சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் போராட்டம் தொடர்வது ஏன்?

public

அர்ஜுன் ஸ்ரீநிவாஸ்

சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளைச் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். தங்களது உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. இப்போது கரும்பு விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். அவர்களும் தங்களது உற்பத்திப் பொருட்களைச் சாலையில் கொட்டி அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு மடங்கு வேளாண் கலகங்கள் அதிகரித்துவிட்டன. இதை நமக்குத் தேசியக் குற்ற ஆவணப் பணியகத்தின் ஆவணங்களே தெளிவாகக் கூறுகின்றன. விலை வீழ்ச்சி மட்டுமின்றி நிலம், நீர், வளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் விவசாயிகள் அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி போதுமான அளவில் கொள்கை உருவாக்கம் இல்லாததும் விவசாயிகளின் நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டமும், வேலை நிறுத்தமும் அரசியல் காரணங்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளுக்கு உதவும் விதமாக சில சலுகைகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது ஏழை விவசாயிகளைக் காக்கும் விதமாக எடுக்கப்படும் நடவடிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் இந்தச் சலுகைகளால் விவசாயிகளின் நெருக்கடிகள் குறையாது என்பதுதான் உண்மை. விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் இந்த அறிவிப்புகள் தோல்வியையே கண்டுள்ளன.

*மூன்று முக்கியமான நெருக்கடிகளை விவசாயிகள் இப்போது எதிர்கொண்டு வருகின்றனர் . அவை விலை, வர்த்தகக் கொள்கை மற்றும் ஆதார நெருக்கடிகள்.*

இதில் விலை வீழ்ச்சி மிகுந்த நெருக்கடிகளை விவசாயிகளுக்கு உண்டாக்குவதாக உள்ளது. கடந்த சில வருடங்களாகக் காய்கறிகள் மற்றும் பருப்பு விலை பெருமளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அதிக அளவிலான உற்பத்தியும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக உள்ளது. இதுதான் விவசாயிகளைப் போராட்டத்துக்குத் தள்ளியது.

கொள்முதல் திட்டத்தின் கீழ் தானியங்கள், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கப் போதுமானதாக இல்லை. சில மாநிலங்களில் மட்டும்தான் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. இப்போது தேர்தல் நேரம் என்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த பேச்சுவார்த்தைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளது.

விலை உயர்த்தப்பட்டாலும் கொள்முதல் குறைந்து வருவது விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இல்லை. 2006-07ஆம் ஆண்டில் கோதுமையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 12 விழுக்காடு குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இது 2012-13ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்து 41 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. இது இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. அரிசி மற்றும் கோதுமையைத் தவிர்த்து மற்ற 23 முக்கியப் பயிர்களை வெகு சில மாநிலங்கள் மட்டுமே முறையாகக் கொள்முதல் செய்கின்றன.

பால் உற்பத்தியாளர்கள் விலை வீழ்ச்சியைக் கண்டித்துப் போராட்டத்தை நடத்தினர். இப்போது பால் ஏற்றுமதிக்கு 10 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பால் விலை ஒரு நிலையைக் கடக்கும்போது அரசாங்கம் ஏற்றுமதிக்கு ஒழுங்கு விதிகளை நிர்ணயிக்கவும் நேரிடும். அப்போதும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

2010 முதல் 2016 வரையிலான இந்திய வேளாண் கொள்கைகள் குறித்து பொருளாதாரக் கூட்டுறவு & மேம்பாட்டு நிறுவனமும், சர்வதேசப் பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலும் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கை இந்த மாதத்தில் வெளியானது. இந்த அறிக்கை சிலவற்றை வேளாண் வர்த்தகத்தைச் சிதைக்கும் கொள்கைகளாகக் கூறுகிறது. ஏற்றுமதித் தடைகள், ஏற்றுமதி ஒதுக்கீடு, ஏற்றுமதி வரிகள் அல்லது குறைந்தபட்ச ஏற்றுமதி விலை போன்றவை ஏற்றுமதிக்கு இடையூறாகவே உள்ளன. இவை உற்பத்தியாளரின் விலையைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது. மேலும் பல நேரங்களில் அரிசி, கோதுமை, பால், சர்க்கரை, பாஸ்மதி அரிசி போன்ற பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது.

உரம், ஆற்றல், பாசனம் ஆகியவற்றுக்கு அதிக மானியம் இருந்தபோதிலும் விலை வீழ்ச்சி கடுமையான பாதிப்புகளை உண்டாக்குவதாய் அமைந்துள்ளது. இதுபோன்ற கொள்கை இடர்பாடுகளால் விவசாயிகளின் மொத்த வருவாயில் 2014-16 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 6 விழுக்காடு வருவாய் இழப்பை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற பெரிய பொருளாதார நாடுகளில் வேளாண் வருவாய் அதிகரித்துள்ளதாக பொருளாதாரக் கூட்டுறவு & மேம்பாட்டு நிறுவனம் கூறுகிறது.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மூன்றாவது சிக்கல் வளங்கள் நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் ஆகும். விலை வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்தும், மண் வளம் சரிந்தும் உள்ளது. இதுவும் விவசாயிகளின் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏற்கெனவே நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்துவிட்டது. தென்மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இருப்பு குறைந்துள்ளதின் காரணமாக நிலையான பாசன வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒழுங்கற்ற மழைப் பொழிவால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பருவ மாற்றம் தொடர்பான பிரச்சினைகளால் விவசாயிகளின் வருவாயில் 25 விழுக்காடு அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. மழைப் பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக உள்ளது.

இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது. விவசாயிகளைக் காக்க வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களும் விவசாயிகளைக் காக்கப் பயன்படவில்லை. தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு கிடைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் குறிப்பிட்ட அளவுதான் விவசாயிகளுக்குப் பயன்பட்டுள்ளது. ஆனாலும் பழைய சூத்திரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. இந்தச் சூத்திரம் கடந்த காலத்திலும் வெற்றிபெறவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் நடைபெறும் விவசாயப் போராட்டங்களில் நீங்களும் பங்கேற்பீர்களாக!

**நன்றி**: [லைவ் மிண்ட்](https://www.livemint.com/Politics/cjW8GmkZpCq8TzSpeDky0H/Why-farmer-protests-may-be-the-new-normal.html)

**தமிழில்**: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

**நேற்றைய கட்டுரை:** [குழந்தைகள் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் இருக்கிறதா?](http://www.minnambalam.com/k/2018/07/23/14)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *