் மக்களை நடத்திச் செல்லும். அதுதான் காலாகாலமாக நடந்துவருகிறது. அது நல்ல அரசோ, கெட்ட அரசோ என்பதல்ல விஷயம். ஆனால், இப்போது அரசையும் தாண்டி, வணிகச்சந்தை மக்களோடு நேரடித் தொடர்பு வைத்துகொண்டு, மக்களை நடத்திச் செல்கிறது. எந்த அரசு மக்களை ஆளலாம், ஆளக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் இடமாக வணிகச்சந்தை இன்று இருக்கிறது. குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கிறார்கள் என்பதற்காக அது குழந்தைகளுக்கானது என்றாகிவிடாது. கார்ட்டூனைக் குழந்தைகள் பார்க்கச் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு வணிகம் நடந்துள்ளது. அதைப்போலவே டிவி தொடர் என்பது பெண்கள் விரும்பிப் பார்க்கும் காரணத்தினால், அது பெண்களுக்கானது என்று சொல்லிவிட முடியாது. இதைப் பார், இதைச் செய், இதைச் சாப்பிடு, இதைப் படி, இதை விளையாடு என்று ஒரு சந்தை முடிவு செய்கிறது. குளிர்பானங்களாக, செல்போன்களாக நிறைய கருவிகளும் உணவுகளும் இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்குள் இந்தக் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால்தான் அவர்களிடம் இந்தச் சுயசிந்தனை இல்லை.
கிழக்கிந்திய கம்பெனி தலித்துகளுக்குக் கல்வி கொடுத்ததற்குக் காரணம் சாதி ஒழிப்பு அரசியல் கிடையாது. அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். அதாவது, இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகளில் விலகி நிற்கிற ஆண்களை தனக்கான தொழிலாளிகளாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வேலையை அது செய்தது. தலித்துகள் சட்டை அணியக் கூடாது என்று ஆதிக்க சாதியினரால் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் கம்பெனிக்குத் தனது சட்டை விற்றாக வேண்டும். இன்றைக்கு எப்படி எல்லா வீடுகளிலும் இரு சக்கர வாகனம் இருக்கிறதோ அதுபோன்றுதான். நாம் கற்பனை செய்துபார்த்தால், நாமே சொந்தமாக யோசித்து அதை வாங்கினதுபோல இருக்கும். ஆனால் அது உண்மையல்ல. ஒரு இலட்சம் கொடுத்து நாம் எங்கே இருசக்கர வாகனம் வாங்குவது என்ற எண்ணம் போய், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலே இருசக்கர வாகனம் கிடைக்கிறது என்ற எண்ணம் வந்ததுதான் காரணம். அந்தத் தவணை முறைக்குப் பின்னால் ஒரு உலகச் சந்தை இருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் பெருநிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், பெரு முதலாளிகளின் கார்களுக்கும் மட்டும்தான் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஒவ்வொரு கடைக்கோடி மனிதனும் அதைப் பயன்படுத்தினால் மட்டுமே வியாபாரத்தைப் பெருக்க முடியும் என்று இருசக்கர வாகனம் விற்பதற்கு வகை செய்யப்பட்டது. உதாரணத்திற்கு, 50 கோடி பேர் இருசக்கர வாகனம் உபயோகிக்கிறார்கள் என்றால், தினமும் ஒரு லிட்டர் பயன்படுத்தினால், ஒரு நாளைக்கு ஐம்பது கோடி லிட்டர் பெட்ரோல் வியாபாரம் செய்யப்படுகிறது. அது பெட்ரோல் முதலாளிகளுக்கான லாபமாக அமைகிறது. ஆக, முதலில் தங்கள் பொருட்களைப் பரவலாக்குகிறார்கள். பரவலாக்கப்பட வேண்டுமெனில் உள்ளே இருக்கிறது எல்லாம் வெளியே வந்தாக வேண்டும். வீட்டுக்குள்ளே இருக்கிற பெண்கள் எல்லாரும் வெளியே வந்தாக வேண்டும்.
