தேவிபாரதி
சினிமா பாரடைசோ: தமிழ் சினிமாவின் வாயிலாகச் சமூகத்தை அணுகும் தொடர் – 4
அவல்பூந்துறையில் டூரிங் டாக்கீஸ் வந்த ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே கஸ்பாபேட்டையில் சில பண்பாட்டு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஊரின் இரண்டு தேநீர்க் கடைகளிலும் சலூனிலும் பெட்டிக் கடைகளிலும் எம்.ஜி.ஆர் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களைத் தொங்கவிட்டார்கள். உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் விற்ற கடையொன்றில் சிவாஜி படம் அச்சிடப்பட்ட காலண்டர். சீக்கிரத்திலேயே வீடுகளிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை மாட்டி வைக்கவும் தொடங்கினார்கள். வீட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும் காலண்டர்களைக் கொண்டே அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்களா, சிவாஜி ரசிகர்களா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். வெகு சீக்கிரத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களிடையே போட்டி உருவாகத் தொடங்கியது.
பியூசி படிப்புக்காக ஈரோடு போய்விட்டு வந்த கல்லூரி மாணவர்களில் சிலர் எம்.ஜி.ஆரைப் போலவும் சிலர் சிவாஜியைப் போலவும் உடை அணிந்துகொள்ளத் தொடங்கியிருந்தனர். ஈரோட்டின் சிகையலங்கார நிபுணர்கள் இளைஞர்கள் சிலருக்கு எம்.ஜி.ஆரைப் போல் சிகை அலங்காரம் செய்வித்து அனுப்பினர். எம்.ஜி.ஆரின் மீசையைப் போன்ற மெலிதான மீசை வைத்துக்கொண்ட இளைஞர்கள் சிலரும் ஊருக்குள் தென்படத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் படம் அச்சிடப்பட்ட பனியன்களும் சந்தைக்கு வந்தன.
பியூசி படிப்பதற்காக ஈரோட்டுக்குப் போன கஸ்பாபேட்டையின் இளைஞர்கள் அவல்பூந்துறை டென்ட் கொட்டகையைப் புறக்கணித்து ஈரோட்டில் இருந்த தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள். ராஜாராம், ஸ்டார், கிருஷ்ணா, முத்துக்குமார் என அப்போது ஈரோட்டில் நான்கைந்து தியேட்டர்கள் இருந்தன. எல்லாமே பழம்பெருமை மிக்க தியேட்டர்கள். அவற்றில் புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸாயின. ரிலீஸ் படம் பார்ப்பதைப் போல அப்போதைய சினிமா ரசிகர்களுக்குப் பெருமிதம் தந்த விஷயம் வேறெதுவும் கிடையாது. படம் வெளியாவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அது பற்றிய செய்திகள் வரும். பார்பர் ஷாப்புகளில் கிடைக்கும் தினத்தந்தியைப் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தினத்தந்தி தவிர ராணி, பேசும்படம், பொம்மை போன்ற பருவ இதழ்கள் சிலவற்றில் திரைப்படம் சார்ந்த பரவசமூட்டும் செய்திகள் நிறையக் கிடைக்கும். நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பேசும்படத்திலும் பொம்மையிலும் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும். ஈரோட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும் யாராவது அவற்றில் ஒன்றிரண்டைக் காசு கொடுத்து வாங்கிக்கொண்டு வந்து பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டு அடுத்த ஓரிரு மாதங்களில் வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் படத்தின் கதை, நாயகன், நாயகி பற்றிய விவரங்கள், இடம்பெற்றுள்ள பாடல்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை ஒன்று விடாமல் திரட்டி வைத்துக்கொண்டு ரிலீஸ் தேதிக்காகக் காத்திருப்பார்கள்.
பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் புதிய படங்கள் திரையிடப்படும். அப்போது 1960களின் கடைசி மூன்று ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே தத்தம் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படங்களில் பல அந்தக் காலகட்டங்களில் வெளிவந்தவை. எம்.ஜி.ஆரின் அன்பே வா, விவசாயி, காவல்காரன், ஒளி விளக்கு, நம்நாடு, அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், என் அண்ணன், எங்கள் தங்கம் ஆகிய திரைப்படங்களும் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த இரு மலர்கள், ஊட்டி வரை உறவு, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், மோட்டார் சுந்தரம்பிள்ளை, வியட்நாம் வீடு, சிவந்த மண், தெய்வ மகன், உயர்ந்த மனிதன், தில்லானா மோகனாம்பாள் ஆகிய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்கவை.
