சிறப்புத் தொடர்: நீங்கள் நுகர்பவை உங்களை நுகர்கின்றன!

Published On:

| By Balaji

நரேஷ்

சென்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? – 13

பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. குப்பைகளை வீதிகளில் கொட்டக் கூடாது என்ற வரைவுத் திட்டம் இல்லை. குப்பைகளைப் பிரித்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடும் நகராட்சி நிர்வாகம் இல்லை. இருந்தும் கமிகட்ஸு (Kamikatsu) என்ற ஊரில் குப்பைகள் இல்லை. உலகத்திலேயே ‘Zero waste’ (கழிவுகள் இல்லாத) ஒரே ஊர் கமிகட்ஸு. ஒட்டுமொத்த ஜப்பான் நாட்டிலும் வெறும் 20 சதவிகிதக் குப்பைகள்தான் மறுசுழச்சி செய்யப்படுகின்றன. ஆனால் கமிகட்ஸு-வில் 80 சதவிகிதக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மறுபயன்பாட்டுக்கு மாற்றப்படுகின்றன.

இந்த ஆகச் சிறந்த சாதனைக்குக் காரணம் மக்களின் மனநிலை மட்டும்தானே தவிர, சட்ட திட்டங்கள் அல்ல. கமிகட்ஸு மக்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டார்கள். இன்று அதன் பலனை அவ்வூரின் ஒவ்வோர் உயிரும் உணர்ந்து அனுபவித்து வருகிறது. குப்பைகளைக் குறைப்பது, மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, குப்பைகளிலிருந்தே உரம் தயாரிப்பது என்ற மிகச் சாதாரண மாற்றங்களை முன்னெடுத்த அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர்.

**சென்னையில் நிகழுமா அந்த அற்புதம்?**

அந்த அற்புதத்தைச் சென்னையிலும் செய்துகாட்ட வேண்டுமா? சென்னைவாசிகள் நலமும் வளமுமாக சீரும் சிறப்புமாக வாழ சின்னச் சின்ன மாற்றங்களை முன்னெடுத்தால் போதும் என்கிறார் ‘நம்ம ஊரு’ நடராஜன்.

ஒவ்வொரு நாளும் சென்னை மாநகராட்சி 1 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயைக் குப்பைகளைச் சேகரித்து அப்புறப்படுத்த செலவழிக்கிறது. அதற்கான ஆதாரத்தை [இங்கே](http://www.chennaicorporation.gov.in/budget/Budget_2017-18/) காணலாம்.

இதைத் தவிர்த்தால், ஒரு மாதத்திற்கு நம் வரிப்பணத்தில் 45 கோடி ரூபாய் சேமிக்கப்படும். ஒரு வருடத்திற்கு 540 கோடி ரூபாய் சேமிக்கப்படும்! மக்களின் வரிப்பணத்தையும் மாநகராட்சியின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கக் குப்பைகளைக் குறைப்பதைவிடச் சிறந்த வழி என்ன இருக்கிறது?

இன்னும் மிக மோசமான விஷயம் என்னவென்றால், சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு உருவாகும் 4,500 டன் குப்பைகளும் பள்ளிக்கரணை எனும் சென்னையின் தாய்மடியிலும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலும் கொட்டப்படுகின்றன. தனியார் கட்டுமானங்களால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரழிகிறது என்று எவரேனும் சொன்னால், அவர்களுக்கான சிறப்புச் செய்தி ஒன்று உண்டு. அந்தக் கட்டுமானங்களின் ஆக்கிரமிப்பைவிட அதிகமான சீரழிவை பள்ளிக்கரணையில் அவர்கள் கொட்டும் கழிவுகள்தான் ஏற்படுத்துகின்றன. ‘LandFills’ எனப்படும் நிலத்தில் குப்பைகளை நிறைக்கும் ‘நவீன’ தொழில்நுட்பத்தைத் தவிர வேறெந்த சிறந்த வழியையும் கையாளவில்லை அரசாங்க அதிகாரிகள்.

சரி, தீர்வுக்கு வருவோம். உருவாக்கப்படும் 4500 டன்களுக்கும் மேற்பட்ட குப்பைகளில் 50 சதவிகித குப்பைகள் மட்கக் கூடியவை, உரமாக மறுபயன்பாடு செய்யக்கூடியவை. 20 சதவிகிதக் குப்பைகள் மறுசுழற்சி செய்யக்கூடியவை. மீதம் இருக்கக்கூடிய 30 சதவிகிதக் குப்பைகளில் மருத்துவ மற்றும் சுகாதாரக் குப்பைகளும் மின்னணுக் குப்பைகளும் அடங்கும். இவற்றின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் கட்டுக்குள் வைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

மாநகராட்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், இந்தக் குப்பைகளைத் தரம் பிரிப்பதுதான். இதற்கான செலவும் அதிகம். அதனால்தான் குப்பைகளை அப்படியே கொட்டி நிலத்தை நிறைத்துவிடுகிறார்கள். பிரித்துக் கொடுத்தால் மட்டும் மாநகராட்சி குப்பை வண்டிகள் அவற்றைக் குறையில்லாமல் கையாண்டுவிடுமா என்றால், நீங்கள் பிரித்துக் கொடுப்பதை சேர்த்துக் கொட்டிவிடுவார்கள்.

