சிறப்புச் செய்தி: சுதந்திரத்தைப் பறிக்கும் அரசு!

Published On:

| By Balaji

இத்தனை காலமாக ரிசர்வ் வங்கி போன்ற அரசு நிறுவனங்களுக்குத் தன்னாட்சியும், சுதந்திரமும் இருந்து வந்தது. ஆனால், அச்சுதந்திரத்தில் தற்போதைய அரசு குறுக்கிடுகிறது என்பதற்குப் பின்வரும் செய்தி எடுத்துக்காட்டாகும்.

அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 20 விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எட்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெறும் மூன்று விவகாரங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆனால், எதற்குமே தீர்வு எட்டவில்லை.

இதில் ரிசர்வ் வங்கியின் உடனடி நடவடிக்கை திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்திட்டம் என்பது வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகும். மூலதனச் சிக்கல்கள், சொத்துத் தரம் மற்றும் லாபம் போன்ற பிரச்சினைகளால் ரிசர்வ் வங்கி இவற்றை வகுத்தது. இந்த அளவுருக்களை ஏதேனும் வங்கி மீறினால் அவ்வங்கி மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

மூலதனம் தொடர்பான சில அபாயங்களைக் குறைப்பதற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய வங்கிகளுக்கான மூலதன விதிமுறைகள் பெசெல் விதிமுறைகளை (basel norms) விடக் கடுமையாக இருப்பதாக அவர்கள் வாதிட்டுள்ளனர். எனினும், பெசெல் முன்மொழிதல்களைக் காட்டிலும் இந்திய வங்கிகளுக்கான செயல்படா சொத்து விதிமுறைகள் எளிமையாக இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாதிட்டுள்ளனர். தற்போது, உடனடி நடவடிக்கை திட்டத்தின் கீழ் 11 பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கி என மொத்தம் 12 வங்கிகள் உள்ளன.

தற்போது ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நான்கு துணை ஆளுநர்கள் உள்பட 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

இரண்டாவதாக, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், நெருக்கடிக்குள்ளான சொத்துகளை வகைப்படுத்துவதற்கான விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதுபற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தச் சுற்றறிக்கையில், ஏற்கெனவே இருந்த பழைய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கைவிட்டுவிட்டது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விட ஒரு நாள் தாமதமாகியிருந்தாலும்கூட நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. இந்தச் சுற்றறிக்கைக்குச் சில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் மிகைப் பரிமாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவசர இருப்புகளிலிருந்து அதிக நிதியை ரிசர்வ் வங்கி பரிமாற்ற வேண்டுமென்று அரசு விரும்புகிறது. ஆனால், இந்த முன்மொழிதலுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான வேறுபாடுகளைப் பற்றிப் பேசியுள்ள ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வீரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் மத்திய அரசு தலையிடுவதாக வாதிட்டுள்ளார். இதுபற்றி அக்டோபர் 26ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வீரல் ஆச்சார்யா, “மத்திய வங்கியின் சுதந்திரத்தைக் குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும். மத்திய வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள் நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதார தீயை மூட்டி, மத்திய வங்கியின் அதிகாரங்களைக் குறைத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படும்” என்று பேசியிருந்தார்.

வீரல் ஆச்சார்யாவின் கருத்துகள் வெளியான அடுத்த நாளே, எந்தவொரு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடாமல், எந்த நிறுவனத்தை விடவும் நாடுதான் உயர்ந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share