ரகுநாத்
இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைப் பற்றிய விவாதம் நடக்கும்போதெல்லாம், ‘வேகமாக வளரும் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது என்பது இயல்புதான், அதுதான் வரலாறும்கூட; வறுமைக் குறைப்புதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று வாதம் செய்பவர்கள் இந்நாட்டில் பலர் உள்ளனர். கடந்த முப்பதாண்டுகளில் பொருளாதாரம் கண்டுள்ள வேகமான பொருளாதார வளர்ச்சியானது, கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து விடுவித்துள்ளது என்பது அவர்களுடைய நிலைப்பாடு.
ஒரு பேச்சுக்கு இதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அரும்பாடுபட்டு நாம் நிகழ்த்தியுள்ள சாதனையாகச் சொல்லப்படும் இந்த வறுமைக் குறைப்பு அர்த்தமற்றுப் போகும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. உழைக்கும் மக்கள் சந்திக்கும் நெருக்கடியை மட்டுப்படுத்த கணிசமான செலவுகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், ஒன்றிய அரசு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத் தயங்குகிறது; தாமதித்து வருகிறது.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமிழந்து செயல்பட்டு வந்ததன் விளைவாக, பட்ஜெட்டில் மதிப்பீடு செய்திருந்த அளவுக்கு நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய்களைத் திரட்ட முடியவில்லை. அரசின் வருவாய்க்கும், அது மேற்கொள்ளும் செலவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியான நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit) எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்துவந்த போதும், சுணக்கம் கண்டுள்ள கிராக்கியைத் (Demand Slowdown) தூக்கிவிட அரசு கூடுதலாகக் கடன் வாங்கி செலவு செய்வதில் தவறில்லை என்ற ஒருமித்த கருத்து நிலவி வந்தது. ஆனால், அந்த கருத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொது சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் அரசு கணிசமாகச் செலவு செய்வதைவிட வேறு வழியில்லை என்று தெளிவாகத் தெரிந்த பிறகும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்கிறது FRBM சட்டம். ஆனால், தற்போது நிலவுவது அசாதாரண சூழ்நிலை என்பதால் நிதிப்பற்றாக்குறை 10-15 விழுக்காடு வரை இருந்தாலும் பரவாயில்லை, அரசு துணிச்சலாகக் கடன் வாங்கி செலவு செய்தாக வேண்டும் என்று சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள்கூட வலியுறுத்தி வருகின்றனர்.
தேவையான கடன் தொகையைச் சந்தையிடமிருந்து மட்டுமே பெற முடியாது என்பதால், ரிசர்வ் வங்கி அரசுக்கு நேரடியாகவே கடன் வழங்கும் ஏற்பாடு ஏற்கத்தக்கதுதான் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த டாக்டர் ரங்கராஜன் அவர்களும்கூட எழுதியுள்ளார். அரசு ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகக் கடன் வாங்கும் ஏற்பாட்டை 1997இல் முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரே டாக்டர் ரங்கராஜன்தான்!
ஆனால், இந்த நிதியாண்டின் முதற்பாதியில் ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி நேரடியாக கடன் வழங்காது என்று சென்ற வாரம் வணிகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஊரடங்கு காலத்தில் மக்களிடையே பல்வேறு பொருட்களுக்கான கிராக்கி இருக்காது. பொருளாதார நிவாரணம் வழங்கப்பட்டாலும் கிராக்கி ஒரேயடியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நிதியாண்டின் பிற்பாதி பண்டிகைக் காலம் என்பதால் சாதாரணமாகவே பொருட்களுக்கான கிராக்கி அதிகமாக இருக்கும்; அந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியிடம் ஒன்றிய அரசு கடன் வாங்கி செலவு செய்யும்பட்சத்தில் விலைவாசி அதிகரிக்கக்கூடும். ஆகவே கடன் வாங்கி செலவு செய்வதென்றால் அதைப் படிப்படியாகச் செய்வதே புத்திசாலித்தனம் என்பதை ரிசர்வ் வங்கியும் ஒன்றிய அரசும் உணர வேண்டும்.
ஒன்றிய அரசு உணர வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் சரி, பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் சரி, மாநில அரசுகள் தங்களிடம் உள்ள குறைந்த நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதற்குக்காரணம் ஒன்றிய அரசுதான் என்பதைப் பலர் உரக்கச் சொல்லிச்சொல்லிச் சோர்ந்து போயுள்ளனர்.
இந்திய மாநிலங்களின் சொந்த வருவாயில் (Own Tax Revenue) மாநில ஜிஎஸ்டி எனப்படும் SGSTயின் பங்கு சராசரியாக 45 விழுக்காடு. ஊரடங்கால் அந்த வருவாய் இல்லாமல் போய்விட்டது. சாராயம், பெட்ரோல் மற்றும் டீசல், பத்திரப் பதிவு மீது போடப்படும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வருமானத்தின் பங்கு, அவர்களின் சொந்த வருவாயில் சராசரியாக 15 விழுக்காடு. அந்த வருமானமும் காணாமல் போய்விட்டது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக முதல் ஐந்தாண்டுகளுக்கு Compensation Cess வழியே திரட்டப்படும் வருவாய் பயன்படுத்தப்படும் என்று தனியாக ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படும். ஆனால் சில மாநிலங்களுக்குச் சென்றாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களுக்கான இழப்பீடே இன்னும் வழங்கப்படவில்லை; பல மாநிலங்களுக்கு டிசம்பர் – ஜனவரி மாதங்களுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஒன்றிய அரசுக்குப் பொறுப்புகளைக் குறைவாகவும், அதிகாரங்களைக் கூடுதலாகவும் இந்திய அரசியல் சாசனம் வழங்குகிறது. மாநில அரசுகளுக்கு இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலை. ஒரு நெருக்கடிக் காலத்திலும்கூட ஒன்றிய அரசு தன்னிடம் இருக்கும் வளங்களை மாநில அரசுகளோடு பகிர்ந்துகொள்ளாது; நெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதலாகக் கடன் வாங்கி செலவு செய்யாது; மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் வாங்கவும் அனுமதிக்காது என்றால் ஒன்றிய அரசின் இந்த இறுக்கமான நிலைப்பாட்டை யாரிடம் சொல்லி அழுவது?
கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள்தான் போர் வீரர்கள் என்கிறார் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி. ஆனால், போர்த்தளபதியாகச் செயல்படுவதற்கான ஆர்வத்தையும், திராணியையும் ஒன்றிய அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. இது அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கிறது. இந்த நிலை மாறினால் நல்லது.�,