அவற்றைப் பார்ப்பதற்காக ஈரோடு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். நுழைவுச் சீட்டுப் பெறுவதற்காக ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படுவதுமுண்டு. முதல் சில நாள்கள் வரை கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறை வர வேண்டியிருக்கும். உயிரிழப்புகளும்கூட ஏற்பட்டிருக்கின்றன. 1968இல் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த ஒளி விளக்கு திரைப்படம் ஈரோடு கிருஷ்ணா தியேட்டரில் ரிலீஸானபோது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. அதே போன்ற உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் அடிமைப் பெண், நம்நாடு போன்ற படங்கள் ரிலீஸான நாட்களிலும் வந்தன.
ஆனால், எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கொண்டாடிய அவரது ரசிகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தென்பட்டதில்லை. அவரது படங்கள் வெளிவந்த ஒவ்வொரு நாளையும் அவர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். உயிரிழப்பு நேருமளவுக்குக் கூட்டம் கூடுவது பற்றிய பெருமிதம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அது போன்ற பெருமிதம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் அவர் நிதியுதவி வழங்கியதாகச் சில செய்திகள் வந்தன. அவர் கொடை வள்ளல் அல்லவா? பொன்மனச் செம்மல் அல்லவா? அவரது கரங்கள் கொடுத்துச் சிவந்த கரங்களல்லவா? ஆகவே அதுபோன்ற செய்திகள் உண்மையானவையாகவே இருந்திருக்கக்கூடும்.
அவர்கள் அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர் வாசல்களைத் தோரணங்களால் அலங்கரித்தார்கள். கட் அவுட்கள் வைத்து மாலை போட்டார்கள். வீதி வீதியாகச் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். பறை முழக்கங்களுடன் மாட்டு வண்டிகளில் ஊர்வலம் போனார்கள். பாட்டுப் பாடினார்கள், நடனமாடினார்கள், திரையில் அவரது உருவம் தோன்றியபோது பூக்களைத் தூவி ஆரவாரம் செய்தார்கள். ஒவ்வொரு படத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். பத்து முறை, பதினைந்து முறை என்பதெல்லாம் சாதாரணம். படம் பார்ப்பதற்காக வீடுகளிலிருந்து பணத்தைத் திருடிக்கொண்டு போனவர்களைப் பற்றிய தகவல்கள் ஒவ்வோர் ஊரிலிருந்தும் வந்துகொண்டிருந்தன. ஒவ்வோர் ஊரிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகிக்கொண்டிருந்த காலம் அது.
எங்கள் கிராமத்திலும்கூட எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் ஒன்று உருவானது. பியூசி படித்த இரண்டு மூன்று இளைஞர்களும் மூத்த குடிமக்கள் சிலரும் சேர்ந்து அதை உருவாக்கினார்கள். பள்ளி மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் அதன் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அவல்பூந்துறை டூரிங் டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படங்கள் திரையிடப்பட்டபோது அதன் வாசலில் தோரணங்களைக் கட்டினார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டுவந்தது. 1967இல் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள்ளாகவே ஈரோட்டிலிருந்து கஸ்பாபேட்டைக்கு டவுன் பஸ் வந்தது. மூக்கு இல்லாத பஸ். அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 22 பைசா. ஒரு ரூபாய் இருந்தால் ஈரோட்டுக்குப் போய் மாட்னி ஷோ பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம். ரசிகர் மன்றத்தின் உதவியோடு பலரும் ஈரோடு போய் சினிமா பார்த்துவிட்டு வரத் தொடங்கினார்கள். சமகாலத்துடனான உறவு கஸ்பாபேட்டைவாசிகளுக்கு இப்படி உருவானது. நகரத்துக்குப் போய்வந்தவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டு வந்து ஊர் மக்களுக்குச் சொன்னார்கள்.
சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருந்தன. அண்ணாவின் தலைமையில் உருவான திமுக ஆட்சி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுகிறது. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார். திரைப்பட போஸ்டர்களில் அவரது பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ என்ற பட்டம் தென்படுகிறது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் அவரது குரலில் பிசிறு தட்டத் தொடங்கியிருக்கிறது. பாய்ந்த குண்டுகளில் ஒன்று அகற்றப்படாமல் அவரது தொண்டைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து. குரல் பிசிறடித்தாலும் அவரது அழகு குறையவில்லை. சுறுசுறுப்பாகவே தென்படுகிறார். முன்பைவிட ஆக்ரோஷமாகச் சண்டை போடுகிறார். முன்பு தனது ஓர் அடியில் பத்துப் பேரை வீழ்த்தியவர் இப்போது ஐம்பது, அறுபது பேரை வீழ்த்துகிறார். அடிமைப் பெண் படத்தில் சிங்கத்துடன் சண்டை போட்டு அதை வீழ்த்துகிறார். புதிய புதிய நாயகிகளோடு டூயட் பாடுகிறார். அவரது படங்களில் இமயமலையையும் தாஜ்மகாலையும் காஷ்மீரையும் டெல்லியையும் காட்டுகிறார்கள். லண்டன், பாரிஸையெல்லாம்கூடக் காட்டுகிறார்கள். ஒளி விளக்கு படத்தில் அவர் ஆஸ்பத்திரியில் இருப்பது போல் வரும் காட்சி உண்மையாகவே சுடப்பட்டு மெட்ராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த காட்சி. அவர் காலத்தை வென்றவர், காவியமானவர், செத்துப் பிழைத்தவர், எமனைப் பார்த்துச் சிரித்தவர். அவரைச் சுட்ட எம்.ஆர்.ராதாதான் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அடிமைப் பெண், ஒளி விளக்கு, நம்நாடு போன்ற அவரது படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். அந்தக் கணக்கில் ஒரு தியேட்டரில் ஒரு வருடத்தில் இரண்டு படங்களைத்தான் திரையிட முடியும். மற்ற நாயகர்கள் திணறினார்கள். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவராகப் போற்றப்பட்ட தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராகக் கருதப்பட்ட சிவாஜியேகூடத் திணறினார். அவரது புகழ் பெற்ற திரைப்படங்களான தில்லானா மோகனாம்பாள், இரு மலர்கள், ஊட்டி வரை உறவு, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், மோட்டார் சுந்தரம்பிள்ளை, வியட்நாம் வீடு, சிவந்த மண், தெய்வ மகன், உயர்ந்த மனிதன் முதலான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் காவியப் படைப்புக்களாகப் போற்றப்பட்டன. சிவாஜியும் அவரது சக நடிகர்களும் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார்கள். சினிமா என்ற பொழுதுபோக்குச் சாதனத்தின் அக்கறைகளை விரிவடையச் செய்த அந்தப் படங்களால் அடிமைப் பெண்ணுடனோ, ஒளி விளக்குடனோ, மாட்டுக்கார வேலனுடனோ போட்டியிடமுடியவில்லை. தில்லானா மோகனாம்பாளைத் தவிர மற்ற படங்களால் வெள்ளி விழாவை எட்ட முடியவில்லை.
சிவாஜி ரசிகர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிய நிகழ்ச்சிகள் இவை.
எம்.ஜி.ஆருக்கு இணையாக அப்போது சிவாஜிக்கும் ரசிகர் மன்றங்கள் உருவாகியிருந்தன. அவர்களும் தியேட்டர் வாசல்களில் தோரணங்களைக் கட்டினார்கள், கட் அவுட்டுகளுக்கு மாலை போட்டார்கள். திரையில் அவரது உருவம் தோன்றியபோது பூக்களைத் தூவினார்கள். தங்கள் அபிமான நடிகரான சிவாஜியின் திரைப்படங்கள் வெள்ளி விழா காண வேண்டும் என விரும்பினார்கள்.
அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்துக்கே வாராவாரம் போஸ்டர்களை ஒட்டுவார்கள். இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம், இருபத்தைந்தாவது நாள், ஐம்பதாவது நாள் என்னும் வரிகளோடு தென்படும் சுவர்களில் தென்பட்ட போஸ்டர்களே ரசிகர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வியைப் பற்றி அறிவிப்பவையாக இருந்தன. ஐம்பதாவது நாள் போஸ்டர்களில் வெற்றிகரமான ஐம்பதாவது நாள் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். ஒரே சமயத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரது படங்களில் பெரும்பாலானவையும் ஐம்பதாவது நாளை எட்டிவிடும். அறுபதாவது நாள், எழுபதாவது நாள், எழுபத்தைந்தாவது நாளைக்கூட எட்டிவிடுவதுண்டு. நூறாவது நாளை எட்டுவதுதான் சவால். இரு நாயகர்களின் ரசிகர்களுக்கும் திக் திக்கென்று இருக்கும்.
நூறாவது நாள் என்பது கொண்டாட்டங்களுக்கான ஒரு நாளாக இருக்கும். வெற்றி விழாக்கள் அரங்கேறும். அன்று படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள். இது தவிர பரிசுப் பொருட்களும் உண்டு. நுழைவுச் சீட்டுக்களைக் குலுக்கிப்போட்டு பரிசுக்குரிய நுழைவுச் சீட்டுக்களைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். இடைவேளையின்போது பரிசுகள் வழங்கப்படும்.
எவர்சில்வர் குடங்கள், டெரிகாட்டன் சேலைகள், பேன்ட் பிட்கள், சோப்பு டப்பாக்கள், ஊதுபத்திப் பாக்கெட்டுகள் என ஆறேழு வகையான பரிசுகள் கிடைக்கும். சில சமயங்களில் படத்தில் பங்கு பெற்ற நடிகர், நடிகைகளில் யாராவது வந்து திரையரங்கில் தோன்றி ரசிகர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்குவார்கள். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வருவதாகக்கூட வதந்திகள் உலாவரத் தொடங்கும். படம் தொண்ணூறு நாள்களை எட்டத் தொடங்கும்போது அதுபோன்ற வதந்திகளைக் கேட்க முடியும். எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜியின் கைகளிலிருந்து ஒரு எவர்சில்வர் குடத்தைப் பரிசாக வாங்குவது பற்றிய கனவுகளில் மூழ்கத் தொடங்குவார்கள். அந்தக் கனவு நூறாவது நாள் காட்சியின் இடைவேளை வரை நீடித்திருக்கும்.
இடைவேளையின்போது திரைக்கு முன்பகுதியில் உள்ள மேடை ஒளிரத் தொடங்கும். பாடல்கள் இசைக்கப்படும். எம்.ஜி.ஆர், சிவாஜிதான் வந்துவிட்டார் என அவர்களது ரசிகர்கள் பரவசத்தில் மூழ்கி ஆரவாரம் செய்யத் தொடங்கும்போது அந்தப் படத்தில் சிறு வேடமொன்றில் நடித்த கள்ள பார்ட் நடராஜன் வந்து நிற்பார்.
ஏமாற்றத்தைத் தாங்க முடியாத ரசிகர்கள் கூச்சல் போடுவார்கள். ரகளையில் ஈடுபடுவார்கள். பெஞ்சுகளைத் தட்டிச் சத்தமெழுப்புவார்கள். நாற்காலிகளைத் தூக்கி வீச முற்படுவார்கள். யாராவது ஒரு ரசிகர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவார். ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து விழுந்துவிட்டதாகவோ உயிர் போய்விட்டதாகவோ வதந்தி பரவும். பலரும் அவரைச் சூழ்ந்துகொண்டு முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். கடைசியில் மேடையிலிருந்து இறங்கி வரும் கள்ள பார்ட் நடராஜன் ஒரு பாட்டில் கோலி சோடாவை முகத்தில் தெளித்து அவரை உயிர் பெற்றெழ வைப்பார். பிறகு கூட்டம் சமாதானமாகிவிடும், கள்ள பார்ட் நடராஜனிடமிருந்து நூறாவது நாள் பரிசாக ஒரு எவர்சில்வர் குடத்தையோ, சோப்பு டப்பாவையோ ஊதுவத்திப் பாக்கெட்டையோ பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்புவார்கள்.
படத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின்போது நிச்சயம் எம்.ஜி.ஆர் கலந்துகொள்வார். அப்போது அவரது கைகளிலிருந்து முதல் பரிசாக ஒரு மோதிரத்தையோ, பட்டுப்புடவையையோ பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு அபரிமிதமாக இருந்தது. எல்லாவற்றையும்விட முக்கியமாக அப்போது அவரை நேரில் பார்க்க முடியும். அந்த தரிசனத்துக்காகவே படத்தை நூறு நாள்களைத் தாண்டி ஓட வைக்க அவரது ரசிகர்கள் முயல்வார்கள்.
முந்தைய பகுதி : [தேநீர்க் கடைகளும் டூரிங் டாக்கீஸ்களும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/21/15)�,”