ஹரிஹரசுதன் தங்கவேலு
**தாவூத் இப்ராஹிம் பற்றிய தொடர் – 6**
தாவூத்திடம் இருந்த சில நற்குணங்களில் ஒன்று, நட்பு பாராட்டுவது. காவல் துறை, அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என எவராக இருப்பினும், தாவூத் தங்களுக்குத் தெரிந்தவர் எனக் காட்டிக்கொள்வதில் மிகுந்த பெருமிதம் கொள்வர். இந்த நட்புகளை மகிழ்விக்க யாருக்கு என்ன வேண்டுமோ அதைத் தெளிவாக அறிந்து தருபவர் தாவூத். சிலருக்கு நட்பு, சிலருக்குப் பணம், நடிகர்களுக்குப் புகழ், மது, மாது என தாவூத்திடம் கிடைக்காத எதுவும் இல்லை என நம்பினர்.
இப்படியாக ஒரு தோழனைப் போலப் பழகும் தாவூத்திற்கு இன்னொரு முகம் இருந்தது, தாவூத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என்பது துரோகம். ஒருவர் மேல் வைத்த நம்பிக்கை உடையும்போது நிச்சயம் அவர்களை வெறிகொண்ட வேட்டை நாயைப் போலத் துரத்திக் கொல்வார். தாவூத்தைப் பொறுத்தவரை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. இந்தக் குணங்களால் தாவூத்தின் குற்றங்கள் அனைத்திற்கும் நியாயம் கற்பிக்கப்பட்டு, தீமையை எதிர்த்துப் போராடுவதற்காகப் பழிவாங்கினார் என்ற ஹீரோ பிம்பம் இப்போது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், கஸ்கரின் கோரிக்கைக்காக அவருடைய மகன்களுக்கு வேலை கொடுத்தாலும் மஸ்தானின் மனதில் தாவூத்தைப் பற்றிச் சில அபிப்ராயங்கள் இருந்தன! அதற்கு முதல் காரணம், தன் பணத்தையே திருடுவதற்காக தாவூத் போட்ட திட்டம். அதைத் துளி பயமின்றிச் செயல்படுத்திய துணிச்சல் அவரைக் கவர்ந்திருந்தது. தாவூத்தைக் கொண்டு தேசி கேங்கை வலுப்படுத்தலாம் எனச் சில திட்டங்களை வைத்தே சகோதரர்களுக்கு மன்னித்து வேலை கொடுத்திருந்தார் மஸ்தான்.
இன்னொரு காரணம், கரீம் லாலாவும் மஸ்தானும் பெயரளவில் மட்டும் நட்பில் இருந்தார்களே தவிர, தொழில் போட்டி , அதிகார வர்க்கத்தை வளைப்பது என உள்ளூரக் கடும் வன்மம் இருந்தது. கஸ்கரின் மகன் என்பதால் தாவூத்தினால் எளிதாகக் காவல் துறையின் ஆதரவைப் பெற முடிந்தது. மேலும் தாவூத்தின் நண்பன் இஃபாலின் பத்திரிகை மூலம் பதான்களின் தொழிலை முடக்கவும் மஸ்தான் பல்வேறு விதங்களில் தாவூத்தைப் பயன்படுத்திக்கொண்டார். தாவூத்தின் வருகையால், செயல்பாடுகளால் மஸ்தானின் தேசி கேங் மீண்டும் தலை நிமிர்ந்தது. மஸ்தானிடம் வேலைபார்த்தாலும் தாவூத் தனிப்பட்ட முறையிலும் முக்கியமான ஆளாக வளர்ந்துவிட்டிருந்தான்.
கரீம் லாலா இதை அறிந்தாலும் பதான்களின் ராஜ்யத்தை யாராலும் தடுக்க முடியாது எனத் தீவிர நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இஃபாலின் கொலை சாட்சியம் அனைத்தையும் மாற்றியது. தொழில் போட்டி, பணம், அதிகாரத்தைக் கடந்து அவனது இறப்பு பழிவாங்குதலை ஆரம்பித்துவைத்தது.
பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வாரே, “இந்த பாட்ஷாவா இல்லை, அந்த ஆண்டனியா? நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று… அதேபோல. இதர குழுக்களிலிருந்தும் சிலர் தாவூத்தின் பக்கம் வந்தார்கள். இஃபால் இறந்த அந்த இரவில் தாவூத்தின் விஸ்வரூபத்தைக் கண்டு தாவூத்தை பாட்ஷாவாக நினைத்து பதான்கள் குழுவிலிருந்தே சிலர் தாவூத்துடன் இணைந்தனர். பதான்களின் ஆட்டூழியங்கள் பொறுக்க முடியாமல், அவர்களை எதிர்க்க ஒரு எதிரணியை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெளியேறினர்.