குப்பைகளை உருவாக்கும் நாம், அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலை என்று எண்ணுவது அடிப்படையிலேயே பிழையானது. இது அரசாங்கத்தின் அலட்சியம் அல்ல. அரசாங்கம், ஒட்டுமொத்த மக்களின் பொதுபுத்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நம் கழிவுகளை நாமே முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது அடிப்படை அறம். ஆனால், இன்றைய சமூகத்தில் அனைத்தையும் கழித்துக் கடந்து செல்லுதல் என்பதே வழக்கமாகிவிட்டது. இந்தச் சிந்தனையும் எண்ணமும்தான் வருங்காலத் தலைமுறைக்கு எதையும் விட்டுவைக்காத அளவுக்கு அனைத்தையும் அழித்தன. இந்த விஷயங்களை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

நமது தீர்வுகளுக்கான தொழில்நுட்பத்தைத் தேடுவதைக் காட்டிலும், மன மாற்றத்தை ஏற்படுத்துவதே முதன்மையானது. நம் தேவைக்கேற்பத் தொடர்ந்து வருவதே தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தைத் தீர்வாக முன்வைத்து அதன்பின் ஒளிந்துகொள்வது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவை அடிப்படையல்ல என்பதைத் தெரிந்துகொண்டு தொடர வேண்டும்.

**குப்‘பை’களைச் சுமக்கும் புண்ணியவான்கள்**

அரசு சாராத ஒரு குழு, மாநகரில் மிகப்பெரிய சுத்திகரிப்புப் பணியைச் செய்து வருகிறது. இவர்களை நீங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்துவிடக்கூடும். தோள்களில் பெரும் பைகளுடன் குப்பைகளில் தேடி, நோண்டி, திரிந்து, அலைந்து எடுத்த பொருட்களைப் பைகளில் திணித்து எடுத்துச்செல்லும் இவர்கள்தான் இம்மாநகரில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளில் 70 சதவிகிதத்தைச் சேகரித்துச் சுத்தம் செய்பவர்கள்.

அது அவர்களின் பணியும் அல்ல. கடமையும் அல்ல. அது அவர்களின் வாழ்வாதாரம். இவர்கள் ‘Level 0 Aggregates’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். குப்பைகளில் கொட்டப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், இரும்பு சாமான்கள், பேப்பர்கள், அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றை சேகரித்து ‘Level 1 Aggregates’களிடம் சேர்ப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பமான சில்லறைகள்தான், அவர்களின் சம்பளம், சோறு, குழம்பு எல்லாமே!

நாம் தூக்கியெறியும் குப்பைகளை வைத்து ஒரு கூட்டமே உயிர் வாழ்கிறதென்றால், நாம் குப்பைகள் என்று தூக்கி எறிபவை நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நாம் சுரண்டப்படுவதெல்லாம் தேவையில்லாத இந்தக் குப்பைகளை நுகர்வதற்காகத்தான்! நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது தூக்கியெறியப்போகும் குப்பைக்கும் சேர்த்துதான் பணம் கொடுக்கிறீர்கள் என்பதை உணர்ந்ததுண்டா?

இங்கே நாம் நுகரும் பல பொருட்கள் தேவையற்றவைதான் எனும்போது, அவற்றோடு வரும் குப்பைகளைப் பற்றி பெரிதாக நாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம். இங்கே நீங்கள் நுகர்பவை உங்களை நுகர்ந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறிபவை, உங்களை வேண்டும் என்று சுரண்டுகின்றன.

இந்தச் சுரண்டலில் இருந்து நம்மைக் காப்பதற்காகவே, சென்னை மாநகரின் ஒவ்வொரு தெருவிலும் கடைவிரித்துக் காத்திருக்கிறார்கள் ‘கபாடிவாலாக்கள்’.

யார் இந்தக் கபாடிவாலாக்கள்..?

(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..!)

[பகுதி 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/06/36)

[பகுதி 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/07/28)

[பகுதி 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/09/34)

[பகுதி 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/11/19)

[பகுதி 5](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/13/22)

[பகுதி 6](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/15/9)

[பகுதி 7](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/17/16)

[பகுதி 8](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/23/33)

[பகுதி 9](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/25/33)

[பகுதி 10](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/27/26)

[பகுதி 11](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/29/15)

[பகுதி 12](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/31/14)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share