சிறப்புச் செய்தி: பட்டேல் சிலை – வரிப்பணம் வீண்!

Published On:

| By Balaji

நாட்டு மக்களின் வரிப்பணம் 2,989 கோடி ரூபாயை வீணடித்து சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை கட்டியதற்கு சமூகச்செயல்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு இன்று (அக்டோபர் 31) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பட்டேல் சிலை என்ற பெயரில் நடைபெறும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த குஜராத் சமூகச்செயல்பாட்டாளர்கள் 90 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதுமிருந்து அனைத்து அதிகாரிகளும் பெரும் போலீஸ் படையும் சிலை திறக்கும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

40,192 ஹெக்டேர் விவசாய நிலங்களில் இந்த சிலை அமைந்துள்ளது. இதற்காக 6 கிராமங்களின் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தச் சிலை அமையவிருக்கும் இடத்திலுள்ள 72 கிராமங்கள் பாதிக்கப்படவுள்ளன. அந்த கிராமங்களில் வசிக்கும் 75,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட உள்ளது. 28 கிராமங்களின் நிலங்களுக்குத் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் நிவாரண உதவியும் அளிப்பதாக குஜராத் மாநில அரசு உறுதியளித்தது. ஆனால், எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அவர்கள் இன்று முழுவதும் தத்தம் வீடுகளில் சமைக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குயிண்ட் என்ற இணைய தளத்தில் சிலை திறப்பு குறித்து விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. சிலைக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு எண்ணற்ற ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் பட்டேல் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்வதற்குப் பின்னணியிலிருந்த வல்லபாய் பட்டேலின் சிலையை திறப்பதன் மூலம் தேச பக்தியை உருவாக்கிவிட முடியும். அதனை வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான விளம்பரங்களும் பிரச்சாரமும் செய்யப்பட்டிருந்தன. அது எடுபடவில்லை.

உத்தேசமாக எந்த மாதிரியான ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு இந்த நிதியை செலவழித்திருக்கலாம் என்பதைக் காண்போம்;

ராஷ்ட்ரீய கிருஷ்ஸி விகாஸ் யோஜனா (தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம்) என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட (365 கோடி ரூபாய்) நிதியை விடச் சிலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது 8 மடங்கு அதிகமாகும். விவசாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள 56 புதிய திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான 32 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை (602 கோடி ரூபாய்) விட 5 மடங்கு அதிகமாகும்.

இரண்டு மாவட்டங்களுக்கு இரண்டு குழாய்கள் அமைக்கும் திட்டத்திற்கான நிதி (1,090 கோடி ரூபாய்) ஒதுக்கீட்டை விட இந்தச் செலவு இரண்டு மடங்காகும். இதைக் கொண்டு, தஹோத், மகிசாகர் மாவட்டங்களிலுள்ள 10,000 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியும். சிலைக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தினோடு போரிடா நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் சூரத் மாவட்டத்தில் 1,800 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்திட முடியும்.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிருஷ்ஸி சின்சாய் யோஜனா (பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம்) திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை(1,114 கோடிரூபாய்) விட இருமடங்காகும். இந்த திட்டத்தினால் தஹோத் மற்றும் மகிசாகர் மாவட்டங்களிலுள்ள 40,192 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்திருக்க முடியும்.

சிலைக்கான முதலீட்டைக் கொண்டு இரண்டு புதிய ஐஐடிக்களை கட்டியிருக்க முடியும். (ஒரு ஐஐடிக்கு 1,167 கோடி ரூபாய்) இரண்டு எம்ய்ஸ் வளாகங்களைக் (ஒரு எய்ம்ஸ்க்கு 1,103 கோடி ரூபாய்) கட்டியிருக்க முடியும். 5 புதிய ஐஐஎம் வளாகங்கள் (ஒன்றுக்கு 539 கோடி ரூபாய்),5 சோலார் மின்சக்தி திட்டங்கள்(ஒரு மின்உலைக்கு 528 கோடி ரூபாய் ) உருவாக்கியிருக்க முடியும்.மார்ஸ் கிரகத்திற்கு 6 முறை சென்றிருக்கலாம் (ஒரு முறை செல்வதற்கு 800 கோடி ரூபாய் செலவாகும்).இப்படி ஆக்கப்பூர்வமான செலவுகள் எதுவும் செய்யாமல் மக்களின் வரித்தொகையானது மிகப் பெரிய அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது என்று அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

**- சேது ராமலிங்கம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share