இரண்டு விதமான விடுதலை இங்கு நடக்கிறது. முதலாவது, ஒடுக்குமுறைகளை முதலாளிகளே கட்டுடைப்பார்கள். மற்றொன்று, விடுதலையாளர்களும் கட்டுப்பாடுகளை உடைப்பார்கள். இரண்டையும் நாம் வேறுவேறாகப் பார்க்க வேண்டும். பூனை குறுக்கே போனால் வெளியே போகக் கூடாது என்பது நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு சடங்கு மனோபாவம். ஆனால், எட்டு மணிக்கு வேலைக்குப் போகவில்லை எனில் முதலாளிகள் கோபித்துக்கொள்வார்கள். அப்போது இதெல்லாம் பழைய பஞ்சாங்கம் என்று பகுத்தறிவு அங்கே பேசப்படுகிறது. ஆக, இது பகுத்தறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல, முதலாளித்துவத்தின் சுதந்திர எண்ணமும் சேர்ந்தது. இப்படி, தனது உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பழைய மூடநம்பிக்கைகளையும் முட்டாள்தனங்களையும் முதலாளிகள் கட்டுடைப்பார்கள். அதைப் போலத்தான் பெண் அடிமைத்தனமும் முதலாளிகளால் கட்டுடைக்கப்பட்டது என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டும்.
**இங்கெல்லாம் கிராமங்களில் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் வடநாடுகளில் அப்படி அவ்வளவாக இல்லை. இதனாலேயே அவர்களுக்கு பணமதிப்பிழப்பு போன்ற விஷயங்களில் சரியான புரிதல் இல்லாமல் மோடி என்ற பிம்பத்தை மிகவும் பெரிதாக உணர்கிறார்கள். நான் அங்கு போயிருந்தபோது சமைத்துக்கொண்டிருந்த ஒரு பெண், நீங்கள் கல்லூரிக்குச் சென்றிருக்கிறீர்களா என்று இயல்பாக என்னைப் பார்த்துக் கேட்டார்கள். ஆம் என்று நான் சொன்னபோது, எனக்கு அது பெரிய ஆசை என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டார்கள். அதைப்போல, வேலூர் கலவரத்தின்போது அங்கே நான் சென்றபோது கவனித்தேன். பள்ளிப் படிப்பை இடையில் கைவிட்டிருந்தவர்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. நமது அரசுக்கு இதில் எந்தக் கவலையும் இல்லையே?**
அரசு நமக்கு இதைச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இது தீவிரமாக விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேநேரத்தில் அந்தக் குழந்தைகளிடம் நேரடியாகப் போக வேண்டியது அமைப்புகளுடைய வேலை என்று நான் நினைக்கிறேன். நான் ஏறக்குறைய 160 மாணவர்களைக் கல்லூரிகளில் சேர்த்திருக்கிறேன். 490 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவன் ஏன் கல்லூரியில் படிக்கவில்லை என்று கேட்டபோது பணம் இல்லை என்று சொன்னான். முதல்வரைத் தொடர்புகொண்டு வேண்டியதைச் செய்தேன். அவன் ஒரு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.
படிப்பு பணம் சம்பாதித்துத் தருபவர்களுக்குப் பணம் சம்பாதித்துத் தரட்டும். நமக்கு ஒரு மரியாதையைச் சம்பாதித்துத் தரட்டும் என்பதை அறம் திரைப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். டிகிரி படித்திருக்கிறேன் என்று ஒருவன் சொல்லும்போது அவனுக்கு ஒரு மரியாதை கிடைக்கிறது. ஆனால், ஆறாம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று சொல்லும்போது, ‘அப்படியே அந்தத் தட்டை எடுத்து போட்டுட்டு, சாணியை அள்ளிப் போடு’ என்று சொல்லப்படுகிறது. ஆக, அந்த மரியாதையைக் கல்வி தந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது முதலாளித்துவத்தின் வழிவந்த கல்வியாகவோ, மரபுவழி வந்த கல்வியாகவோ இருக்கட்டும். கல்வி மரியாதையைத் தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மரியாதையை மற்றவர்கள் தருகிறார்களோ இல்லையோ, நாமே அதை உருவாக்கிக்கொள்ளும் தைரியத்தைக் கல்வி தந்துவிடும்.