அதில் மிக முக்கியமானவன் காலித் பெஹல்வான். பின்னாட்களில் தாவூத்தின் அசுர வளர்ச்சிக்கு மூளையாக மிக முக்கியப் பங்காற்றுபவன் காலித். பதான்களின் அனைத்துக் குற்றங்களும், தினசரி நடவடிக்கைகளும் காலித்துக்கு அத்துப்படி. இஃபாலைக் கொன்றவர்களைத் தெரியும். அவர்களைக் கொல்ல உதவுதாக உறுதி தந்து தாவூத்துடன் இணைந்தான் காலித்.
இஃபாலைக் கொன்ற சயீத் பாட்லா மற்றும் அயூப் லாலாவின் இருப்பிடத்தை நோட்டமிட்டான் காலித். அவர்கள் எங்கு சென்றாலும் நிழல் போல காலித்தின் ஆட்கள் தொடந்தனர். காலித் அப்போது நினைத்தது எல்லாம் ஒன்றுதான். எப்படியாவது தன் விசுவாசத்தை தாவூத்திடம் நிரூபிக்க வேண்டும், வரதராஜ முதலியார் எப்படி தமிழர்களின் டான் ஆனாரோ அதே போல காவல் துறையின் ஆதரவுடன், இஸ்லாம் சமூகத்தின் தாதாவாக நிச்சயம் பல உயரங்களுக்கு தாவூத் செல்வான் எனக் கணித்திருந்தான். தாவூத் படையின் தளபதியாக வெற்றி வலம் வர வேண்டும். அதற்குத் தேவை தனக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலையைச் சரியாகச் செய்து பெயர் எடுப்பது. அதற்காகவே பிரயத்தனப்பட்டு, பல நாட்கள் தலைமாறாகவே இருந்த அயூபைத் தேடிக் கண்டுபிடித்தான் காலித்.
ஒரு பாரில் குடித்துக்கொண்டிருந்த அவனைத் தன் ஆட்களுடன் சென்று சரமாரியாகத் தாக்கினான். அவனது ஆட்கள் திசைக்கொருவராக சிதறி ஓட, தனியாய் சிக்கிக்கொண்டான் அயூப். கண்களில் வெறி மின்ன இரும்புக் குழல்களால் அடித்தே டோங்கிரி மார்க்கெட் பகுதிக்கு இழுத்து வந்தான் காலித். தப்பியோட முயன்றவனை இரும்புக் குழல்களால் கணுக்காலை வெட்டினான். நடக்க முடியாமல் கீழே விழுந்ததும், மெதுவாக அவன் வலது கையைத் தூக்கிப் பிடித்து வெட்டினான் காலித். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தான் அயூப்.
காலித் நிகழ்த்திய இந்த கொடூரக் கொலை தாவூத் நிகழ்த்திய கொலையாய் நகரெங்கும் பரவியது, தாவூத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும் என்ற செய்தியைத் தாங்கிச் சென்றது இந்தச் சம்பவம். காவல் துறைக்கு இந்தக் கொலை அதிர்ச்சியைத் தந்தாலும், பதான்கள் ஒழிந்தால் போதும் என நினைத்துக் கைகட்டி வேடிக்கை பார்த்தது, காவல் துறையின் இந்த மறைமுக ஆதரவு, தாவூத்திற்கு சொல்லொணா உற்சாகத்தைத் தந்தது.
அடுத்த கொலைக்கு காலித் நாள் குறித்தான். ஆனால், அதில் ஒரு சிறு மாற்றத்தை தாவூத் கூறினான். அது, தானே இறங்கி இக்கொலையை நிகழ்த்துவேன் என்பது.
இதே போன்றதொரு இன்னொரு குடி நாளில் சயீதைச் சுற்றி வளைத்தது காலித் குழு. சில நிமிடங்களில் அந்த பாருக்குள் நுழைந்தான் தாவூத். தாவூத்தே நேரடியாக வந்திருக்கிறான் என்ற செய்தி ஒரு பரபரப்பைக் கிளப்பியது. அருகில் இருந்த கடைகளை மூடிவிட்டு அமைதியாகக் கிளம்பினார்கள் மக்கள். உள்ளே நுழைந்த தாவூத் வெறி கொண்ட மட்டும் சயீதைத் தாக்கினான். எதிர்க்கத் திராணியில்லாமல் மயங்கி விழுந்தான் சயீத். காலித் அவனது முகத்தில் நீர் தெளித்துத் தெளிய வைத்து நாற்காலியின் மீது அமர்த்தினான். தாவுத் சயீதிடம் ஒரு கேள்வி கேட்டான். “என் பெயரைச் சொல்லி இஃபாலை ஏன் அழைத்துச் சென்றீர்கள்? அது துரோகம், நம்பிக்கைத் துரோகம்” எனப் பளாரென்று அறைந்தான். பிறகு சயீதின் கையைப் பிடித்து, இந்தக் கைதானே இஃபாலை அடித்தது என அவன் விரல்களை ஒவ்வொன்றாக வெட்டினான். அலறித் துடித்து மயங்கினான் சயீத். தன்னைச் சுற்றி என்ன நடந்தது என அவனுக்குத் தெரியவில்லை,
ஒரு சில மணிநேரங்கள் கழித்து நினைவு திரும்பியபோதுதான், தான் இன்னும் இறக்கவில்லை என்பது சயீத்துக்குப் புரிந்தது. தாவூத் தன்னைக் கொல்லவில்லை. அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். எதற்காக, ஏன் எனப் பலவாறான சிந்தனைகள் இருந்தாலும் இருக்கும் மிச்ச உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் காவல் நிலையத்தில் சரணடைந்தான் சயீத். இஃபாலைக் கொன்றது நான்தான் எனக் குற்றத்தை ஒப்புக்கொண்டான். பதினான்கு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது, இடைப்பட்ட காலத்தில் பெயிலில்கூட வெளிவரவில்லை சயீத். அந்த அளவு மரண பயத்தை அவன் மனதில் விதைத்திருந்தான் தாவூத்.
சயீத்துக்கு மட்டுமல்ல. அதுவரை நகரின் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆண்டுகொண்டிருந்த தாதாக்களுக்கும் ஒரு விஷயம் பிடிபடவில்லை , தாவூத் ஏன் சயீத்தைக் கொல்லவில்லை? அத்தனை கோபம் இருந்தும் எப்படி உயிரோடுவிட்டான் என்ற கேள்வி அவர்கள் மனதைக் குடைந்தது.
தாவூத்தின் முடிவுகள் எப்பொழுதும் இப்படித்தான், யூகிக்க முடியாதவை, யோசித்தாலும் எளிதில் பிடிபடாதவை, எப்பொழுதும் ஆச்சரியங்கள் சுமந்து வர இன்னொரு காரணமும் இது போன்ற முடிவுகள்தான். அவரைப் பற்றிய பேச்சுகள் அனைத்திலும் வியப்பு இருந்தது.
இரு பதான்களை தாவூத் வதம் செய்த செய்தி கரீம் லாலா கூட்டத்திற்குக் கோபத்தையும் அச்சத்தையும் ஒரு சேர உண்டாக்கியது, தாவூத்தை உடனடியாக எதிர்க்கவும் துணிச்சல் இல்லை, பதான்களைப் பற்றிய தாதா பிம்பம் தாவூத்தால் தொடர்ந்து நொறுக்கப்படுவதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாவூத்தைக் கொன்று பழிதீர்க்கத் துடிதுடித்தார்கள்.
இதற்காக கரீம் லாலா, ஹாஜி மஸ்தானைச் சந்தித்தார். தாவூத்தைத் தீர்த்துக்கட்டிவிடலாம் என்றார். மஸ்தான் அதை ஏற்கவில்லை. காவல் துறை ஆதரவு தாவூத்திற்கு இருப்பதைச் சுட்டிக்காட்டினார். நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நியாயத்தை உணர்த்தினார். பதான்களுக்கும் தாவூத்திற்கும் நடக்கும் இந்த கேங் வார் நிச்சயம் கடத்தல் தொழிலைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கரீம் லாலாவிற்குத் தெரிவித்தார் மஸ்தான். இந்த உண்மையை லாலாவினால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவரால் மறுக்கவும் முடியவில்லை.
இதற்கு நிரந்தர முடிவு கட்ட ஒரு திட்டத்தை முன்வைத்தார் மஸ்தான். அது மும்பையின் நிழல் உலக முக்கிய தாதாக்கள் அனைவரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது. அந்தக் கூட்டத்திற்கு தாவூத்தையும் அழைப்போம் என்றார். இந்த முடிவை ஏற்றுக்கொண்டார் லாலா. தாதாக்கள் தாவூத்தைச் சந்திக்க முடிவு செய்தனர்.
இதுவரை மும்பையின் சரித்திரத்தில் நிகழ்ந்திராத ஒரு வரலாற்றுச் சந்திப்புக்கான தேதி குறிக்கப்பட்டது, தாவூத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தாவூத் தன் வருகையை உறுதிசெய்தார். பழிதீர்க்கக் காத்திருக்கும் பதான்களின் கோட்டைக்குள் சென்று அவர்களை நேரடியாகச் சந்திக்கத் தயாரானார்.
**(நாளைக் காலை தொடரும்…)**
[நள்ளிரவில் பிறந்த சாம்ராஜ்ஜியக் கனவு!](http://www.minnambalam.com/k/2018/06/11/22)
[வெற்றி பெற்ற திட்டமும் தவறிய இலக்கும்!](https://www.minnambalam.com/k/2018/06/12/27)
[மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!](https://www.minnambalam.com/k/2018/06/13/10)
[இரும்பைத் தாக்கிய இரும்பு!](https://minnambalam.com/k/2018/06/14/9)
[முதல் இழப்பு தந்த வலி!](https://minnambalam.com/k/2018/06/15/11)
�,”