கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அறிவதற்காக, தூய எரி சக்தி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மின்சார பயன்பாடு உள்ளிட்டவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிராமங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நம்பகத்தன்மையுடைய மின்சார சக்தி மற்றும் தேசிய அடையாள அட்டையான ஆதாரின் பரவல், அதிவேக இன்டர்நெட் வளர்ச்சி மற்றும் பயன்பாடு போன்றவற்றில் அதிகளவிலான கவனம் திரும்பியிருக்கிறது. அவற்றைக் கருத்தில்கொண்டு, 2017ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னேற்றத்துக்காக நான்கு முக்கிய காரணிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.
**மின் உற்பத்தி திறன் & புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் :**
2016ஆம் ஆண்டு தொடக்கத்தில், ‘இந்தியா இந்த ஆண்டில் 16 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்யும். அதன்படி, 2022க்குள் 175 ஜிகாவாட் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அனால் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் வரை, 3.9 ஜிகாவாட் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 30, 2016 வரை இந்தியாவின் மொத்த ஆற்றல் கொள்திறன் 309 ஜிகாவாட். இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 15 சதவிகிதம். செப்டம்பர் 2015 முதல் செப்டம்பர் 2016 வரை 8.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றாலை ஆற்றல் 15.2 சதவிகிதம் அதிகரித்து 3.7 ஜிகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி ஆற்றல் 96 சதவிகிதம் அதிகரித்து 4.2 ஜிகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மந்தமான காற்றாலை ஆற்றல் உற்பத்தியுடன் இந்தியா உலகவில் நான்காம் இடத்தில் உள்ளது. 2016-17 நிதியாண்டில், காற்றாலை உற்பத்தியில் 4 மெகாவாட்டும், சூரிய ஒளி உற்பத்தியில் 12 மெகாவாட்டும் உற்பத்தி செய்ய வேண்டுமென இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 8 மாதங்களைக் கடந்தும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் காற்றாலை உற்பத்தியில் 40 சதவிகிதமும், சோலார் உற்பத்தியில் 17.5 சதவிகிதமும் மட்டுமே இந்தியா உற்பத்தி செய்துள்ளது. 2017ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய, அரசு மற்றும் தனியார் ஆலைகள் சார்பாக, காற்றாலை ஆற்றல் 2.35 மெகாவாட்டும், சோலார் ஆற்றல் 11.8 மெகாவாட்டும் உற்பத்தி செய்யவேண்டும்.
இந்தியாவில் 2010க்குப் பிறகு சோலார் ஆற்றல் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது. (2012-13ல் மட்டும் சிறு சரிவு ஏற்பட்டது.)
2015-16 ஆண்டறிக்கையின்படி, அரசாங்கம் 2022க்குள் 100 ஜிகாவாட் சோலார் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வருகிற 2017-18, 2018-19 ஆகிய இரு நிதியாண்டுகளுக்கான புதிய திட்டக்கொள்கையை உருவாக்கியிருக்கிறது. அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா 42.6 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தயாரிக்க இருக்கிறது..
**கிராமப்புறங்களில் மின்சார வசதி**
ஆகஸ்ட் 15, 2015, பிரதமர் மோடி தனது சுதந்திரதின உரையில், ‘இந்தியாவிலுள்ள அனைத்து மின்சார வசதியற்ற கிராமங்களுக்கும் (18,452) இன்னும் 1000 நாட்களுக்குள் (அதாவது மே, 1, 2018) மின்சார வசதி செய்துதரப்படும் என்று கூறியிருந்தார்.
மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை, 11,429 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்துதரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 7,023 கிராமங்களில் 698 கிராமங்கள் குடியிருப்பு வசதி இல்லாதவை. 3,775 கிராமங்களுக்கு மின்சார வசதி அமைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; 2,502 கிராமங்கள், புவியியல் அமைப்பின் தடைகள் காரணமாக திட்டமிடப்படாமல் இருக்கின்றன; 48 கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்பாடுசெய்ய மாநில அரசு, பொறுப்பேற்றுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள கிராமங்களுக்கு 2018 ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதிகள் செய்து தருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆயினும் எத்தனை கிராமங்கள் மின்சார வசதியை பயன்படுத்துவதற்கான அணுகுமுறை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். பீகார், அசாம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் 60 சதவிகித கிராமங்கள் மின்சார வசதியின்றியே உள்ளன.
**வடகிழக்கு பகுதிக்கும் ஆதார் :**
டிசம்பர் 2016 வரை 1.095 பில்லியன் மக்களிடம் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் 73.4 சதவிகிதம் பேருக்கும், 5 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 22.75 பேருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. பீகார், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மேகலாயா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 75 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேகலாயாவில் 9 சதவிகிதம், அசாமில் 6 சதவிகித மக்களைத் தவிர மற்றவர்களிடம் ஆதார் கார்டுகள் இல்லை. எனவே 2017ல் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆதார் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
**இன்டர்நெட் பயன்பாட்டில் இரண்டாம் இடம் :**
இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் வரை இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, 367.48 மில்லியன் ஆகும்.
2017 இறுதிக்குள் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்று இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் கூறியுள்ளார்.
‘உலகளவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையின் சராசரியை விட, இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு வேகமாக உயரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், கூடுதலாக 400 மில்லியன் பேர் இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்’ என்று தேசிய மென்பொருள் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. 2020க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கு இன்டர்நெட்டை கொண்டு செல்லும்போது, தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும், ஏனெனில் 75 சதவிதத்துக்கும் அதிகமான கிராம மக்கள் தாய்மொழியையே பயன்படுத்துகிறார்கள்’ என்று நாஸ்காம் அறிக்கை தெரிவித்துள்ளது.
**தொகுப்பு – முக்தா படில்**
நன்றி : [இந்தியா ஸ்பென்ட்]( https://scroll.in/article/825670/four-things-india-can-look-forward-to-in-2017)
**தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்**�,