“பி.ஏ. படிச்சிருக்கிறேன், என்ன சாணி அள்ள சொல்ற?” என்று எதிர்க் கேள்வி கேட்பான். படிக்கவில்லை எனில், “நம்ம தலையெழுத்து அது” என்று சொல்லி சாணியை அள்ளிப் போடுவான். ஆக, ஒடுக்கப்பட்ட சமூகம் கல்வி பெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் படிக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியம். ஏனென்றால், கல்வி என்பது ஒரு ஊதியத்தைப் பெற்றுத்தரும் எனில், அந்த ஊதியத்தின் வழியாக அவளால் வாழ்க்கை நடத்த முடியும். ஒரு ஆணை நம்பி அந்தப் பெண் இருக்க வேண்டிய தேவை இருக்காது. ஒரு அரசோ, அமைப்போ, குடும்பமோ, தனிநபரோ ஆண் பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும். அதிலும் அதிகாரத்துவம் வாய்ந்த கல்வியைக் கற்கச்செய்வது அதைவிட சிறப்பு. அரசு அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் படித்திருக்க வேண்டும். ஒரு தனியார் பள்ளி தனது லாபத்திற்காக வீட்டிற்கு வாகனத்தை அனுப்பும்போது, ஏன் ஒரு அரசு அனுப்பக் கூடாது? இந்தப் பெண் சமூகம் அரசிற்கு இலாபம் இல்லையா? எங்கேயோ மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை வாகனம் அனுப்பிக் கூட்டிக்கொண்டு வருவது அரசின் கடமை. மக்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று மருத்துவம் கொடுக்க வேண்டும். அதைப் போல, தேடிப் போய் கல்வியைக் கொடுக்க வேண்டும். அரசு இதைச் செய்யாதபட்சத்தில், மக்களுக்கு அரசை வந்து சந்திக்க வேண்டிய தேவை என்ன? அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அரசு எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்? அரசின் சட்டம் எப்படி அவர்களைப் பாதிக்கும்? சட்டத்துக்கு முன் ஏன் அவர்கள் வந்து கைகட்டி நிற்க வேண்டும்? சிறைச்சாலைக்குள் ஏன் வர வேண்டும்? நீதிமன்றத்தின் முன் ஏன் பணிய வேண்டும்? அரசு மக்களைப் பற்றி அக்கறையே செலுத்தவில்லையே.
மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அவர்களுக்கான எல்லா வேலைகளையும் அரசு செய்திருக்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். ஆதார் அட்டை இந்தியாவின் ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணிக்கிறதோ இல்லையோ, ஆனால் இஸ்லாமியர்களைக் கண்காணிக்கிற ஒரு வழியாக அரசு அதை வைத்திருக்கிறது என்று மட்டும் புரிந்துகொள்ள முடியும். அதேநேரத்தில் மக்கள் சாப்பிட்டார்களா, நல்ல தரையில் படுத்துத் தூங்கினார்களா என்பதைக் கண்காணிப்பதும் அரசின் பொறுப்புதானே? எதையுமே செய்வது இல்லை.
**கடற்கரை அருகிலிருக்கும் பொதுக் கழிப்பிடங்களை அடைத்து வைத்திருப்பதால், அங்கு குடிசைகளிலிருக்கும் பெண்கள் மாலையில்தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால் சாப்பிட்டால் கழிப்பிடம் செல்ல வேண்டும். இருட்டின பின்னர்தான் கால்வாய்க்குப் போக முடியும். மனித உணர்வு சார்ந்து அரசு எதையுமே இதில் செய்யவில்லையே?**
(நேர்காணலின் அடுத்த பகுதி மாலை 7 மணிப் பதிப்பில்)
[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்! ‘அறம்’ கோபி – பகுதி 1](http://minnambalam.com/k/2017/12/02/1512153032)
�,”