சிறப்புச் செய்தி: தேர்தலுக்குப் பின் காணாமல்போன போலி செய்திதளங்கள்!

public

கர்நாடகத் தேர்தலின்போது மும்முரமாகச் செயல்பட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் தற்போது செயல்படாமல் உள்ளதும் வேறு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கர்நாடகச் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றது. மக்களை நேரிடையாக சந்தித்து பிரச்சாரம் செய்வது, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்வது எனப் பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தின.

அதேவேளையில், அரசியல் கட்சிகளைக் குறிவைத்து போலி செய்திகளும் பரப்பப்பட்டன. நாட்டிலேயே முதன்முறையாகக் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் போலிச் செய்திகளைத் தடுக்கத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைமைத் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் அளவுக்குப் போலி செய்திகள் பரவி இருந்தன. பிபிசி பெயரில் போலி செய்தி பரவியது இதற்குச் சிறந்த உதாரணம்.

கர்நாடகத் தேர்தலை ஒட்டிக் கடந்த மார்ச் மாதத்தில் புதிது புதிதாகச் செய்தி இணையதளங்கள் முளைத்தன. இந்தச் செய்திதளங்களில் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் விமர்சித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. அவற்றில் ஒன்று பெங்களூரு டைம்ஸ். தேர்தல் நேரத்தில் பரபரப்பான [செய்திகளை](http://archive.is/FtzjW) வெளியிட்டு வந்த இந்தத் தளம், தற்போது விருந்தினர் விடுதி தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் [தளமாக]( http://bengalurutimes.co/) உருமாறியுள்ளது. இது தொடர்பாக இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பூம் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, இந்த இணையதள டொமைனை கடந்த வாரம்தான் கோ டாடி நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பெங்களூரு மிரர், எக்ஸ்பிரஸ் பெங்களூரு மற்றும் வாய்ஸ் ஆப் பெங்களூரு போன்ற செய்திதளங்களின் யூ.ஆர்.எல்.களும் செயல்படாமல் உள்ளன.

இது தொடர்பாக பூம் ஊடகம் நடத்திய புலனாய்வில் [பெங்களூரு ஹெரால்ட்](http://bangalore-herald.com/) என்ற செய்திதளமும் போலியானது என்று தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம்தான் அந்தத் தளம் உருவாக்கப்பட்டதும் அதற்காக அமெரிக்காவில் உள்ள போலியான தொலைபேசி எண் கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தச் செய்திதளம், பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இணையப் பக்கத்தில் அவர்களைப் பற்றிய எந்த சுய விவரமும் இடம் பெற்றிருக்கவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்னாமிக் டைம்ஸ், ஸ்க்ரோல்.இன் போன்ற பிரபல செய்திதளங்களின் செய்திகள் இதில் இடம்பெற்றிருந்தன. அதிலும், காங்கிரஸுக்கு எதிரான செய்திகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கடந்த மே 2ஆம் தேதி இந்தச் செய்திகளை பூம் ஊடகம் தனது செய்திதளத்தில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நியூஸ் பெங்களூரு ஹெரால்ட் என்பதற்கான தேடுதல் முடிவுகள் [பாரத்பாஸிடிவ்.இன்]( https://bharatpositive.in) என்ற பக்கத்துக்கு மடைமாற்றப்பட்டன.

பாரத் பாஸிடிவ் செய்திதளம் தற்போதும் செயல்பட்டு வருகிறது. பாஜக ஆதரவு கட்டுரைகளும், நேரு குடும்பத்துக்கு எதிரான கட்டுரைகளும் இதில் பிரதானமாக வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த இணையப்பக்கம் குறித்த தகவல்களைத் தேடியபோது, இந்தியாவில் உள்ள தொலைபேசி எண் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. இந்த எண்ணுக்கு பூம் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்துப் பேசியபோது, தனக்கும் பாரத் பாஸிடிவ் செய்திதளத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏன் தனது மொபைல் எண் அதில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை என்று எதிர்முனையில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இந்த செய்திதளங்களின் செய்திகள் அனைத்தும் [கர்நாடகா எலெக்‌ஷன் அப்டேட்ஸ்](https://www.facebook.com/KarnatakaElectionUpdates/) என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதேபோல் பிற ஊடகங்களின் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளும் இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய நாளான மே 11ஆம் தேதி வரை இந்த முகநூல் பக்கத்தில் காங்கிரஸுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் செய்திகள் பகிரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: [பூம்](https://www.boomlive.in/fake-news-websites-active-during-karnataka-polls-vanish/)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *